×
 

அயன் பட பாணியில் கடத்தல்.. ரூ.7.9 கோடி மதிப்புள்ள கொக்கையின்.. சீக்ரெட் ப்ளான் சொதப்பியதால் சிக்கல்..!

தாய்லாந்து, மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 7.9 கோடி மதிப்புடைய கொக்கையின் மற்றும் உயர் ரக கஞ்சா சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை நடத்தினர். அதில் ஜாம்பியா நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகல் நகரில் இருந்து துபாய் வழியாக சென்னைக்கு சுற்றுலாப் பயணிகள் விசாவில் வந்தார்.

அவர் மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்தப் பயணி இடம் விசாரணை நடத்திய போது அவர்  முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அந்தப் பெண்ணை தனி அறைக்கு அழைத்து சென்று முழுமையாக பரிசோதித்தனர். 

அப்போது அந்தப் பெண்ணின் உள்ளாடைக்குள் ஒரு பார்சல் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அந்தப் பார்சலில் 460 கிராம் கொக்கையின் போதைப்பொருள் இருந்ததை கண்டுபிடித்தனர். பின்னர் அந்தப் பெண்ணின் வயிறு அளவு அதிகமாக பெரிதாக இருந்ததால் அந்தப் பெண்ணை சென்னை விமான நிலைய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது, அவருடைய வயிற்றுக்குள் பெரிய கேப்சல்கள் விழுங்கி இருப்பது தெரியவந்தது.  உடனடியாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவக் குழுவினர் வயிற்றுக்குள் இருந்த கேப்சல்களை ஒவ்வொன்றாக வெளியில் எடுத்தனர். 

இதையும் படிங்க: இன்ஸ்டா குயின்... அழகுப் பதுமை... தார் காருக்குள் 'கிக்கு'- பெண் போலீஸ் அதிரடி நீக்கம்..!

மொத்தம் 12 கேப்சல்களில் 150 கிராம் கொக்கையின் போதைப்பொருள் இருந்தது. மொத்தம் அந்த ஜாம்பியா நாட்டு இளம் பெண் இடம் இருந்து 610 கிராம் கொக்கையின் போதை பொருளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.6.1 கோடி. என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து சுங்க அதிகாரிகள் ஜாம்பியா நாட்டு இளம்பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது இவர் சர்வதேச போதை கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என்று தெரியவந்தது. எனவே சென்னையில் இவர் யாரிடம் இந்த போதை பொருளை கொடுக்க கடத்தி வந்தார்? என்று சுங்க அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். 

இந்தநிலையில் தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காங்கில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தின் பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து அவர்கள் அனைவரையும் சோதனை மேற்கொண்டனர். மேலும் அதில் வந்த சென்னை சேர்ந்த ஆண் பயணி மீது சந்தேகம் அடைந்து அவரின் உடமைகளை மோப்ப நாய்கள் வைத்து சோதனை செய்தனர். அப்போது அவரது உடமையில் போதைப்பொருள் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அவரின் உடமையை சோதித்த போது அதில் பதப்படுத்தப்பட்ட உயரக ஹைட்ரோபோனிக் கஞ்சா இருப்பது தெரியவந்தது. 

மொத்தம் அவரிடம் இருந்து 1.816 கிலோ உயர் ரக கஞ்சாவை பறிமுதல் செய்தனர் அதன் சர்வதேச மதிப்பு 1.8 கோடி என சுங்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சென்னையைச் சேர்ந்த ஆண் பயனியும் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர் கைது செய்யப்பட்ட இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு பின்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து ஹெராயின் போதை பொருள் மற்றும் பதப்படுத்தப்பட்ட ஹைட்ரோபோனிக் உயரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: போதைப்பொருட்களை ஒழிக்க திமுக என்ன செய்தது..? எகிறி அடிக்கும் எடப்பாடி பழனிசாமி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share