இரட்டை இலை சின்னம் முடக்கமா.? ஈபிஎஸ் தரப்புக்கு பிரஷரை எகிற வைக்கும் பெங்களூரு புகழேந்தி.!
அதிமுக விவகாரம் தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள வரை எடப்பாடி பழனிச்சாமிக்கு பொதுச்செயலாளர் பதவியைப் பயன்படுத்தவும் அதிகாரமும் இல்லை என்று அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த பெங்களூரு புகழேந்தி கூறினார்.
அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க விதிக்கப்பட்டிருந்த தடையை சென்னை உயர் நீதிமன்றம் நீக்கியது. இதையடுத்து புகழேந்தி இன்று செய்தியாளர்களைச் சென்னையில் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அதிமுக உட்கட்சி விவகாரம் பற்றி விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு எல்லா உரிமைகளும் உண்டு. தேர்தல் ஆணையம் விசாரித்து அதில் முடிவெடுக்கலாம். ஏனெனில் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டிய அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்குத்தான் இருக்கிறது. இதைத்தான் எங்கள் வாதமாக வைத்தோம்.
இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் அருமையான தீர்ப்பை வழங்கியிருக்கிறது. அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு இருந்த தடை நீக்கப்பட்டுவிட்டது. இனி எந்தத் தடையும் இல்லை. எனவே, இனி அதிமுக விவகாரத்தில் தேர்தல் ஆணையம் முடிவு செய்யும். உரிமையியல் வழக்கு நிலுவையில் உள்ள வரை பழனிசாமிக்கு எந்த அதிகாரமும் இல்லை. பொதுச் செயலாளர் என்கிற பதவியையும் பயன்படுத்தக் கூடாது. அதிமுக கட்சியின் பெயரையும் பயன்படுத்தக் கூடாது. எனவே, பழனிச்சாமி இனி ஊர் உலகையும், ஊடகங்களையும் ஏமாற்ற வேண்டாம். இனி நாங்கள் தேர்தல் ஆணையத்தை நோக்கிச் செல்வோம்.
இதையும் படிங்க: செங்கோட்டையனுக்குத் தெரியாமல் எடப்பாடியார் செய்த ஒரே ஒரு காரியம்... ஒட்டுமொத்த அப்செட்டுக்கும் காரணம் இதுவா?
என்னுடைய நோக்கமெல்லாம் எம்ஜிஆர் கொடுத்த இரட்டை இலை சின்னத்தை முடக்குவது அல்ல. பழனிசாமி என்கிற தீயசக்தியிடம் அந்தச் சின்னம் இருக்கக் கூடாது என்பதுதான் என் நோக்கம். ஜெயலலிதா மறைந்த பிறகு 4 வருடம் அதிமுக ஆட்சி ஜெயலலிதான் காரணம். அவர் உயிரிழக்காமல் இருந்திருந்தால், பழனிசாமி முதல்வராக ஆகியிருக்கவே முடியாது. ஜெயலலிதாவை புதைத்தோம். ஆனால், அவர் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். அவருடைய புகழை மறைக்கவும் புதைக்கவும் நினைக்கும் துரோகிகளுக்கு பாடம் புகட்டாமல் விட மாட்டோம்” என்று புகழேந்தி தெரிவித்தார்.
இதையும் படிங்க: செங்கோட்டையனுக்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம்..!அதிரடி ஆக்சன் எடுத்த போலீஸ்