தெலங்கானா முதலமைச்சரை நேரில் சந்தித்த திமுக தூதுக்குழு.. தொகுதி மறுவரையறை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு..!
தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்துள்ள தென்மாநில கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை திமுக தூதுக்குழுவினர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளனர்.
மக்கள்தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளை மறுவரையறை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அவ்வாறு செய்யப்பட்டால் உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியப்பிரதேசம் போன்ற வடமாநிலங்களுக்கு கூடுதல் தொகுதிகள் கிடைக்கும் என்றும் தமிழ்நாடு 8 தொகுதிகளை இழக்க நேரிடும் என்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
இதற்காக கடந்த 5-ந் தேதி அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, தொகுதி மறுவரையறை தொடர்பாக தென்மாநில கூட்டு நடவடிக்கைக் குழு என ஒன்றை உருவாக்கி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக 7 மாநிலங்களைச் சேர்ந்த 29 அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். அதில் தென்மாநில கூட்டு நடவடிக்கைக் குழுவில் சேர ஒப்புதல் கோரியும், அதுதொடர்பான கூட்டத்தில் பங்கேற்க பிரதிநிதிகளை அனுப்பி வைக்கக் கோரியும் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: ஒரு வருடத்திற்கு பிறகு சட்டப்பேரவைக்கு வந்த KCR..! வழக்கால் பயந்து வழிக்கு வந்த சுவாரஸ்யம்..!
அந்த அழைப்புக் கடிதங்களை திமுக பிரதிநிதிகள் நேரில் சென்று கொடுத்து அழைக்க குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. இதன்படி நேற்றுமுன்தினம் ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை, திமுக எம்.பி.தயாநிதி மாறன் மற்றும் தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். வருகிற 22-ந் தேதி நடக்க உள்ள கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்கும்படி அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
இதன்தொடர்ச்சியாக பெங்களூரில் கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் ஆகியோரை தமிழக அமைச்சர் பொன்முடி, திமுக எம்.பி.அப்துல்லா ஆகியோர் நேற்று நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். இதேபோன்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெகன்மோகன் ரெட்டியை தமிழக அமைச்சர் எ.வ.வேலு, திமுக எம்.பி.வில்சன் ஆகியோர் நேரில் சென்று சந்தித்து கூட்டத்தில் பங்கேற்க கேட்டுக் கொண்டனர்.
இந்நிலையில் தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தற்போது டெல்லியில் உள்ள தெலங்கானா இல்லத்தில் தங்கி உள்ளார். அங்கு அவரை நேரில் சந்தித்த தமிழக அமைச்சர் கே.என்.நேரு, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் தென்மாநில கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்கும்படி அழைப்பு விடுத்தனர்.
இதையும் படிங்க: பணக்கஷ்டத்தால் பெற்றோர் எடுத்த விபரீத முடிவு; பூட்டிய கதவுகளுக்குப் பின்னால் நடந்த கொடூரம்...!