×
 

இன்னொரு அயோத்தி ஆகிறதா திருப்பரங்குன்றம்..? 144 தடை உத்தரவு போட வேண்டிய அவசியம் ஏன்..?

அயோத்தி பாபர் மசூதி விவகாரம் போல் தென்னிந்தியாவில் மதுரை திருப்பரங்குன்றத்திலும் பிரச்சனை தலை தூக்கி உள்ளது. இந்த விவகாரம் நாடமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

இந்து - இஸ்லாமியரின் மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கும் இடங்களில் முருகனின் அறுபடை வீடுகளில் முதல்படைவீடான திருப்பரங்குன்றத்திற்கு முக்கிய இடமுண்டு. ஏனெனில் மலையடிவாரத்தில் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலும், மலைமீது சிக்கந்தர் தர்கா பள்ளிவாசலும் அமைந்துள்ளது இதன் சிறப்பம்சங்களில் ஒன்றாகும். 

இந்நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் சிக்கந்தர் தர்கா பள்ளிவாசலில் ஆடு,கோழி உள்ளிட்ட விலங்குகள் படையலிடப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட எம்.பி.நவாஸ்கனி, தனது நண்பர்களுடன் சென்று அங்கு அசைவ உணவு உட்கொண்டார். இது கடும் சர்ச்சைக்கு வித்திட்டது. இதன்பின்னர் ஜனவரி 17-ந் தேதி கந்தூரி விழா நடைபெற்றது. அதில் பங்கேற்க சென்ற பக்தர்கள் ஆடு, கோழி உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்கின்றனரா என சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். எனவே பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த ஆடுகளை தோளில் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதையடுத்து திருப்பரங்குன்றம் மலையின் புனிதம் கெடுக்கப்படுவதாக கூறி இந்து அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட தொடங்கினர். பதிலுக்கு தங்கள் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுவதாக கூறி இஸ்லாமிய அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் திருப்பரங்குன்றத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட போவதாக இந்து அமைப்பினர் அறிவிப்பு வெளியிட்டனர். இதற்கு தமிழக பாஜகவும் ஆதரவு தெரிவித்தது. பதற்றத்தைத் தணிக்க மதுரை மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி முதல் இன்று நள்ளிரவு 12 மணி வரை 144 தடை உத்தரவை பிறப்பித்து ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டார். திருப்பரங்குன்றம் மலைஏறவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: #BREAKING நெற்பயிர் சேதமானதால் விரக்தி- விவசாயி விஷமருந்தி தற்கொலை!

ஆட்சியரின் உத்தரவையடுத்து மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகைளைச் சேர்ந்த இந்து அமைப்பினர் மற்றும் பாஜக நிர்வாகிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டனர். அதேபோன்று பழனியில் இருந்து மதுரை நோக்கி புறப்பட்ட பாஜகவினர் அங்கு வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். காவடிகளுடன் திருப்பரங்குன்றம் நோக்கி வந்த ஒருசிலரை மதுரை பேருந்து நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். திருப்பரங்குன்றம் விவகாரம் கோவையிலும் எதிரொலித்தது. அங்கு பாஜகவினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து பேசிய பாஜக தேசிய செயலாளர் வானதி சீனிவாசன், திருப்பரங்குன்றம் மலை முருகனின் படைவீடு என்பது அனைவருக்கும் தெரியும். அப்படி இருந்தும் ஒருசிலர் மலைக்கு பச்சை நிற பெயிண்ட் அடித்து இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக குற்றஞ்சாட்டினார். மேலும் ஜனநாயகரீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயலும் பாஜகவினருக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும், யாரோ ஒருசிலரை திருப்திபடுத்த திமுக அரசு முயல்வதாகவும் அவர் சாடினார். 

அயோத்தி பாபர் மசூதி விவகாரம் இந்திய அரசியல் மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்த ஒன்று. வடஇந்தியாவில் தான் இத்தகைய நிகழ்வுகள் நடைபெறும் என்று நினைத்திருந்த வேளையில், தமிழ்நாட்டில் அத்தகையதொரு அசம்பாவிதம் நடந்து விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது திருப்பரங்குன்றம் விவகாரம்.. இதில் அரசும், அரசியல் கட்சியினரும், பக்தர்களும், பொதுமக்களும் நிதானித்து செயல்பட்டு மதநல்லிணக்கத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
 

இதையும் படிங்க: பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு... எங்கள சீண்டாதீங்க... கொதித்தெழுந்த அண்ணாமலை! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share