பாஜகவுடனான கூட்டணிக்கு எதிர்ப்பு... கட்சியை விட்டு விலகிய அதிமுக பிரமுகர்!!
பாஜகவுடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கிளை செயலாளர் பக்கீர் மைதீன் கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
திமுக தலைமையிலான திமுக கூட்டணி அரசு தமிழ்நாட்டில் நடந்து வருகிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்று 4 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் இன்னும் ஒரு ஆண்டு எஞ்சியிருக்கிறது. அதற்குள் தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதிமுக, பாரதிய ஜனதா கூட்டணி மீண்டும் அமைந்துள்ளது. தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதேபோல் மற்ற கட்சிகளும் கூட்டணி பேச்சு வார்த்தைகளை மறைமுகமாக நடத்தி வருகிறது.
கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக பாஜக உடனான கூட்டணியில் இருந்து விலகி தனி அணி அமைத்த அதிமுக, மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. பாஜக உடன் அதிமுக கூட்டணி அமைக்க முடிவு செய்திருப்பதை அதிமுக நிர்வாகிகள் பலரும் விரும்பவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் பாஜக உடன் கூட்டணி அமைப்பதாக அறிவித்ததைக் கண்டித்து, அதிமுகவில் இருந்து விலகுவதாக நாகை மாவட்டம் தெத்தி ஊராட்சியைச் சேர்ந்த அதிமுக கிளை செயலாளர் பக்கீர் மைதீன் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தவெக தலைவர் விஜயுடன் ஓ.பன்னீர்செல்வம் கூட்டணியா? வெளியான பரபரப்பு தகவல்!!
சிறுபான்மை சமூகமான இஸ்லாமியர்களை பழிவாங்கும் பாஜகவுடன் கூட்டணி அமைத்தற்காக, 53 ஆண்டுகள் கால கட்சிப் பணியில் இருந்து விலகுவதாக அதிமுக கிளை செயலாளர் பக்கீர் மைதீன் கடிதத்தில் தெரிவித்துள்ளார். அதிமுக கிளை செயலாளர் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் கனத்த இதயத்தோடு விலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்தவர் கே.எஸ். முகமது கனி அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதிமுக சிறுபான்மை பிரிவு ஆலங்குடி நகர செயலாளராக பொறுப்பு வகித்து வந்தவர் முகமது கனி.
அதிமுக, பாஜவுடன் கூட்டணி வைத்து இருப்பதை ஏற்க மறுத்து, முகமது கனி அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். அதற்கான கடிதத்தை அக்கட்சியின் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான விஜபாஸ்கருக்கு பதிவு தபால் மூலம் அனுப்பியுள்ளார். அதிமுக தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்ததோடு தமிழகத்துக்கு நிதி ஒதுக்காமல், தமிழக வளர்ச்சிக்கு எதிராக பல்வேறு சட்டங்களை கொண்டு வந்த பாஜவோடு அதிமுக கூட்டணி வைத்ததில் உடன்பாடு இல்லாததால் ராஜினாமா செய்ததாக அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அதிமுகவை மிரட்டி கூட்டணிக்குள் வரவைத்துள்ளனர்.. பாஜக மீது செல்வப்பெருந்தகை பகீர் குற்றச்சாட்டு!!