திமுக ஒரு முதலாளித்துவ கட்சி... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பாய்ச்சல்.. ஆ.ராசா Vs பெ.சண்முகம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்தே தனது அதிரடி கருத்துக்களால் பரபரப்பு கூட்டி வருகிறார்..
பெ.சண்முகம். அதுவும் திமுக குறித்து அவர் வைக்கும் கருத்துகள், குற்றச்சாட்டு என்ற அளவில் போய்க் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக எம்.பி. ஆ.ராசா கூறிய கருத்துக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் காட்டமான பதில் ஒன்றை தந்துள்ளார். அதாவது, கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சுயநலவாதிகளாக மாறிவிட்டதால் தான் கம்யூனிசம் நீர்த்துப் போய்விட்டது என்பது திமுக எம்.பி. ஆ.ராசா பேசியதன் சாராம்சம். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார். அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை கூறிய ஆ.ராசா அவற்றை திரும்ப பெறவேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.
ஒருபடி மேலேபோய், திமுக முதலாளித்துவ கட்சி என்பதால் தான் அதன் ஒருசில செயல்பாடுகள் வேறாக உள்ளதாகவும் பெ.சண்முகம் குற்றஞ்சாட்டியுள்ளார். நாங்கள் தொழிலாளர் நலன் சார்ந்த கட்சி என்பதால் எங்கள் செயல்பாடுகள் வேறாக உள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். உதாரணத்திற்கு கூறவேண்டும் என்றால், ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் வேண்டிய நீதிபதிகளை அணுகி தாங்கள் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி பெற்றுக் கொள்வதாகவும், ஆனால் மார்க்சிஸ்ட் போன்ற கட்சியினர் போராட்டம் நடத்த இன்னமும் காவல்துறையிடம் போராட வேண்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: புதிய யூஜிசி விதிகள்...அமல்படுத்த துடிக்கும் மத்திய அரசும் தமிழக அரசின் எதிர்ப்பும்..சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் வருமா?
தனது கருத்தை ஆவேசமாக எடுத்து வைப்பது ஒருபுறம் இருந்தாலும், அரசியல் சதுரங்கத்தில் மிக சாமர்த்தியமாகவும் காய் நகர்த்தி வருகிறார் பெ.சண்முகம். திமுக எம்.பி.ராசாவுக்கு எதிராக காட்டமாக பேசியுள்ள அதேவேளையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி நிறுத்தும் மதச்சார்பற்ற வேட்பாளருக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் ஆதரவு உண்டு என்றும் பேட்டி அளித்துள்ளார். அடடா, திமுக தலைமையிடம் அரசியல் செய்ய இத்தகைய சாமர்த்தியம் தான் வேண்டும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
2026 அரசியல் களத்தில் எதிர்கட்சிகளுடன் சமர் செய்யும் அதேவேளையில், தேவையான தொகுதிகளை கேட்டுப் பெறவும் தேவையான எண்ணிக்கைகளையும் வாதாடி பெறவும் அரசியல் சாணக்கியத்தனம் வேண்டும் என்பதால் திமுக கூட்டணிக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தகுந்த சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு ..வேட்பளார் தேர்வு தீவிரம் ..!