இந்தக் கட்சியுடன் மட்டும்தான் கூட்டணி… அறிவித்தார் நாதக சீமான்..!
அதிமுகவும் இருந்தாலும் சரி, திமுகவாக இருந்தாலும் சரி... ரெண்டும் ஒன்றேதான். பார்ட்டி சேஞ்ச் தானே தவிர, நோ பாலிசி சேஞ்ச்.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில், வக்ப் திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணாமலை குறித்து பேசும்போது''என் தம்பியாக இருந்தாலும், தங்கச்சியாக இருந்தாலும் பதவியில் இருந்து மாற்றுவது அந்த கட்சி முடிவு. அது என் கட்சி இல்லை. அவர்கள் கட்சியினுடைய விதி, அதன்படி அவர்கள் இயங்குவார்கள். அதில் கருத்துச் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. அது அநாகரிகம்'' என்றார்.
அதிமுக- திமுக குறித்து பேசிய அவர், '' அந்தக் கட்சி, இந்த கட்சிகள் என்றெல்லாம் பிரித்து பார்க்க முடியாது. இந்த இருகட்சிகளுக்கும் ஆட்சி அமைக்க இந்த மண்ணின் மக்களுடைய வாக்குகள் தான் குறி. அதுதான் முக்கியமாக இருக்கிறது. என்னுடைய வார்த்தை, என்னுடைய உணர்வு, எங்களுடைய உரிமை அதைப்பற்றி அவர்களுக்கு கவலை கிடையாது.
இதையும் படிங்க: இளம்பெண் தற்கொலைக்கு காரணமான இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்..! சீமான் வலியுறுத்தல்..!
அதிமுகவும் இருந்தாலும் சரி, திமுகவாக இருந்தாலும் சரி... ரெண்டும் ஒன்றேதான். பார்ட்டி சேஞ்ச் தானே தவிர, நோ பாலிசி சேஞ்ச். இந்த கொடியில் அண்ணா இருக்க மாட்டார். அதிமுக கொடியில் இருப்பார். இங்கேயும் இருட்டு, அங்கேயும் இருட்டு. அங்கேயும் மின்தடை, இங்கேயும் மின்தடை. இங்கேயும் ஊழல், அங்கேயும் ஊழல். இங்கேயும் கஞ்சா, அங்கேயும் கஞ்சா. இங்கேயும் சாராயம், அங்கேயும் சாராயம். இங்கேயும் கொலை, கொள்ளை. அங்கேயும் கொலை, கொள்ளை. வன்முறை கற்பழிப்பு எல்லா கருமமும் ஒன்றுதான்.
இங்கேயும் மலையை வெட்டுவான். அங்கேயும் மலையை வெட்டுவான். இங்கேயும் மணலை விற்றுத் தின்பான். அங்கேயும் மணலை விற்றுத் தின்பான். அவர்கள் வந்தாலும் கச்சத்தீவை மீட்க போராடுவார்கள். இவர்கள் வந்தாலும் கட்சித்தீவை மீட்க போராடுவார்கள். அவர்கள் வந்தாலும் நாங்கள் டாஸ்மாக்கை மூடவும் என்பார்கள். வந்த பிறகு வாயை மூடுவார்கள். பார்டி சேஞ்ச் மட்டும்தான். ஆனால் கொள்கை மாறுதல் இல்லை. அதனால் தான் எங்கள் பெருந்தலைவர் தாத்தா காமராஜ் இது இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டை தான் என்று சொல்லிவிட்டு போய்விட்டார். அந்த மட்டைகளை பிரித்து நார் நாராக கிழிப்பதற்கு தான் நாங்கள் இங்கே வந்திருக்கிறோம்'' என்றார்.
செய்தியாளர்கள், தனித்து போட்டியா? கூட்டணி வைக்கும் வாய்ப்பு இருக்கா? என்று எழுப்பிய கேள்விக்கு, சீமான் கூறுகையில், ''வாய்ப்பு இருக்கு, நீ ஒரு கட்சி ஆரம்பித்தால் நாம் இருவரும் கூட்டணி வைக்கலாம். ஒரே ஒரு கட்சி உடன் தான் கூட்டணி வைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அது அமெரிக்க அதிபர் டிரம்ப் கட்சி. எத்தனை காலத்துக்கு இதையே கேள்வி கேட்பீர்கள்.
பா.ஜ.க நெருக்கடிக்கு அதிமுக அடி பணிந்து இருக்கிறது என்ற குற்றச்சாட்டு சொல்லப்படுகிறது? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ''குற்றச்சாட்டு இருக்கா? அதில் நான் என்ன சொல்வதற்கு இருக்கு... கூட்டணி குறித்து முடிவு எடுக்க வேண்டியது அதிமுக அதன் தலைவர்கள். எல்லாத்துக்கும் நாம் கருத்து சொல்வது கண்ணியமாகவோ, நாகரீகமாகவோ இருக்காது'' எனறு தெரிவித்தார்.
இதையும் படிங்க: புனித வெள்ளியன்று மதுக்கடைகளை மூட வேண்டும்..! சீமான் வலியுறுத்தல்..!