ஓபிஎஸிடம் ஓவர் நெருக்கம் காட்டும் எடப்பாடி டீம்... அந்த நாளுக்காக காத்திருக்கும் பாஜக...!
இபிஎஸ் மட்டுமின்றி அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் ஓபிஎஸ் மற்றும் அவர் ஆதரவு எம்எல்ஏக்களிடம் இடைவெளியை கடைபிடித்தனர்.
நெல்லிக்காய் மூட்டைகளை அவிழ்த்தது போல் ஆளுக்கொரு மூலையாய் அதிமுக தலைவர்களும் தொண்டர்களும் சிதறி கிடப்பதாக கூறப்பட்டாலும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சி வலுபெற்று ஓரளவுக்கு திடமாகி வருகிறது. இருப்பினும் ஒன்றுபட்ட அதிமுக தலைமையில் தான் வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளதாக நீக்கி வைக்கப்பட்ட சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் அவ்வப்போது பேசி வருகின்றனர். மக்களவை தேர்தலில் தென்மாவட்டங்களில் அதிமுக அடைந்த தோல்விக்கு ஒற்றுமை இல்லாததே காரணம் என சொல்லப்பட்டதிலிருந்தே, பல தலைவர்களும் பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க சொல்லி வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
பாஜக தேசிய தலைமையும் ஒன்றுபட்ட அதிமுகவை உருவாக்கி, தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் அதனை இணைத்து தேர்தலை சந்திக்க விரும்புவதாக சொல்லப்படுகிறது. இதற்காக பல கட்ட தூது நடவடிக்கைகளும் நடைபெற்றதாக காற்று வாக்கில் செய்திகள் பரவிய வண்ணம் உள்ளன. இந்நிலையில் தான் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் இபிஎஸ்-க்கு எதிராக மறைமுக போர்க்கொடி தூக்கி இருக்கிறார்.
இதையும் படிங்க: அதிமுகவை அழிக்கும் ஈகோ... செங்கோட்டையன்தான் சீனியர்- உற்சாகத்தில் ஓ.பி.எஸ்
செங்கோட்டையனை சமாதானப்படுத்தும் முயற்சியில் மூத்த நிர்வாகிகள் ஈடுபட்டுள்ள நிலையில் புதிய திருப்பமாக ஓபிஎஸ் தரப்புடன் அதிமுகவினர் சகஜமாக பழகுவது பலரையும் புருவத்தை உயர்த்த வைத்திருக்கிறது. இபிஎஸ் - ஓபிஎஸ் பிரிவுக்கு பின்பு சட்டப்பேரவையில் இருவரும் சண்டை போட்டு கொண்ட மாமியார் மருமகளை போல் முகத்தை திருப்பி கொண்டது ஊர் அறிந்த விஷயம். இபிஎஸ் மட்டுமின்றி அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் ஓபிஎஸ் மற்றும் அவர் ஆதரவு எம்எல்ஏக்களிடம் இடைவெளியை கடைபிடித்தனர். இந்நிலையில் திடீர் திருப்பமாக நடப்பு பட்ஜெட் கூட்ட தொடரில் ஓபிஎஸ்-இபிஎஸ் டீம் எம்.எல்.ஏ.க்கள் ஒருவருக்கொருவர் ஆதரவு குரல் கொடுத்துக் கொள்வதையும், முகம் மலர்ந்து சிரிப்பதையும் பார்க்க முடிகிறது.
சபாநாயகருக்கு எதிராக அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்திருந்த போது, அதற்கு ஆதரவாக ஓபிஎஸ் மற்றும் அவர் தரப்பு எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். இதைப்போல செங்கோட்டைனும் அந்த தீர்மானத்திற்கு ஆதரவு தந்தார். இது மட்டுமல்லாமல் அவையில் நிதியமைச்சரோடு கடன் வாங்குவது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருந்த போது அவருக்கு ஆதரவாக ஓ.பன்னீர்செல்வம் பேசியது கவனம் பெற்றது. இந்நிலையில் சட்டப்பேரவையில் ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏவான முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்திடம் அதிமுக எம்எல்ஏக்கள் சிரித்து பேசி கொண்டதும், உடுமலை ராதாகிருஷ்ணன் போன்ற மூத்த தலைவர் வைத்தியலிங்கத்திடம் பேசியதும் அரசியல் வட்டாரத்தை கவனிக்க வைத்துள்ளது. இதில் கூடுதல் விஷயம் என்னவென்றால், கடந்த சில நாட்களுக்கு முன்தான் வைத்தியலிங்கத்தை சசிகலாவும் தினகரனும் சந்தித்து ஆலோசனை நடத்தியது.
குறிப்பிடத்தக்கது ஒன்றுபட்ட ஆதிமுகாவை உருவாக்க வேண்டும் என தொடர்ந்து கூறி வரும் ஓபிஎஸ் தனது சகாக்களுடன் ஆதிமுகாவில் இணைவதற்கு முயற்சித்து வருவது ஊர் அறிந்த விஷயம். ஆனால் ஓபிஎஸ் இடம் அதிமுகவினர் நெருக்கம் காட்டினாலும் அதே நாளில் கட்சி கொரோடாவான எஸ்பி.வேலுமணியின் செயல் உற்று நோக்க வைத்துள்ளது. துணை கேள்வி கேட்பதற்காக ஓபிஎஸ் சபாநாயகரிடம் சென்று அனுமதி கேட்டபோது கொரோடாவிடம் ஒப்புதல் பெறுமாறு கூறியுள்ளார். அதுமட்டுமின்றி சபாநாயகரே வேலுமணியை கையசைத்து வரச் சொன்னபோது எஸ்.பி.வேலுமணி செல்ல மறுத்து கண்சாடையிலேயே பதிலளித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து ஓபிஎஸ் அங்கிருந்து சென்ற பிறகு, சபாநாயகரிடம் சென்ற எஸ்.பி.வேலுமணி ஓபிஎஸ் பேச தாம் எப்படி ஒப்புதல் கொடுக்க முடியும். தேவையில்லாமல் இதில் என்னை இழுக்க வேண்டாம் என கராராக கூறிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம் ஓபிஎஸ் அதிமுகவில் மீண்டும் சேர முனைப்பு காட்டினாலும், எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோர் அவரை மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்கு இப்போதைக்கு தயாராக இல்லை என்றே கூறப்படுகிறது. ஆனால் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற ஓபிஎஸ், வி.கே.சசிகலா, டிடிவி தினகரனை மீண்டும் இபிஎஸ் டீமுடன் இணைத்து, அந்த கூட்டணியை தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைக்கும் நாள் எப்போது என பாஜக துடித்துக் கொண்டிருக்கிறதாம்.
இதையும் படிங்க: வேளாண் அறிக்கை இல்ல, வெத்துவேட்டு அறிக்கை... திமுகவை சாடிய ஓ.பி.எஸ்..!