×
 

தொடைநடுங்கி திமுக அரசு... அண்ணாமலை ஆவேசம்...!

பாஜவினரை வீட்டுச்சிறையில் வைத்த திமுக அரசை தொடைநடுங்கி என காட்டமாக விமர்சித்துள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை.

முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்க இருந்த பாஜக நிர்வாகிகளை திமுக அரசு வீட்டுச்சிறையில் வைத்திருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டி உள்ளார். தொடைநடுங்கி திமுக அரசு என்று அவர் காட்டமாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக தன்னுடைய எக்ஸ் தளத்தில் அண்ணாமலை விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது..

திமுக அரசின் ரூ.1,000 கோடி டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து, தமிழக பாஜக சார்பில், இன்று சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகைப் போராட்டம் அறிவித்திருந்தோம். தொடைநடுங்கி திமுக அரசு, மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் ஆளுநருமான, அக்கா திருமதி தமிழிசை சௌந்தரராஜன், மாநிலச் செயலாளர் சகோதரர் திரு வினோத் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகளைப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என, வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறது. 

இதையும் படிங்க: முற்றுகையிட புறப்பட்ட தமிழிசை சௌந்தரராஜன் கைது.. வாரண்ட் இருக்கிறதா என தமிழிசை வாக்குவாதம்..!

பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பசைபோட்டு ஒட்டியது போல இருக்கும் ஆட்களைக் கொண்டு, கீழ்மட்டத்தில் இருக்கும் அதிகாரிகளை உங்கள் ஏவலுக்குப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள். ஜனநாயக ரீதியாகப் போராட்டம் அறிவித்து, முற்றுகை தேதியை முன்னரே அறிவித்ததால்தானே, உங்களால் இதுபோன்ற கோழைத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட முடிகிறது? தேதியே அறிவிக்காமல், திடீரென்று ஓருநாள், நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்?

இவ்வாறு அந்த பதிவில் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

கடந்த 7-ந் தேதி தமிழக டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டர். அதில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருக்க வாய்ப்பு உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். அப்போது முதல் டாஸ்மாக் விவகாரத்தை மிகத் தீவிரமாக கையில் எடுத்துக் கொண்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக அரசை விமர்சித்து வருகிறார். 

வெறும் ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமல்ல, ஆண்டுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு திமுகவினர் இதில் முறைகேடு செய்து வருவதாக அவர் குற்றங்சாட்டி வருகிறார். இதே கருத்தையே தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் கூறிவருகின்றனர்.

இந்நிலையில், டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக தமிழக பாஜக போராட்ட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதன்படி இன்று காலை டாஸ்மாக் தலைமை அலுவலகத்திற்கு எதிரே தமிழக பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அண்ணாமலை கூறியிருந்தார். ஆனால் இதற்கு முன்னதாகவே தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக அவர் குற்றஞ்சாட்டி உள்ளார். தமிழக அரசியலிலும், எதிர்வரும் தேர்தல் களத்திலும் டாஸ்மாக் விவகாரம் பெரும் புயலைக் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: டாஸ்மாக் முறைகேடு.. திமுக வசமாக சிக்கிக் கொண்டுவிட்டது.. குஷியில் பாஜக..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share