டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை நோக்கி பயணம்..! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!
ஒரு ட்ரில்லியன் டாலர் என்ற இலக்கை நோக்கி தமிழ்நாடு வலிமையோடு பயணித்துக் கொண்டிருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் செய்தி குறிப்பு ஒன்றை முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அதில், 2024-25 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சி விகிதம் 9.69% என்பது, கடந்த 10 ஆண்டுகளில் மாநிலத்தின் அதிகபட்ச வளர்ச்சியைத் தவிர, நாட்டிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது என கூறப்பட்டுள்ளது.
நிலையான விலையில் 2023-24 ஆம் ஆண்டில் 15,71,368 கோடியாக மதிப்பிடப்பட்ட தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியின் (ஜிஎஸ்டிபி) மதிப்பு, 2024-25 ஆம் ஆண்டில் 17,23,698 கோடியாக உயர்ந்துள்ளது, இதற்கு முன் 2017-18ல் 8.59% ஆக இருந்தது. கோவிட்-19 தொற்றுநோய் பரவிய ஆண்டான 2020-21 இல் மிகக் குறைந்த அளவாக 0.07% என பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், குறைந்த பட்சம் தமிழ்நாடு நேர்மறையான வளர்ச்சியை மீண்டும் பதிவு செய்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சு..! எங்க தலைவர் அத சொல்லல.. மறுக்கும் சேகர்பாபு..!
2024-25 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் பெயரளவு வளர்ச்சி விகிதம் 14.02% ஆகும், இது மாநிலங்களிலேயே மிக அதிகமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.மூன்றாம் நிலை, இரண்டாம் நிலைத் துறையைப் பொறுத்தவரை, உற்பத்தி மற்றும் கட்டுமானம் முறையே 8% மற்றும் 10.6% வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவை பகிர்ந்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், 9.69% வளர்ச்சியுடன் தமிழ்நாடு இந்தியாவிலேயே மிக அதிக விகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது என கூறியுள்ளார்.
அதுவும் பாலின சமத்துவம், அனைத்துப் பகுதிகளுக்கும் சமமான வளர்ச்சி என அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் தொடர்ந்து கவனம் செலுத்தி இந்தச் சாதனையை நாம் எட்டியுள்ளோம் என்பதுதான் மிகவும் பாராட்டுக்குரியது என தெரிவித்தார். அடிப்படைகளில் உறுதி, நிலையான நிர்வாகம், தெளிவான தொலைநோக்கு ஆகியவற்றைக் கொண்டு நம் மாநிலம் மற்றும் மக்களின் எதிர்காலத்தை திராவிட மாடல் வடிவமைத்து வருகிறது என்றும் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் எனும் நம் பேரிலக்கை நோக்கி வலிமையோடும் உறுதியோடும் விரைந்து கொண்டிருக்கிறோம் எனவும் பெருமிதம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சொத்து வரியை உயர்த்தி பாமர மக்களை வஞ்சிக்காதீங்க.. ஜி.கே.வாசன் வலியுறுத்தல்..!