திருமணத்திற்கு மறுத்த காதலன்.. டீயில் எலிமருந்து கலந்து கொடுத்த காதலி.. முடிந்தால் உன்னை காப்பாற்றிக்கொள் எனவும் சவால்..
விழுப்புரம் அருகே திருமணத்திற்கு மறுத்த காதலனுக்கு டீயில் எலி மருந்து கலந்து கொடுத்ததோடு மட்டுமல்லாமல், முடிந்தால் உன்னை காப்பாற்றிக்கொள் என சவால் விட்டு தலைமறைவான காதலியை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 23 வயதான இளைஞர் ஒருவர் பிளஸ்-2 வரை படித்து விட்டு, தனது வீட்டில் இ-சேவை மையம் நடத்தி வருகிறார். இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டுபடித்து வரும் 20 வயதுடைய மாணவிக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறி உள்ளது. இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனிலும் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்தது. காதலுக்கு இளைஞரது வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
பெற்றோர் வற்புறுத்தல் காரணமாக அந்த இளைஞர் கடந்த சில நாட்களாக தனது காதலியுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இருப்பினும் அந்த பெண், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு இளைஞரை தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் இனிமேல் பேசவும் மாட்டேன், உன்னை திருமணமும் செய்து கொள்ள மாட்டேன் என்று அந்த இளைஞர் திட்டவட்டமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி என்னசெய்வதென்று தெரியாமல் தனது தோழிகள் மற்றும் உறவினர்களிடம் கூறி புலம்பியுள்ளார். அவர்களும் மாணவியை ஆறுதல் சொல்லி தேற்றி உள்ளனர். காதலர்கள் இருவரும் உறுதியாக இருந்தால் பெற்றோர் காதலை ஏற்றுக்கொள்வார்கள் என்றும் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: காங்கிரஸ் இளம்பெண் வீட்டிற்குள்ளேயே கொலை... 'பாய் ஃப்ரண்ட்' நடத்திய பயங்கர சம்பவம்..!
இதுகுறித்து காதலனிடம் அப்பெண் பேசி உள்ளார். ஆனால் அந்த இளைஞர் பிடி கொடுக்காமல் பேசியதாக தெரிகிறது. இதனால் மாணவி வேறு ஒரு திட்டம் போட்டார். அந்த திட்டத்தின் படி காதலனை தனது வீட்டிற்கு மாணவி அழைத்தார். அவரும் அங்கு சென்றுள்ளார். இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த பெண், தனது காதலனுக்கு டீ போட்டுக்கொடுத்தார். அதை குடித்த சில நிமிடங்களில் இளைஞர் மயங்கி விழுந்தார். அவரது வாயில் இருந்து நுரை வெளியேறியது. அப்போதுதான் அந்த மாணவி, டீயில் எலி மருந்து கலந்து கொடுத்ததாக கூறினார். உடனே அவரை மீட்ட உறவினர்கள், சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இளைஞருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இளைஞர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் தீவிரசிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே காதலனின் செல்போனுக்கு வாட்ஸ்-அப்மூலம் அப்பெண் எஸ்.எம்.எஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், முடிந்தால் உன்னை காப்பாற்றிக்கொள் என்று சவால் விடுத்துள்ளார். இதுகுறித்து திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாணவி தனது குடும்பத்தினருடன் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் எங்கு சென்றார்கள் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 17 வயது சிறுவனுடன் ஏற்பட்ட கள்ளக்காதல்.. கணவனை தீர்த்துக்கட்ட திட்டம் போட்ட மனைவி..3 பேர் கைது..