இந்தியா கூட்டணியில் தவெக இணைய வேண்டும்...
நடிகர் விஜய்க்கு அழைப்பு விடுத்த செல்வ பெருந்தகை...
இந்துத்வா சக்திகளை அகற்ற வேண்டும் என்றால் மதச்சார்பின்மை தழைக்க வேண்டும் என்றால் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் இணைய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வ பெருந்தகை அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் பிறந்தநாள் விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இதில் செல்வபெருந்தகை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்வபெருந்தகை, மதவாத சக்திகளுக்கு எதிராக தான் போராட உள்ளதாக தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் நடிகர் விஜய் பேசியதை சுட்டிக்காட்டினார். சில தவறுகளை எப்போது வேண்டுமானாலும் ஒழித்து விடலாம், ஆனால் இந்துத்வா போன்ற சக்திகளை ஒழிக்க வேண்டுமானால் ஒத்த கருத்துடைய கட்சிகள் ஓரணியில் திரள வேண்டியது அவசியம் என்று செல்வபெருந்தகை குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: சட்டசபையில் புயலை கிளப்பிய அண்ணா பல்கலைக்கழக விவகாரம்... மடைமாற்றிய தோழமைக் கட்சி எம்எல்ஏக்கள்...குறுக்குசால் ஓட்டிய செல்வபெருந்தகை
அந்தவகையில் இந்தியா கூட்டணிக்கு நடிகர் விஜய் வருவதே அவருக்கும் அவருடைய கட்சிக்கும் நன்மை பயக்கும் என்று அவர் கூறியுள்ளார். பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராடிவரும் கிராமவாசிகளை பார்க்க நடிகர் விஜய் செல்வது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஒரு கோரிக்கையை முன்னெடுத்து போராடும் மக்களை அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் பார்ப்பது இயல்பான ஒன்றுதான். காவல்துறை அனுமதி அளித்துள்ளது, அவர் பார்க்கிறார். இதில் எந்த தவறும் இல்லை. மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதுதான் காங்கிரசின் நிலைப்பாடு என்றும் செல்வபெருந்தகை பேசியுள்ளார்.
ஆட்சியில் பங்கு - அதிகாரத்தில் பங்கு என்பது தவெக தலைவர் விஜயின் முழக்கம். இது திமுக கூட்டணியில் உள்ள ஒரு சில கட்சிகளுக்கான மறைமுக அழைப்பு என்று பார்க்கப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சி, தவெக-வுடன் இணைத்து சில மாதங்களாக பரபரப்பாக பேசப்பட்டது. இப்போது காங்கிரஸ் கட்சி நேரடியாக தவெக-வுக்கு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு தொகுதியை தி.மு.க எங்களிடம் இருந்து பறிக்காது..அடித்து சொல்லும் செல்வப்பெருந்தகை..!