’பாடி கட்டாத லாரியில் லோடு ஏற்ற முடியுமா’? - விஜய் முன் உள்ள சிக்கல்...தப்ப முடியுமா?
தவெகவை ஆரம்பித்த விஜய் ஆட்சியை பிடிக்கும் எண்ணத்தில் இருந்தாலும் அடிப்படை கட்டமைப்பு எதுவும் கட்சியில் இல்லை. போராட்டம், செய்தியாளர் சந்திப்பு என்று எதுவுமில்லாமல், தகுதியில்லாத தலைவர்களை வைத்து கட்சியை நடத்த நினைக்கும் விஜய் முன் உள்ள சவால் என்ன?
தமிழக அரசியல் களத்தில் இருக்கும் கட்சிகளோடு இன்னொரு கட்சியாக தவெக ஆரம்பிக்கப்பட்டது. கட்சியை ஆரம்பித்த நோக்கம் தனக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும், அதற்காக கட்சி ஆரம்பிக்கிறேன். மற்ற அரசியல் கட்சிகள் போல் அல்ல, எங்கள் பாதை வேறு, வழக்கமான எக்ஸ்ட்ரா லக்கேஜாக நான் இருக்க மாட்டேன். மக்கள் பக்கத்தில் நான் இருப்பேன் என்றெல்லாம் விஜய் பேசினார்.
தனது அரசியல் எதிரிகள் யார்?, யார்? என்பதை தெளிவாக சொன்னார் விஜய். அந்த மாநாடு முடிந்தவுடன் விஜய் வேகமெடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எவ்வித நடவடிக்கையும் இல்லை. வழக்கம் போல் தனது கடைசிப்பட ஷூட்டிங்குக்கு விஜய் போய்விட்டார். கட்சிக்கு மாநில நிர்வாகிகள், வியூக அமைப்பாளர், கட்சி அணிகள் என அடிக்கட்டமைப்பு வலுவாக இருந்தாலும் செயல்பாடு என்று வரும்போது அதை கவனிக்கும் இடத்தில் இருந்த விஜய் எனக்கென்ன என்று இருந்துவிட்டார். விளைவு பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தன்னைச்சுற்றியே கட்சி இயங்க வேண்டும் என்று செயல்பட, மற்ற நிர்வாகிகள் வழக்கம் போல் வாய்மூடி மவுனமாகி விட்டனர்.
புஸ்ஸி ஆனந்த் ஒரு அதிகார மையம், வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி ஒரு அதிகார மையம் என இயங்க இருவருக்கும் உள்ள ஒற்றுமை ஆரம்பத்தில் சரியாக இருந்தது. ஆனால் அதிகாரம், வருமானம் பார்க்கும் விவகாரம் இருவருக்கும் இடையிலான ஈகோ யுத்தமாக வெடித்து ஆடியோ வெளிவரும் அளவுக்கு ஆகிவிட்டது. விஷயம் கை மீறி போனதால் விஜய் தரப்பு விசாரணையில் இறங்க புஸ்ஸி ஆனந்தின் வசூல் வேட்டை, ஆதரவாளர்களுக்கு பதவி, தகுதியானவர்களுக்கு தடை என்கிற செயல்பாடு கட்சி அணியையே முடக்கி போட்டுள்ளதையும் அறிந்துக்கொண்டார்.
மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் குறித்து தான் உத்தரவிட்டும், நடைமுறையில் அது செயலுக்கு வராமல் போனதையும் நிர்வாகிகள் மூலம் அறிந்துக்கொண்டார் விஜய். கட்சிக்கு புதுவரவுகளை வர விடாமல் தடுத்த புஸ்ஸி ஆனந்த் கட்சியின் அடுத்தக்கட்ட வளர்சிக்கு தடை, அதே நேரம் ஜான் ஆரோக்கியசாமியும் தன் பங்குக்கு குழி பறித்ததும் விஜய் அறிந்துக்கொண்டார். அதற்கான நடவடிக்கையில் அவர் இறங்கினாரா? இன்னும் கேள்விக்குறிதான்.
இதெல்லாம் சரி இன்னும் ஓராண்டே உள்ள நிலையில் கட்சி அணிகள் அமைக்கபடாத நிலையில் தேர்தலில் வெற்றி என்பது சாத்தியமா? ஆனானப்பட்ட கட்சிகளே தேர்தலில் தடுமாறும்போது கட்சியை மன்றம் போல், நலத்திட்ட உதவி வழங்கும் மையமாக மாற்றி வைத்துள்ள புஸ்ஸி ஆனந்த், வெங்கட்ராமன் வகையறாக்களை வைத்து என்ன செய்ய முடியும் என்கிற சவால் விஜய் முன் உள்ளதாக அரசியல் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.
உடனடியாக ஓராண்டுக்குள் கட்சி அணிகளை அமைத்து, சாதக பாதகம் பார்த்து பலப்படுத்தி இரண்டு பெரிய கட்சிகளுக்கு இணையாக தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெற முடியுமா? என்பது விஜய் முன் உள்ள முதல் பெரும் சவால். இந்த சவாலை சந்திக்க மாவட்டந்தோறும் நிர்வாகிகள் பலமாக இருக்க வேண்டும். மாற்று கட்சிகள், காவல்துறை, கள நிலவரம் அறிந்து அரசியல் செய்ய தெரிந்த மாவட்ட நிர்வாகிகள் இருக்க வேண்டும். தேர்தல் நேரத்தில் தேர்தல் செலவு, நிதியை கொண்டு வருதல், மற்ற கட்சிகளுடன் சரிக்கு சமமாக இயங்குவது முக்கியம்.
ஆட்சியை பிடிப்போம் என்கிற நோக்கத்துடன் களத்தில் குதித்துள்ள தவெக அதற்கு ஏற்ப தன்னை தகவமைத்துள்ளதா? என்றால் ஏமாற்றம் தான். 10% கூட தேர்தலுக்கு தயார் இல்லாத நிலை. புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகளின் செயல்பாடின்மை, புஸ்ஸி ஆனந்த் செய்து வைத்துள்ள டேமேஜ், ஜான் ஆரோக்கியசாமியின் பொறுப்பற்ற நடவடிக்கையால் கட்சிக்கு ஏற்பட்டுள்ள டேமேஜ் உள்ளிட்டவற்றை சரி செய்ய வேண்டுமானால் விஜய் அவர்களை தள்ளி வைக்க வேண்டும். ஆனால் புஸ்ஸி ஆனந்தை தள்ளி வைத்து புதிதாக ஒரு நிர்வாகியை கொண்டு வந்து செயல்பட வைத்தால், கீழே உள்ள ரசிகர்கள், தொண்டர்கள் என்னதான் விஜய்யின் முடிவு என்றாலும் கட்டுப்படுவார்கள் என்பது கடினமான காரியம். நிச்சயம் புஸ்ஸி ஆனந்தும் வேலையை காட்டுவார்.
ஜான் ஆரோக்கியசாமியை இத்தனை பிரச்சனைக்கு பிறகும் வைத்திருந்தால் மீண்டும் கோஷ்டி பிரச்சனையால் கட்சிக்கு சிக்கல், அவரை நீக்கினால் அந்த இடத்தில் உடனடியாக ஒருவரை நியமித்து அவர் நிலைமையை புரிந்து, மாநில நிர்வாகிகள் ஒத்துழைத்து இயங்க வேண்டும். இதற்கெல்லாம் காலம் இடம் கொடுக்க வேண்டும். இன்னும் ஓராண்டே உள்ள நிலையில் தனித்து போட்டியிடும் நிலையில் விஜய் இதையெல்லாம் செய்வதற்கு கால அவகாசம் இல்லை.
இதையும் படிங்க: நீங்க முடிவு பண்ணிட்டு வாங்க பிறகு பார்க்கலாம்....தவெகவுக்கு மூத்த அரசியல் ஆலோசகர்கள் நிபந்தனை
இதெல்லாம் விஜய் முன் உள்ள முக்கிய சவால். இதை களைய நிர்வாகிகள் நியமனத்தில் நேரடி தலையீடு, புஸ்ஸி ஆனந்தை முழுமையாக செயல்பட விடாமல் கட்சியை தானே முன்னின்று கண்காணிப்பது, ஜான் ஆரோக்கியசாமிக்கு மாற்றாக ஆதவ் அர்ஜுன் போன்றோரை கட்சிக்குள்ளோ அல்லது வெளியிலிருந்தோ வியூகம் அமைக்க அழைப்பது சரியாக இருக்கும். அரசியல் ஆலோசகர்கள், மாற்றுக்கட்சியிலிருந்து இணைபவர்கள் விஷயத்திலும் விஜய் துணிந்து முடிவெடுக்க வேண்டும்.
இவையெல்லாவற்றையும் தாண்டி தனித்து போட்டியிட்டால் அனுபவமில்லா நிர்வாகிகளை வைத்து கட்சியை வைத்து தேர்தலை சந்திப்பது ’துடுப்பு இல்லா படகு’டன் பயணம் செய்வது போல் தான். அதை உணர்ந்து அதிமுகவுடன் இணைந்து களம் காண்பது அல்லது காங்கிரஸ் உள்ளிட்ட திமுக தோழமை கட்சிகளை இணைத்து களம் காணுவதே சிறப்பு. இதிலும் உள்ள சாதக பாதகம் தனி கட்டுரையாக வருகிறது.
ஆகவே தற்போது கட்சி உள்ள நிலை ’பாடிகட்டாத லாரி’ போன்றது. ’பாடிகட்டாத லாரியை வைத்து எப்படி லோடு ஏற்ற முடியாதோ’ அதேபோல் கட்டமைப்பு இல்லாத கட்சியை வைத்தும் கரை சேர முடியாது. அது அடிப்படையையே அழித்துவிடும் விஜய் புரிந்துக்கொள்வாரா?