வரலாம்.. வரலாம் வா..! டெல்லியை அடுத்து பீகாருக்கு குறி வைக்கும் மோட்டா பாய்..! 225க்கு இலக்கு..
டெல்லியை அடுத்து பீகாருக்கு குறி வைக்கும் மோட்டா பாய்..! 225க்கு இலக்கு
தலைநகர் டெல்லியில் பாஜக வரலாறு காணாத வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக அறுதி ப்பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கிறது. 15 ஆண்டுகள் காங்கிரசின் ஷீலா தீட்சித்தும் கடந்த பத்து ஆண்டுகளாக ஆம் ஆத்மியின் அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் அதிஷி மெர்லினா ஆகியோர் 26 வருடங்களாக முதலமைச்சர்களாக இருந்தனர்.
கடந்த 26 வருட காலத்தில் எவ்வளவு முட்டி மோதிப் பார்த்தும் பிஜேபியால் டெல்லியில் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. ஆனால் தற்போது பலவிதமான சக்கர வியூகங்களை வகுத்து தலைநகர் டெல்லியில் ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது பாஜக. டெல்லி வெற்றி சூடு அடங்குவதற்குள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜகவின் முக்கிய தலைவர்கள் பீகாரின் மீது கண் வைக்க தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பீகார் மாநிலத்தில் பாஜக ஆதரவோடு ஜே.டி.யு தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது நித்திஷ் குமார் முதலமைச்சராகவும் பாஜகவினர் அமைச்சர்களாகவும் உள்ளனர். மத்தியில் உள்ள NDA ஆட்சிக்கு நிதீஷ் குமாரின் ஆதரவு தேவைப்படுவதால் அவரை அனுசரித்து. அதே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான சீட்டுக்களை பீகாரில் வெற்றி பெரும் வழிகளை தற்போதே தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இன்று டெல்லியில் நடந்தது.... 2026 இல் வங்காளத்தில் நடக்கும்..! அடித்து சொல்லும் சுவேந்து அதிகாரி
பீகாரில் நான்கு ஆண்டுகள் ஆட்சி நிறைவடைந்துள்ள நிலையில், இந்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தமுள்ள 243 சட்டமன்ற தொகுதிகளில் பாஜக 90 சதவீதத்திற்கு மேல் அதாவது 225 க்கு மேற்பட்ட இடங்களை வெல்ல வேண்டுமென தீர்மானித்துள்ளது. இந்த வெற்றி கணக்கு பாஜக தலைமையிலான கூட்டணி கட்சிகளோடு சேர்ந்து இருக்கும் என கூறப்படுகிறது.
நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாரதியஜனதாகட்சி, ராம் விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான் கட்சி, முன்னாள் முதலமைச்சர் மாஞ்சி உள்ளிட்ட பல கட்சியினர் ஒன்று கூடி பீகாரில் தேர்தலை சந்திக்க உள்ளனர். எதிர்தரப்பிலோ காங்கிரஸ், லாலு பிரசாத்தின் ராஷ்டிய ஜனதா தளம், அகிலேஷ் யாதவவின் சமாஜ்வாடி கட்சி, மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் என எதிர்த்தரப்பும் மிக வலுவான கூட்டணியாக உள்ளது.
லாலு பிரசாத் யாதவியின் மகன் தேஜஸ்வி யாதவ் தற்போது மக்களிடையே மிகுந்த செல்வாக்கை பெற்றிருப்பதால் வெற்றி அவ்வளவு எளிதாக இருக்காது என்பது பாஜகவுக்கு நன்கு தெரியும். இதனை கருத்தில் கொண்டு தேர்தல் வியூகங்கள் அமைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. டெல்லியில் 70 க்கு 48 இடங்களில் அமோக வெற்றி பெற்ற நிலையில் அதே போன்று பீகாரிலும் 225 இடங்களுக்கு மேல் நிச்சயம் வெல்ல வேண்டுமென அமித்ஷா தலைமையில் முடிவெடுத்திருக்கிறார்களாம்.
இது குறித்து கருத்து தெரிவித்த ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர்கள் பீகாரில் பாஜக வெல்வது ஒன்றும் சுலபமான விஷயம் அல்ல. பாஜகவிற்கு இங்கு மக்கள் எதிர்ப்பு அதிகம் உள்ளது என்றும் ஜார்க்கண்ட் முடிவுகளை அவர்கள் பார்க்க வேண்டும் என்றும் கூறுகின்றனர். எனவே பாஜகவின் கனவு பகல் கனவாக தான் முடியும் என்றும் ஆர் ஜே டி கட்சியினர் கூறுகின்றனர்.
ஆனால் பாஜக தரப்பில் அந்த கட்சியின் எம்எல்ஏவும் முன்னாள் துணை முதல்வரும் ஆன தர்கிஷோர் பிரசாத் கூறுகையில் 100% அடுத்த ஆட்சியும் NDA தலைமையிலான ஆட்சி தான் பீகாரில் என தீர்க்கமாக கூறியுள்ளார்.
எது எப்படியோ, வருடம் முழுவதும் பாஜக தேர்தல் வியூக நிபுணர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் ஏதோ ஒரு மாநிலத்தில் தேர்தல் சூட்டு பரபரப்போடு இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.
இதையும் படிங்க: பெண்ணுக்குத் தவறு செய்தால் கடவுள் நிச்சயம் தண்டிப்பார்..! கேஜ்ரிவால் குறித்து சுவாதி மாலிவால் பேட்டி