பயமுறுத்த தான் குத்துனோம்.. செத்துடுவான்னு நினைக்கல சார்.. இளைஞர் கொலையில் குற்றவாளிகள் வாக்குமூலம்..!
சென்னை பெரவள்ளூரில் இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பயமுறுத்த கத்தியால் குத்தியதாகவும் கொலை செய்யும் எண்ணம் இல்லை எனவும் கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
சென்னை பெரவள்ளூர் அகரம் லோகோ ஒர்க்ஸ் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மூன்றாவது மகன் சந்துரு. வயது 26. இவர் டெக்கரேஷன் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மதியம் 3 மணி அளவில் சந்துருவும் அவரது நண்பர்களும் கொளத்தூர் எஸ்.ஆர்.பி கோவில் தெற்கு தெருவில் உள்ள மதுபான கூடத்தில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர்.
அப்போது சந்துருவின் நண்பரான அந்தோணி பால்ராஜ் என்பவரும் அதே மதுபான கடைக்கு மது அருந்த வந்துள்ளார். அன்று ரம்ஜான் என்பதால் அவரது நண்பர்கள் பிரியாணி கொடுத்துள்ளார்கள். அதனை கொண்டு வந்து ஒன்றாக அமர்ந்து அனைவரும் மது அருந்தி பிரியாணி சாப்பிட்டு உள்ளனர்.
மது அருந்திக் கொண்டிருந்த அந்தோணி பால்ராஜ் என்ற நபருக்கும் சந்துருவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்த நபர்கள் இரு தரப்பையும் விலக்கி விட்டுள்ளனர். சந்துரு அங்கிருந்த தனது நண்பர் சந்தோஷ் மற்றும் உடன்பிறந்த அண்ணன் சுரேஷ் ஆகியோருடன் தனது வீட்டின் அருகே உள்ள பார்க் பகுதிக்கு வந்து பேசிக் கொண்டிருந்தார்.
மாலை 6 மணி அளவில் லோகோ ஒர்க்ஸ் ரோடு அருகே உள்ள பார்க் பகுதிக்கு ஆட்டோவில் வந்த அந்தோணி பால்ராஜ். வினித் .விவேக் ஆகியோர் மீண்டும் சந்துருவை அழைத்து பேசியுள்ளனர். அப்போது அந்தோணி பால்ராஜ் சந்துருவிடம் சிகரெட் பிடிக்கலாம் வா என்று அவரை தனியாக அழைத்துச் சென்றுள்ளார்.
இதையும் படிங்க: பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் வக்கீல் சடலம்.. தலையில் பதிந்திருந்த அரிவாள்.. விருகம்பாக்கத்தில் பயங்கரம்..!
அப்போது அம்மா உணவக வாசலில் வைத்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சந்துருவை மார்பு மற்றும் இடது பக்க கன்னத்தில் சரமாரியாக வெட்டினார். கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து அவர் தப்பி சென்றார். அந்தோணி பால்ராஜ் உடன் வந்த வினித் மற்றும் விவேக் ஆகியோரும் உடனடியாக தாங்கள் கொண்டு வந்த ஆட்டோவில் ஏறி அங்கிருந்து சென்றனர். இதை சற்றும் எதிர்பாராத சந்துருவின் நண்பர் சந்தோஷ் மற்றும் சந்துருவின் உடன் பிறந்த அண்ணன் சுரேஷ் ஆகியோர் உடனடியாக சந்துருவை மீட்டு அருகில் உள்ள பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
சந்துருவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரவள்ளூர் உதவி கமிஷனர் செந்தில்குமார் பெரவள்ளூர் இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் இது குறித்து விசாரணை நடத்தினர். மேலும் தப்பிய ஓடியவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை பெரவள்ளூர் போலீசார் பெரவள்ளூர் லோகோ ஒர்க்ஸ் ரோடு பகுதியைச் சேர்ந்த விவேக்கை கைது செய்தனர் . இதனைத் தொடர்ந்து கோயம்பேடு அருகே அம்பத்தூர் சூரப்பேட்டை பாரதிதாசன் முதல் தெரு பகுதியைச் சேர்ந்த அந்தோணி பால்ராஜ், புளியந்தோப்பு கன்னிகாபுரம் வி.பி.என் காலனி பகுதியைச் சேர்ந்த வினித் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.
இதில் அந்தோணி பால்ராஜ் மீது ஏற்கனவே சில குற்ற வழக்குகள் உள்ளன. இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மதுபான கூடத்தில் உயிரிழந்த சந்துரு தொடர்ந்து அந்தோணி பால்ராஜ் என்ற நபரை கேலி கிண்டல் செய்து வந்ததாகவும் மேலும் மதுபான கூடத்தில் பிரியாணி சாப்பிடும் போதும் தகராறு ஏற்பட்டதாகவும் இதை மனதில் வைத்துக் கொண்டு தனது ஆட்டோவில் விவேக் மற்றும் வினித் ஆகிய இருவரை அழைத்து வந்து கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தோணி பால்ராஜ் சந்துருவை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி சென்றது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும் அந்தோணி பால்ராஜ் கூறுகையில் சந்துருவை பயமுறுத்தவே கத்தியால் குத்தியதாகவும் அவர் உயிர் இழப்பார் என நினைக்கவில்லை எனவும் கூறியுள்ளார் இதனை அடுத்து கைது செய்யப்பட்ட அந்தோணி பால்ராஜ், விவேக், வினித் ஆகிய மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த பெரவள்ளூர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். நண்பர்களுக்குள் மதுபான பாரில் ஏற்பட்ட சிறிய மோதல் கொலையில் முடிந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: நடுவானில் வெடித்த விமான டயர்.. ஊசலாடிய பயணிகளின் உயிர்.. விமானியின் திக்.. திக்.. நிமிடங்கள்..!