அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசிய விவகாரம்.. தலைமறைவாக இருந்த விஜயராணி கைது.. 4 மாத தேடுதல் முடிவுக்கு வந்தது..!
அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசிய புகாரின் அடிப்படையில் கடந்த 4 மாதமாக தேடி வந்த பாஜக நிர்வாகி விஜயராணியை தனிப்படை அவரது உறவினர் வீட்டில் வைத்து கைது செய்தனர்.
தமிழகத்தில் கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த சமயத்தில், ஃபெஞ்சால் புயல் உருவானது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக விழுப்புரம், கடலூர், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்ததால் அப்பகுதிகள் முழுக்க வெள்ளக்காடாக மாறின. அதிலும், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம், கடந்த டிசம்பர் மாத துவக்கத்தில் பெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட அதீத கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் கடுமையான பாதிப்பை சந்தித்தது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் பகுதியில் பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் மலட்டாறில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மலட்டாறு கரையோரமாக உள்ள மக்கள் பெரும் இழப்பை சந்தித்தனர்.
இதனால் சுந்தரேசபுரம், சித்தலிங்கமடம், டி.எடையார், திருவெண்ணெய்நல்லூர், தொட்டிக்குடிசை, சின்னசெவலை, மழவராயனூர், அரசூர், இருவேல்பட்டு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு அடிப்படை வசதிகள் கூட தரவில்லை என குற்றம்சாட்டினர். முறையாக நிவாரண உணவும் வழங்கவில்லை யெனவும் கூறினர். இந்நிலையில் நிவாரணப் பொருட்கள் வழங்கவும் மழை வெள்ளம் குறித்து ஆய்வு செய்யவும் அமைச்சர் பொன்முடி இருவேல்பட்டு கிராமத்துக்குச் சென்றார். அவருடன் விழுப்புரம் மாவட்ட அப்போதைய கலெக்டர் பழனி, முன்னாள் எம்.பி. பொன். கவுதம சிகாமணி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட அரசு அதிகாரிகள் சென்றனர்.
இதையும் படிங்க: அசைக்கக்கூட முடியாது... மத்திய அரசுக்கு அமைச்சர் பொன்முடி நேரடி சவால்...!
இருவேல்பட்டு கிராமத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் பொன்முடி பார்வையிட்டு நிவாரண உதவிகள் செய்தார். அப்போது அவர் மீது சிலர் சேற்றை வாரி வீசியதால் போலீசார் பரபரப்பாகினர். அமைச்சரின் வெள்ளை வேட்டி சட்டை முழுவதும் கரையானது. அமைச்சரையும், முன்னாள் எம்.பி. பொன். கவுதம சிகாமணியையும் உடனே போலீசார் பத்திரமாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இதையடுத்து அமைச்சர் மீது சகதியை வீசியவர்களை கண்டறியும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். போலீசரின் தீவிர விசாரணையில் பாஜக நிர்வாகிகளான ராமகிருஷ்ணன், விஜயராணி ஆகிய இருவர் அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி இரைத்தது தெரிந்தது.
இதையடுத்து இருவேல்பட்டு கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் ராமர் என்கிற ராமகிருஷ்ணன், பா.ஜ.க. நிர்வாகி விஜயராணி (வயது 37) ஆகிய இருவர் மீதும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் வழக்கு பதிவு செய்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் சிறப்பு படை அமைக்கப்பட்டு இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் 20ம் தேதி தலைமறைவாக இருந்த பாஜக பிரமுகர் ராமகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் அமைச்சர் மீது சகதியை வீசிய வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜ மகளிரணி முன்னாள் துணை தலைவி விஜயராணி, கடந்த 4 மாதமாக தலைமறைவாக இருந்தார். அவரை நேற்று இரவு போலீசார் கைது செய்தனர். திருவெண்ணெய்நல்லூரில் அவரது உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த போது, பாஜக பிரமுகரான விஜயராணியை சுற்றி வளைத்து கைது செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனிடையே பாஜ பிரமுகர் விஜயராணி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பாஜகவினர் காவல்நிலையத்தில் கூடி வருகிறார்கள்.
இதையும் படிங்க: எங்க ஊருக்குள்ளேயே வந்து விடுவாயா..? ம.செ-வை மிரட்டிய அமைச்சர்- அறிவாலயம் கதவை தட்டிய பஞ்சாயத்து..!