×
 

தமிழகத்தில் தலைதூக்கும் ரவுடியிசம்.. அவமானமாக இல்லையா ஸ்டாலின்? எடப்பாடி பழனிசாமி ஆவேசம்..!

நெல்லையில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஜாகிர் உசேன் பிஜிலி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

நெல்லை டவுன் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஜாகிர் உசேன் பிஜிலி இன்று அதிகாலை தொழுகை முடித்து கிளம்பும்போது மர்மநபர்களால் வெட்டிகொலை செய்யப்பட்டார். ஜாகிர் உசேன் பிஜிலி கொலை தொடர்பாக அக்பர்ஷா, தவ்ஃபீக் ஆகிய இருவர் நெல்லை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனர். இந்நிலையில் ஜாகிர் உசேன் பிஜிலி கொலை விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி துணைத்தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; திருநெல்வேலியில் அதிகாலை தொழுகை முடித்துவந்த ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஜாஹீர் உசேன், மர்மநபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

அதே போல், நேற்று கோட்டூர்புரத்தில் ரவுடிகளுக்கு இடையிலான தகராறில் இரட்டைக் கொலை நடந்துள்ளதாக செய்திகள் வருகின்றன. ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கின் அவல நிலை குறித்து நான் விளக்க வேண்டிய அவசியமே இல்லை; ஊடகங்கள் மைக்கை நீட்டினால் மக்களே "உரிய மரியாதையுடன்" அதனை சொல்வார்கள். ரமலான் மாதத்தில் அதிகாலை தொழுகை முடித்து ஒரு ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி, அதுவும் உங்கள் தந்தையின் தனிப்பிரிவு அதிகாரியாக பணியாற்றியவர், வீட்டிற்கு பாதுகாப்புடன் செல்ல முடியவில்லை. தன் உயிருக்கு ஆபத்து இருப்பது குறித்து அவரே ஒரு காணொளியை வெளியிட்டும் இருந்திருக்கிறார்.

இதையும் படிங்க: வாழத்தகாத மாநிலமாக மாறும் தமிழ்நாடு.. கனவுலகத்தில் வாழ்ந்து வரும் முதலமைச்சர்.. குற்றச்சாட்டுகளை அள்ளி வீசும் அண்ணாமலை..!

இதற்கெல்லாம் என்ன தான் பதில் வைத்திருக்கிறீர்கள் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களே? வழக்கம் போல உங்கள் அமைச்சர்களை விட்டு, "அது தனிப்பட்ட பிரச்சனை" என்று கடந்துவிடப் பார்ப்பீர்கள். அவ்வளவு தானே? இந்த பதிலை சொல்ல உங்கள் திமுக அரசுக்கு அவமானமாக இருக்காதா? உங்கள் வழிக்கே வருகிறேன்- தனிப்பட்ட பிரச்சனை என்றாலும் கொலை செய்வதற்கான துணிச்சல் எங்கிருந்து வருகிறது? உங்கள் ஆட்சியில் சட்டத்தின் மீதான அச்சம் துளி கூட இல்லாமல் போனதால் தானே? இதனை நீங்கள் எப்படி மறுப்பீர்கள்?

"கோட்டூர்புரத்தில் ரவுடிகள் இடையிலான தகராறில் நாங்கள் என்ன செய்ய முடியும்?" என்று நீங்கள் நிச்சயம் கேட்கக் கூடும். ஏனெனில், பொறுப்பற்ற பதில்களை அளிப்பது மட்டும் தானே உங்கள் அரசு செய்து வருவது? ஆனால், அந்த கேள்வியைக் கேட்பதற்கு முன், "தமிழ்நாட்டில் தலைதூக்கும் ரவுடியிஸத்தைத் தடுக்கத் தவறியதற்கு யார் பொறுப்பு?" என்று மக்கள் கேட்பார்கள் என்பதை நினைவிற்கொள்ளுங்கள்.

திரு. ஜாஹீர் உசேன் கொலையில் தொடர்புள்ள அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்; தன் நேரடி கட்டுப்பாட்டில் சட்டம் ஒழுங்கு இருப்பதாக போட்டோஷூட் வசனம் பேசியதை நினைவிற்கொண்டு, அந்த இரும்புக்கரத்தின் துரு நீக்கி இனியேனும் செயல்படுத்த வேண்டுமென வெற்று விளம்பர திமுக மாடல் அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அதிரடியாக மாறிய கூட்டணி... உறுதியானது அதிமுக+ பாமக+ தவெக+ நாதக இணைப்பு… திகிலில் ஸ்டாலின்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share