பொங்கல் வைக்க... சர்ச், மசூதிகளைத் திறந்து விட்ட சேட்டன்கள்..! மதங்களை கடந்த ஒற்றுமை..!
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் வைத்த பெண்களுக்கு, கிறிஸ்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகப் புகழ்பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வைக்கப்படும் பொங்கல் பண்டிகையில் லட்சக்கணக்கான கேரள பெண்கள் கலந்து கொண்டு வரிசையாக பொங்கல் வைப்பது வழக்கமான நிகழ்வாகும்.
இந்த முறை இந்த பொங்கல் நிகழ்ச்சிக்கு சாலைகளில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டதால் மசூதிகள் மற்றும் சர்ச்சுகளின் காம்பவுண்டு கேட்டுகள் திறக்கப்பட்டு ஹிந்து பெண்கள் இளைப்பாரிக் கொள்ள இடம் கொடுக்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சி ஏற்படுத்தியது.
கேரள தலைநகரில் உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் பண்டிகை புராணங்களில் வேரூன்றிய ஒரு இந்து சடங்கு. இதில், எதிர்பாராத வகையில் மதங்களை தாண்டிய ஒரு கூட்டணி உருவாகி பார்ப்பவர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.
இதையும் படிங்க: ரூ.8.36 லட்சம் கோடி மோசடி..! கிரிப்டோகரன்சி மோசடியாளர் இந்தியாவில் கைது..!
சமூக நல்லிணக்கத்தின் உண்மையான மகத்துவத்தை வெளிப்படுத்தும் ஆச்சரியமும் பிரமிப்பும் நிறைந்து காணப்பட்டது அந்த காட்சிகள்.
மனக்காடு ஜுமா மஸ்ஜித் என்ற உள்ளூர் பள்ளிவாசல், தனது மைதானத்தையும் வசதிகளையும் பக்தர்களுக்கு திறந்து விட்டது. புனித ஜோசப் பெருநகர பேராலயம் மற்றும் புனித தெரஸா ஆஃப் லிசியூ கத்தோலிக்க தேவாலயமும் தனது காம்பவுண்ட் கதவுகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து விட்டது.
இந்த சம்பவங்கள் மதங்களுக்கு இடையிலான ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது. பள்ளிவாசல் தனது வாகன நிறுத்துமிடத்தை இந்து பெண்கள் கொண்டு வந்த கார்களுக்கு வாகனம் நிறுத்துமிடமாக மாற்றி கொடுத்தது. ஓட்டுநர்களுக்கு உள்ளே ஓய்வெடுக்க இடம் அளித்தனர். மேலும் வெப்பமான சூரிய ஒளியில், ஆற்றுக்கால் பகவதி கோயிலின் தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்படும் இனிப்பு அரிசியில் பொங்கல் வைத்த பெண்களுக்கு கழிப்பறைகளும் குடிநீர் நிலையங்களும் அமைத்துக் கொடுத்திருந்தனர்.
இந்த கோயில் “பெண்களின் சபரிமலை” என்று அழைக்கப்படுகிறது. ஒரு பள்ளிவாசல் அதிகாரி, உள்ளூர் தொலைக்காட்சி சேனலிடம் பேசுகையில், கடமையில் உள்ள காவலர்களுக்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டதாக குறிப்பிட்டார். இது ஒவ்வொரு ஆண்டும் செய்யப்படும் உதவிகள் தான் என்று அங்கு வந்திருந்த பெண் பக்தர்கள் உறுதிப்படுத்தினர்.
ரம்ஜான் நோன்பு காரணமாக காலை உணவு இல்லை என்றாலும், மாலை நோன்பு முடிந்த பிறகு உணவு வழங்கப்பட்டது. அருகிலுள்ள புனித ஜோசப் பேராலயம், கடந்த ஆண்டு போலவே தண்ணீர், ஓய்வு இடங்கள் மற்றும் கழிப்பறைகளை வழங்கியது. புனித தெரஸா தேவாலயத்தைச் சேர்ந்தவர்கள், பக்தர்கள் கூட்டத்திற்கு மோர் பரிமாறினர்.
இந்த விருந்தோம்பல் மத எல்லைகளை கடந்து, கேரளாவெங்கும் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த பெண்களுக்கு நெகிழ்ச்சியும் பரவசத்தையும் ஏற்படுத்தியது.
இந்தியாவின் மிகப்பெரிய பெண்கள் மத நிகழ்வுகளில் ஒன்றான இந்த திருவிழா, திருவனந்தபுரத்தை மண் பானைகளும் தீவிர பிரார்த்தனைகளும் நிறைந்த கடலாக மாற்றியது.
இந்து,முஸ்லீம், கிறிஸ்தவர் என அனைத்து சமுதாயங்களும் சண்டை சச்சரவுகள் இன்றி ஒரு பண்டிகையை கொண்டாடி முடித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: குமரியில் கைவரிசை காட்டிய கேரள திருடர்கள்.. ஸ்கெட்ச் போட்டு பிடித்த தமிழக போலீஸ்.. வழுக்கி விழுந்ததில் கை முறிந்த சோகம்..