×
 

நான் அதிமுகவில் இருந்து விலகுகிறேனா..? திருமாவுக்கு சாட்டையடி கொடுத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..!

தான் அதிமுகவில் இருந்து விலகுவதாக பொய்ச்செய்தி பரப்பி அற்ப ஆசை கொள்ள வேண்டாம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, நீங்காத பெயர் பெற்றவராக காலத்தால் அழிக்க முடியாத அண்ணல் என்று சொன்னால் அம்பேத்கரை இந்த இடத்தில் குறிப்பிட்டாக வேண்டும் என்று தெரிவித்தார். அவருடைய இந்த பிறந்தநாள் தமிழ் புத்தாண்டில் அமையப்பெற்றது என்பது உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கழக முன்னோடிகள் அனைவரும் அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கும் அவரது திருவுருவப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதாக கூறினார். 

தொடர்ந்து, அதிமுக பாஜகவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாக திருமாவளவன் கூறியது தொடர்பான கேள்விக்கு ஜெயக்குமார் பதிலடி கொடுத்து பேசினார். பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விலகுவதாக கூறியிருந்தாரே என திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளதாகவும், எந்த நேரத்திலும் அதை நான் சொல்லவில்லை என்றும் குறிப்பிட்டார். அது ஒரு பொய் செய்தி என்று திட்டவட்டமாக கூறிய ஜெயக்குமார், திட்டமிட்டு பரப்பி உள்ளதாகவும், தான் எப்போது இயக்கத்தில் இருந்து வெளியேறுகிறேன் என்று சொன்னதாகவும் கேள்வி எழுப்பினார். 

இதையும் படிங்க: ஆட்சிக்கு முன்பு, வந்த பின்பு என இரட்டை வேடம் போடும் கட்சி திமுக.. இபிஎஸ் கண்டனம்..!

நான் சொல்லாத, நினைத்துக் கூட பார்க்க முடியாத அந்த செய்தியை வேண்டுமென்று சமூக வலைத்தளங்களில் நான்கு நாட்களாக பரப்பி வருவதாகவும், மீம்ஸ், கார்டு போடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதாகவும் கூறினார். ஒருவகையில் யூடியூப்களுக்கு தன்னால் வருமானம் கிடைத்துள்ளது என்பதை நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் அந்த சேனல்களில் லட்சக்கணக்கான பார்வையாளர்கள் பார்த்துள்ளதாகவும் ஜெயக்குமார் குறிப்பிட்டார். 

ஆனால் ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறிய அவர், எங்களுடைய குடும்பத்தை பொறுத்தவரை என்னுடைய அப்பாவின் அண்ணன் தேசிங்கு, வடசென்னை பெரியார் என்று இன்றைக்கும் அழைக்கப்படுகிறார் என்றும் பேரறிஞர் அண்ணா காலத்திலும் சரி, எம்ஜிஆர் காலத்திலும் சரி நீண்ட நெடிய திராவிட பாரம்பரியம் கொண்டது எங்கள் குடும்பம் என கூறினார். 

நாங்கள் தன்மானத்தோடு வளர்ந்த குடும்பம், பதவிக்காகவும் சரி எதற்காகவும் சரி, யார் வீட்டு வாசலிலும் நின்ற வரலாறு எங்கள் குடும்பத்திற்கு கிடையாது என்று கூறிய அவர், அப்படிப்பட்ட எங்களுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் அந்தஸ்தை தந்தது என கூறினார். என்னை அடையாளம் காட்டியது எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா தான் என்றும் வாழ்நாள் முழுவதும் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, இருவரும் தெய்வங்களாக இருக்கும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா அவர்களது வழியிலேயே எனது பயணம் நிச்சயமாக தொடரும். எனவே பொய் செய்திகளை பரப்பி அதில் ஒரு அற்ப ஆசைகளை கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். 

இதையும் படிங்க: ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சு..! எங்க தலைவர் அத சொல்லல.. மறுக்கும் சேகர்பாபு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share