×
 

BLACK WARRANT - திகார் ஜெயிலின் கதை.... இணையத்தைக் கலக்கும் புதிய தொடர்....

நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் கடந்த 10-ந் தேதி வெளியான தொடர் BLACK WARRANT...

நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் கடந்த 10-ந் தேதி வெளியான தொடர் BLACK WARRANT. வெளியான நாள்முதல் அதிகம் பேரால் விரும்பி பார்க்கப்படும் இந்திய வெப்சீரிஸாக இது உருவெடுத்துள்ளது. 1981-ல் டெல்லி திகார் சிறைச்சாலையில் அதிகாரியாக பணியில் சேர்ந்த சுனில்குமார் குப்தா என்பவர் தன்னுடைய திகார் அனுபவங்களை சில ஆண்டுகளுக்கு முன்னர் BLACK WARRANT- CONFESSIONS OF A TIHAR JAILER என்ற பெயரில் புத்தகமாக எழுதியிருந்தார். அதனை அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் விக்ரமாதித்ய மோத்வானே எழுதி இயக்கி உள்ளார்.

இந்தியாவில் குற்றச்செயல்களுக்கு வழங்கப்படும் உச்சபட்ச தண்டனை என்பது தூக்கு தண்டனையாகும். 1947 முதல் 1967 வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூக்கு தண்டனைகள் இந்தியாவில் வழங்கப்பட்டன. இந்திய பிரிவினையின் போது நடைபெற்ற கலவரங்களில் ஈடுபட்டோருக்கு அதிகம் இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு மரணதண்டனை குறித்த விவாதங்கள் மிகுந்த பேசுபொருளாகின. 

இதையும் படிங்க: 'மதகஜராஜா'வுக்கு வரவேற்பு.. இது ஓர் அதிசயம்.. திக்குமுக்காடும் நடிகர் விஷால்!

அதனை மீறி சமூகத்தின் கூட்டு மனசாட்சியை உலுக்கும் வழக்குகளில் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. அவை பெரும்பாலும் டெல்லி திகார் சிறையில் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக 1980-களில் திகார் சிறையில் அடுத்தடுத்து தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்போது அங்கு சிறைத்துறை அதிகாரியாக பணியாற்றிய சுனில் குமார் குப்தா அந்த சம்பவங்களை புத்தகமாக எழுதி வெளியிட அது இப்போது வெப்சீரிசாக எடுக்கப்பட்டுள்ளது. 

உண்மைச சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்டுள்ளதால் முதலில் நாம் அதிர்ந்து போவது இதன் வசனங்களைக் கேட்டுத்தான்.. இந்தியில் நொடிக்கு ஒரு கெட்டவார்த்தை, தமிழில் டப்பிங் செய்யப்படும்போது இதனை முடிந்த அளவு தவிர்த்து உள்ளார்கள். அப்படியிருந்தும் பச்சைபச்சையாய் கெட்ட வார்த்தைகள், ஒரு அகராதி போடுமளவுக்கு. ஏனெனில் சிறையில் உள்ளவர்கள் தங்களின் அன்றாட உரையாடலாய் இவ்வாறு தான் பேசுகிறார்கள் என்று காட்டுகிறார்கள். ஒருவேளை இருக்கலாம். அவர்களுடன் பழகி காவல்துறை அதிகாரிகளும் கெட்ட வார்த்தைகளை அருவி போல் கொட்டுகிறார்கள்.

தமிழில் வடசென்னை போன்ற படங்களில் சிறையை தத்ரூபமாக காட்டியிருப்பார்கள். அதனைவிடவும் ஒருபடி மேலே திகார் சிறையை இந்த தொடரில் காட்டி உள்ளார்கள் என்று கூறலாம். நவீன சிறைச்சாலையாக மாறுவதற்கு முன்னர் இருந்த பழைய திகார் சிறையை மீண்டும் அப்படியே உருவாக்கி உள்ளார்கள். அதன் நெருக்கடி, புழுக்கம், வீச்சம், இருள் போன்றவற்றை பார்க்கிற நம்மாலேயே உணரக் கூடிய விதத்தில் கலை இயக்குநரும், ஒளிப்பதிவாளரும் புகுந்து விளையாடி உள்ளனர். 

சிறைக்குள் இருக்கும் மூன்று முக்கிய ரவுடி கும்பல்கள் அவர்களுக்கு இடையே நடக்கும் போட்டிகள் ஆகியவை அச்சத்தை விளைவிக்கக் கூடியதாய் உள்ளன. உண்மையில் அக்காலகட்டத்தில் விசாரணைக் கைதிகளாய் சென்று சிக்குண்டவர்கள் எதிர்கொண்டிருக்கக் கூடிய வலியும், வேதனையும் சொல்லிமாளாது. 

சுனில் குமாராக ஜஹான் கபூர் நடித்துள்ளார். உயரம் குறைவான தோற்றத்தோடு, அச்சம் நிரம்பிய முகத்தோடு அறிமுகமாகும் காட்சியில் இருந்து தன்னுடைய புத்தி சாதுர்யத்தால் திகார் சிறையில் பல்வேறு மாற்றங்களை முன்னெடுக்கும் அதிகாரியாக உயர்வது வரை அபார நடிப்பு.. தாஹியா மற்றும் மங்கட் கதாபாத்திரத்தில் வருபவர்களும் சிறப்பான தேர்வு. இவர்களை விட டிஎஸ்பி ராஜேஷ் தோமர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ராகுல் பட் , அட்டகாசமான அமர்க்களமான தேர்வு. அதேபோன்று சார்லஸ் சோப்ராஜ் வேடத்தில் நடித்துள்ள சித்தார்த் நடிப்பும் அபாரம்.. 

சென்னை மத்திய சிறைச்சாலையும் இதுபோன்ற எண்ணற்ற கதைகளை தன்னகத்தே கொண்ட வரலாற்றை உடையது தான். இங்கும் இதுபோன்ற அருமையாக கதைகளை திரைப்படங்களாக எடுக்க முடியும். வெறும் கமர்ஷியல் என்பதை தாண்டி வாழ்வியலோடு கலந்த கதைகளை மக்கள் புறக்கணிக்க மாட்டார்கள் என்பதற்கு இந்த BLACK WARRANT ஒரு உதாரணம்.

இதையும் படிங்க: மீண்டும் இணையும் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி.. வடசென்னை - 2ஆக இருக்குமா? என ரசிகர்கள் எதிர்பார்ப்பு...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share