அண்ணாமலையார் மீது அமெரிக்கர்களுக்கு இவ்வளவு பக்தியா ..நமசிவாய மந்திரத்தை பாடியவாறு சாமி தரிசனம் ..!
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் அமெரிக்க பக்தர்கள் தியானம் மேற்கொண்டு நமசிவாய மந்திரத்தை பாடியவாறு சாமி தரிசனம் செய்தனர்
திருஅண்ணாமலையார் கோயில் என்றும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் என்றும் அறியப்படும் தலம் சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும்.திருவாசகத் திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையினையும் கொண்ட தலமாகும்.இத்தலத்தின் மூலவர் அருணாசலேசுவரர் என்றும், அம்பிகை உண்ணாமுலையாள் என்றும் அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் உள்ள மலை எல்லா யுகங்களிலும் அழியாமல் இருப்பதாகவும், இம்மலையானது சிவபெருமானே என்றும் சைவர்கள் நம்புகிறார்கள். இதனால் இம்மலையை வலம் வருதலைக் கடைபிடிக்கின்றனர். இவ்வாறு மலையை வலம் வருதல் கிரிவலம் என்று அழைக்கப்படுகிறது.
பல்வேறு நகரங்களிலிருந்தும் ஊர்களிலிருந்தும் எண்ணற்ற சித்தர்கள் இந்நகருக்கு வந்து வாழ்ந்து சமாதியடைந்துள்ளார்கள். அவர்களில் ரமணர், சேசாத்திரி சாமிகள், விசிறி சாமிகள், குரு நமச்சிவாயர், குகை நமச்சிவாயர் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களின் சமாதிகள் கிரிவலப் பாதையில் அமைந்துள்ளன. திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். கார்த்திகை தீப திருவிழாவில் 2,668 அடி உயர, அண்ணாமலையார் மலை உச்சியில், மஹா தீபம் ஏற்றப்படும் இத்தகைய சிறப்பு மிக்க திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் அமெரிக்க பக்தர்கள் தியானம் மேற்கொண்டு நமசிவாய மந்திரத்தை பாடியவாறு சாமி தரிசனம் செய்தனர்.
அமெரிக்க நாட்டைச் சேர்ந்த யோகா ஆசிரியை ஹனா (எ) வீவனி தலைமையில் 25 அமெரிக்க ஆன்மீக பக்தர்கள் கடந்த சில தினங்களாக ஆன்மீக சுற்றுலா சென்று வரும் சூழலில் மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயில் சாமி தரிசனம் செய்து பின்னர் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு வந்தனர். திருக்கோவிலுக்கு தமிழ் பாரம்பரிய உடைகள் அணிந்து வந்த அவர்கள் முன்னதாக திருக்கோவிலில் உள்ள பெரிய நந்தி அருகில் குழுவாக அமர்ந்து நமசிவாய பாடலை பாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தனர். தொடர்ந்து ஆயிரம் கால் மண்டபத்திற்கு உள்ளே சென்று அங்குள்ள ஆயிரம் தூண்களையும், தூண்களில் உள்ள கற் சிற்பங்களை ஆச்சரியத்துடன் கண்டு வியந்து கற் சிற்பங்கள் குறித்து விவரமாக கேட்டறிந்தனர்.
தொடர்ந்து ரமண பகவான் தியானம் செய்த பாதாள லிங்கத்திற்கு சென்று சாமி தரிசனம் செய்த அவர்கள் வரிசையில் நின்று அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனையும் தரிசனம் செய்து பின்னர் 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் மேற்கொண்டனர்.
அமெரிக்க ஆன்மீக பக்தர்கள் அண்ணாமலையார் திருக்கோவிலில் குழுவாக அமர்ந்து நமசிவாய மந்திரத்தை பாடியதுடன் திருக்கோவிலில் பல்வேறு இடங்களில் அமர்ந்து தியானம் மேற்கொண்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
இதையும் படிங்க: பெண் காவலரின் கணவர் தூக்கு ... மகன்சாவில் மர்மம்.. கதறும் தாய்