ஆறு மாதங்களுக்கு முன்பு காணாமல் போன கூலி தொழிலாளி.. மண்டை ஓடு கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு..
திருப்பத்தூர் அருகே கூலி தொழிலாளி ஒருவர் ஆறு மாதங்களுக்கு முன்பு காணாமல் போன நிலையில் தற்போது அவரது மண்டை ஓடு காப்பு காட்டில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த காரப்பட்டு பகுதியை சேர்ந்தவர் முரளி. கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முரளி வேலைக்கு செல்வதாக கூறி வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். அதன் பிறகு முரளி வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
இவரை தேடிப் பார்த்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் எங்கேயாவது வேலைக்கு சென்றிருப்பார் என்று நினைத்துவிட்டனர். இந்நிலையில் இன்று காரப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட கருங்குட்டை என்ற காப்புக் காட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அடையாளத்துடன் மண்டை ஓடு கிடப்பதாக ஆடு மேய்த்த நபர்கள் கிராம மக்களிடம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக உமராபாத் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த உமராபாத் காவல் துறையினர் காப்புக்காட்டில் கிடந்த மண்டை ஓடு, சட்டை மற்றும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டவரின் துணி, காலணி ஆகியவற்றை கைப்பற்றினர்.
இதையும் படிங்க: மனைவியிடம் அத்துமீறல்.. RCB வெற்றியை கொண்டாட அழைத்துச் சென்று கதையை தீர்த்து கட்டிய நண்பர்கள்..
பின்னர், 6 மாதங்களுக்கு முன் காணாமல் போன முரளியின் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது முரளியின் காலணி மற்றும் மண்டை ஓடு என்பது தெரிய வந்தது. இதை அறிந்ததும் முரளியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
இதையடுத்து மண்டை ஓடு, எலும்பு மற்றும் காலணி ஆகியவற்றை உமராபாத் காவல் துறையினர் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அங்கிருந்து மரபணு சோதனைக்காக சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக உமராபாத் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து முரளி தற்கொலையா அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பாட்டியை கல்லால் தாக்கி கொலை செய்த பேரன்.. போலீசார் விசாரணை..!