இப்தார் நோன்பு திறப்பா..? பாஜக கூட்டணி அறிவிப்பா..?
இன்று மாலை எழும்பூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இப்தார் நோன்பு திறப்பு என்பது இஸ்லாமியர்களின் கடமைகளில் ஒன்றாக இருக்கிறதோ இல்லையோ, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அது அரசியல் கட்சிகள் கூட்டணிக்காக அச்சாரம் போடும் களமாக இருந்து வந்துள்ளது. திமுக, அதிமுக போன்ற கட்சிகள் சிறுபான்மை இனத்தின் காவலன் என்று அறிவித்துக் கொள்வது இத்தகைய இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதன் மூலம் தான்.
மதவாத முத்திரைக் குத்தப்பட்டாலும் தமிழக பாஜகவும் வாக்கரசியலில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியை தவிர்க்க முடியாமல் பங்கேற்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. அந்தவகையில் இன்று மாலை எழும்பூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: இப்தார் நோன்பில் கூச்சமே இல்லாமல் பங்கேற்கிறார் எடப்பாடியார்… இஸ்லாமியர்களை உசுப்பேற்றிய மு.க.ஸ்டாலின்..!
இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால், பாஜகவுடன் இணக்கமான கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். அந்த பட்டியல் தான் இப்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன், புதிய நீதி கட்சி தலைவர் ஏசி சண்முகம், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் டி ஆர் பாரிவேந்தர், ரவி பச்சமுத்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தலைவர் பி ஜான்பாண்டியன், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் கே சி திருமாறன் ஆகியோர் இதில் கலந்து கொள்கின்றனராம்.
பட்டியல் பார்த்தாலே தெரிகிறதா, எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியில் இந்த கட்சிகள் இடம்பெறும் என்று புரிதல் கிடைத்து விடுகிறது. இதன்மூலம் பாஜக கூட்டணியில் அதிமுகவோ, அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜகவோ இடம்பெறாது என்பதும் புலனாகிறது.
பாமகவைப் பொறுத்தவரை திமுகவை விமர்சிக்கும் அளவுக்கு பாஜகவை விமர்சிக்காமல் இருந்து வந்ததன் காரணமும் இப்போது புரியவருகிறது. மொத்தத்தில் இந்த இப்தார் நோன்பு திறப்பு தமிழக அரசியலில் புதிய கூட்டணிக் கதவுகளை திறந்து வைக்க உள்ளது.
இதையும் படிங்க: 'மேரா நாம் அப்துல் ரஹ்மான்...' என்னை நம்பி கெட்டவர்கள் யாரும் இல்லை... இப்தாரில் இளகிய இ.பி.எஸ்