×
 

விஜய் சொன்னது போலவே நடந்துடுச்சு... கார்த்தி சிதம்பரம் விமர்சனத்தை தொடங்கி வைச்சுட்டாரு!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிராகப் பேசுவதாக காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை தொகுதி எம்.பி.  கார்த்தி சிதம்பரம் காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "காரைக்குடியில் வளர் தமிழ் நூலகத்தை  முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இதற்காக அவருக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். முதல்வர் வருகை என்பது மாவட்டத்துக்கு நல்லது. அப்போதுதான் அதிகாரிகள் மக்கள் பணிகளில் வேகமாக செயல்படுவார்கள். சிவகங்கை மாவட்டத்தில் கால்நடை மருத்துவக் கல்லூரி அமைக்க முதல்வரிடம் கோரிக்கை வைக்க இருக்கிறோம்.

சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கோமியம் குடிப்பதை பற்றி பேசியது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. கோமியம் குடிப்பது பழமையான மத நம்பிக்கையாக இருக்கலாம். அதற்காக விஞ்ஞானத்துக்கு அப்பாற்பட்டதையெல்லாம் கூறக் கூடாது. தமிழக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் தீர்வு காணாவிட்டால், உச்ச நீதிமன்றமே தீர்வு காணும் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. ஆளுநர் ஆர்.என். ரவியின் மனநிலையைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை.



சென்னையில் தற்போது உள்ள விமான நிலையம் மோசமாக உள்ளது. சர்வதேச விமான நிலையம் என்று கூற முடியாத அளவுக்கு அது உள்ளது. விமான நிலையத்தை வைத்துதான் நாட்டின் வளர்ச்சியைக் கூற முடியும். அதனால், சென்னைக்கு புதிதாக நவீன விமான நிலையம் நிச்சயம் தேவை. நீண்ட நாட்களுக்கு பிறகு மத்திய, மாநில அரசுகள் ஒற்றுமையுடன் முடிவு செய்த நடவடிக்கையை வேண்டாம் என்று கூறுவது விஜய்க்கு நல்லதல்ல. அவர் தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிராக பேசுகிறார். விமான நிலையம் பற்றி மாநில நிதி அமைச்சர் தெளிவாக விளக்கி கூறியுள்ளார். அதைப் புரிந்துகொள்ள வேண்டும்.” என்று கார்த்தி சிதம்பரம் கூறினார்.

நடிகர் விஜய் தலையிலான தவெக, இண்டியா கூட்டணியில் இணைய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் விஜய் தமிழக வளர்ச்சிக்கு எதிரானவர் என்று காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். இத்திட்டத்தை எதிர்த்தால் தன்னை வளர்ச்சிக்கு எதிரானவன் என்று கதைக் கட்டுவார்கள் என பரந்தூரில் விஜய் பேசியிருந்தார். அதுபோலவே விஜயை கார்த்தி சிதம்பரம் விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: “அதையும் நீங்களே சொல்லிட்டுங்கண்ணா” - திமுகவை அடுத்து விஜய்யை ரவுண்ட் கட்டும் பாஜக! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share