டெல்லி பறக்கும் தலைகள்... அதிமுக மீது திமுக அமைச்சருக்கு பிறந்த திடீர் கரிசனம்!
அதிமுகவை அவர்கள் நன்றாக நடத்த வேண்டும் என்பதே திமுக.வின் விருப்பம் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுகவை அவர்கள் நன்றாக நடத்த வேண்டும் என்பதே திமுக.வின் விருப்பம் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளது எங்கே பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துவிடுமோ என்ற அச்சத்தின் வெளிப்பாடா என அதிமுகவினர் விமர்சித்து வருகின்றனர்.
பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாதிக்கப்பட்ட நிலத்தடி நீரை சுத்திகரிக்க, 40 கோடி ரூபாய் மதிப்பில் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு அடுத்த 10 நாட்களில் கட்டுமான பணிகள் தொடங்கும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். ஈரோட்டில், திமுக இளைஞரணி சார்பில் முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சம்பத் நகரில் நடைபெற்றது. இதற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, திமுகவை நினைக்காமல் யாரும் இருக்க முடியாது. இதனால் தவெக.வினர் திமுகவை விமர்சித்து வருகின்றனர். திமுக அதன் கொள்கையில் அடி பிறளாமல் சென்று கொண்டிருக்கிறது. ஆட்சிக்கு ஆபத்து வந்தாலும் கொள்கை பிடிப்புடன் உள்ளது. தந்தை பெரியார், அண்ணா கலைஞர் ஆகியோர் கொண்டு வந்த கொள்கைகளை பின்பற்றி வருகிறது.
தமிழ்நாட்டிற்கான நிதி பெறுவது, தொகுதி மறுசீரமைப்பு போன்றவற்றில் உரிமைகளை பெறுவதற்காக ஒன்றிய அரசிடம் போராடி வருகிறோம். இது அரசியல் அல்ல நாட்டை காப்பாற்ற வேண்டும் என்ற முயற்சியில் முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். சரியான வழியில் திமுக செயல் பட்டு கொண்டிருக்கிறது. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும். எடப்பாடியும், செங்கோட்டையனும் அடுத்தடுத்து டெல்லி சென்று அமித்ஷா.வை சந்திக்கின்றனர். இதுகுறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், அதிமுகவை அவர்கள் நல்ல முறையில் நடத்த வேண்டும் என்பதுதான் எங்களின் அடிப்படையான எண்ணம். சட்டமன்றத்தில் கூட எதிர்க்கட்சியினர் வருத்தம் இல்லாத அளவிற்கு முதலமைச்சர் மதித்து செயல்பட்டு வருகிறார். அதிமுக நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்களின் எண்ணம்.
இதையும் படிங்க: மீண்டும் செங்கோட்டையன் டெல்லி பயணம்... முக்கிய புள்ளியுடன் ரகசிய சந்திப்பு.. அலறும் இ.பி.எஸ் டீம்..!
திமுக எப்போதும் எந்த கட்சியுடன் ரகசியமாக கூட்டணி வைத்தது இல்லை, பாஜகவுடன் கூட்டணி வைத்தது கூட கலைஞர் நேரடியாக வெளிப்படையாக அறிவித்துவிட்டு தான் மேற்கொண்டார். எப்போதும் ரகசியமாக யாருடனும் கூட்டணி வைக்கவில்லை, திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது எனக்கூறினார்.
அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன் என அதிமுகவினர் அடிக்கடி டெல்லி பறப்பதும், அமித் ஷா, ஜே.பி.நட்டா போன்ற பாஜக முக்கிய தலைவர்களைச் சந்திப்பதும் நடந்து வருகிறது. இதனால் விரைவில் பாஜக - அதிமுக கூட்டணி விவகாரத்தில் சுமூக உடன்பாடு எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நடந்துவிடக்கூடாது என்ற அச்சத்தில் தான் திமுக அமைச்சர்கள் அதிமுக மீது திடீர் கரிசனம் காட்டுவதாக ர.ர.க்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: காமராஜர் திமுகவில் சேர்ந்திருப்பார்... எம்.ஜி.ஆர் அதிமுகவை கலைஞரிடம் ஒப்படைத்திருப்பார்… ஆர்.எஸ்.பாரதி அட்ராசிட்டி..!