அதிமுக எம்எல்ஏக்கள் கேட்டது என்ன..? தமிழக அமைச்சர்கள் கூறியது என்ன..?
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற வினாவிடை நேரத்தில் பல்வேறு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறைசார் அமைச்சர்கள் பதில் அளித்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற வினாவிடை நேரத்தில் பல்வேறு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறைசார் அமைச்சர்கள் அளித்த பதில்களின் சுருக்கத்தை இப்போது பார்க்கலாம்..
காட்டுமன்னார்கோயில் எம்எல்ஏ சிந்தனைச்செல்வன் கேள்விக்கு அமைச்சர் மா.சுப்ரமணியன் பதில் தந்தார். ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் காவலர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது பல்நோக்கு மருத்துவமனைகளில் தற்காலிக பணியாளர்களாக காவலர், நிர்வாக உதவிப் பணியாளர்கள் உள்ளனர். ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாதுகாப்புக்காக சிசிடிவிக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சங்கரன்கோவிலில் புதிதாக கட்டப்பட்டு வரும் மருத்துவமனையில் தனி காசநோய் மையம் அமைக்கப்படும். 48 நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனங்கள் மூலம் காசநோய் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
காசநோய் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்காக ரூ.12.96 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வெறிநாய் கடிக்கு மருந்து உள்ளதா என காங்கிரஸ் உறுப்பினர் செல்வபெருந்தகை கேள்வி. நாய்க்கடி, பாம்புக்கடி மருந்துகள் 2,286 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இரண்டை ஆண்டுகளாக இருப்பில் உள்ளது. சுகாதாரத்துறையில் வாடகை கட்டங்களில் செயல்படும் 1,500 கட்டடங்களை சொந்த கட்டடமாக மாற்றித்தர விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதையும் படிங்க: அதிமுக இரட்டை இலைச் சின்னம் விவகாரம்... சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கு..!
ரேஷன் கடை புகார் பெட்டி மூலம் எத்தனை புகார்கள் வந்துள்ளன? புகார் பெட்டிகளை மக்களுக்கு தெரியுமாறு வைக்க வேண்டும் என உறுப்பினர் ராஜேஷ்குமார் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி, புகார் பதிவேடுகள் மூலம் 97,535 புகார்கள் வந்துள்ளதாகவும் புகார் பெட்டிகள் மூலம் 875 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், 1967 மற்றும் 1800-4245-901 ஆகிய கட்டணமில்லா எண்களில் ரேஷன்கடைகள் குறித்து நுகர்வோர்கள் புகார் அளிக்கலாம் என்று அவர் சுட்டிக்காட்டினார். புகார் பதிவேடு, புகார் பெட்டிகளை மக்களுக்கு தெரியும் வகையில் வைக்குமாறு அறிவுறுத்தல் வழங்கி உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். ரேஷன் கடைகளில் கைரேகை வைப்பதில் சிக்கல் இருந்தால் அந்த புகாரை உடனுக்குடன் சரிசெய்கிறோம் என்று அவர் கூறினார். ரேஷன் கடைகளில் பிராண்ட்பேண்ட் சேவைகளை தடையின்றி விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சக்ரபாணி உறுதி அளித்தார்.
எதிர்கட்சி எம்எல்ஏக்கள் விடுதிக்கு செல்ல போதுமான வசதிகள் செய்து தரப்படவில்லை என அதிமுக எம்எல்ஏக்கள் பேரவையில் குற்றச்சாட்டினர். பேரவை முடிவதற்கு 2 நிமிடங்கள் முன்னதாகவே பேருந்துகளை நிறுத்த வேண்டும் என அதிமுக எம்எல்ஏக்கள் வலியுறுத்தினர். சட்டப்பேரவை முடிவதற்கு முன்னதாகவே பேருந்தை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் பதில் அளித்தார். பேரவை முடிந்ததும் நானே நின்று பேருந்தில் அனுப்பி வைக்கிறேன் என்றபோது அவையில் சிரிப்பலை ஏற்பட்டது. வாணாபுரம் - கள்ளக்குறிச்சி பேருந்து சேவைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஆரணியில் இருந்து சென்னைக்கு நேரடி பேருந்து சேவை கோரிக்கை குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் பதில் கூறினார்.
திருவாரூரில் மூன்று துணைமின்நிலையங்கள் இந்தாண்டு தொடங்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி ஒன்றுக்கு பதில் தந்தார். திருப்பூர் காளிபாளையத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்கப்படுமா என எம்எல்ஏ விஜயகுமார் கேள்வி எழுப்பினார். முதல்கட்டமாக கால்நடை கிளை நிலையம் அமைக்கப்படும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பதில் அளித்தார்.
இதையும் படிங்க: கலாய்க்கும் துரைமுருகன்… திமுகவுக்கு எதிராக வெடிக்கும் வேல்முருகன்: ஆட்டி வைக்கிறதா அதிமுக..?