×
 

பட்ஜெட்டில் தமிழகம் பெயர்கூட இல்லை.. மோடி அரசுக்கு எதிராக பொங்கிய திமுக.. அதிரடியாக கட்சியினருக்கு உத்தரவு..!

பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரைக் கூட உச்சரிக்காமல் தமிழ்நாட்டுக்கு அநீதி இழைத்த மோடி அரசைக் கண்டித்து கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடத்த திமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

2025ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை  நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்.1இல் தாக்கல் செய்தார். கடந்த ஆண்டு மோடி அரசு அமைந்த பிறகு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், ஆந்திரா, பீகார் மாநிலங்களுக்கு அதிக அளவிலான நிதி ஒதுக்கீடு , திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், இந்த ஆண்டு பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, அங்கு புதிய விமான நிலையம், பாட்னா ஐஐடி விரிவாக்கம், தொழிற்சாலைகள், வேளாண் திட்டங்கள் என்று பட்ஜெட்டில் தாராளம் காட்டப்பட்டுள்ளது.

மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் பங்கு முக்கியமானது. இதனால் பீகாருக்கு பாஜக அரசு முக்கியத்துவம் அளிப்பதாக கூறப்படுகிறது. இதனால் எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக சாடி வருகின்றன. இது இந்திய நாடு முழுமைக்குமான பட்ஜெட்டா, பீகாருக்கான பட்ஜெட்டா என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு என்கிற பெயர்கூட உச்சரிக்கப்படவில்லை என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் திமுக சார்பில் கண்டனப் பொதுக்கூட்டங்களை மாநிலம் முழுவதும் நடத்த அக்கட்சி தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஓரவஞ்சனையான நிதிப் பகிர்வு, தமிழ்நாட்டின் முக்கியத் திட்டங்கள் புறக்கணிப்பு, தமிழ்நாடு முதலமைச்சரின் தொடர்ச்சியான கோரிக்கைகளுக்குப் பிறகும், எஸ்.எஸ்.ஏ. பேரிடர் மேலாண்மை ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்காதது, ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரைக் கூட உச்சரிக்காதது என நிதிநிலை அறிக்கையிலும் தமிழ்நாட்டுக்கு அநீதி இழைத்த மோடி அரசைக் கண்டித்து வருகிற பிப்ரவரி 8, சனிக்கிழமை, மாலை தமிழ்நாடு முழுவதும் கழகம் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும்  "கண்டன பொதுக்கூட்டம்" நடைபெறும்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சீனாவுக்கு வரி செலுத்தும் இந்தியா... மக்களவையில் பகீர் கிளப்பிய ராகுல் காந்தி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share