டிஐஜி சஸ்பெண்ட் செய்யப்பட்டது அருமை.. அரசை பாராட்டிய நீதிமன்றம் ..
அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் பலாத்கார வழக்கு, பாலியல் புகாருக்குள்ளான டி.ஐ.ஜி தற்காலிக பணி நீக்கம் செய்தது போன்ற , தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
பணியிடங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் துன்புறுத்தல்களை கருத்தில் கொண்டு பல்வேறு பரிந்துரைகளை மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா வழங்கியிருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது குறுக்கிட்ட நீதிபதி மஞ்சுளா, காவல் துறையில் டி.ஐ.ஜி அந்தஸ்தில் உயர் பொறுப்பில் உள்ள காவல்துறை அதிகாரி மீது பாலியல் புகார் வந்ததை அடுத்து உடனடியாக அவரை தமிழக அரசு தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகம்மது ஜின்னா, காவல்துறை இயக்குநர் அந்தஸ்தில் இருந்த அதிகாரி மீதான புகார் மீதான வழக்கில், அந்த அதிகாரிக்கு மூன்று ஆண்டு காலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். மேலதிகாரிகள் மீது புகார் தெரிவித்தால் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் பெண்கள் தற்போது புகார் கொடுக்க முன்வருகிறார்கள்.
இதையும் படிங்க: தாது மணல் கொள்ளைக்கு ஆப்படித்த நீதிமன்றம்..! ரூ. 5,832 கோடி வசூல்.. சிபிஐக்கு மாற்றியது செல்லும்..!
பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபடுகிற ஆசிரியர்கள் மீது கிரிமினல் வழக்குகள், துறை ரீதியான நடவடிக்கைகள் மட்டுமின்றி அவர்களுடைய கல்வி சான்றிதழ்களும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளதையும் சுட்டிக்காட்டினார். அரசின் தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகளால் தற்போது, பலரும் அச்சமின்றி புகார் தெரிவிக்க முன்வருகிறார்கள் என்றார்.
அப்போது நீதிபதி " அண்ணா பல்கலைகழகம் பாலியல் குற்றச்சாட்டில் காவல்துறையினர் எடுத்த விரைவு நடவடிக்கைகள், டி.ஐ.ஜி அந்தஸ்தில் இருக்கக்கூடிய அதிகாரி என பாராமல் அவரை தற்காலிக பணி நீக்கம் செய்ய விரைந்து நடவடிக்கை எடுத்த தமிழக அரசின் செயல்பாடு பாராட்டுக்குரியது என்றார்.
மேலும், மத்திய மாநில அரசின் விழிப்புணர்வு நடவடிக்கைகளால் பெண்கள் அச்சமின்றி தைரியமாக வேலைக்கு செல்லுகிற நிலையை உருவாக்க வேண்டும். பாலின உணர்திறன் மேம்பட நிதி ஒதுக்க வேண்டும். வேலைசெய்யும் இடங்களில் அமைந்திருக்ககூடிய உள் புகார் குழு ( internal complaints committee) விவரங்களையும் இணைய தளத்தில் பதிவேற்ற வேண்டும். பணியிடத்தில் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை தடை சட்டத்தின் அடிப்படையில் விதிகள் குறித்த அறிக்கையையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை மார்ச் 3ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
இதையும் படிங்க: இலங்கை துணை தூதரகத்திற்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்றம்..