ஹமாஸ் போராளிகளின் நெற்றியில் முத்தமிட்ட இஸ்ரேல் இளைஞர்.. வைரலான நெகிழ்ச்சி காட்சி..!
ஹமாஸ் போராளிகளின் நெற்றியில் இஸ்ரேல் இளைஞர் ஒருவர் முத்தமிட்ட காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற நீண்ட காலப் போர் ஓய்ந்து, சமரச ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதன்படி இரு தரப்பினரும் தங்களிடம் இருந்த பணய கைதிகளை ஒப்படைத்து வருகிறார்கள்.
பாலஸ்தீன தீவிரவாத குழுவான ஹமாஸ் மூன்று இஸ்ரேல் பணய கைதிகளை செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைத்த போது அவர்களை விடுவிக்கும் காட்சி நேரடியாக டிவியில் ஒளிபரப்பானது. இஸ்ரேல் நாடு முழுவதும் இந்த காட்சியை ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தது.
மூன்று இளைஞர்களையும் வீரர்கள் மேடைக்கு அழைத்து வரும்போது அவர்களில் ஒரு இளைஞர் அனைவரையும் பார்த்து உற்சாகமாக கைய அசைக்கிறார். திடீரென்று யாரும் எதிர்பாராத விதத்தில் தன்னை அழைத்து வந்த வீரர்களின் நெற்றியில் அன்புடன் முத்தமிடுகிறார்.
இதையும் படிங்க: காஷ் பட்டேலின் அழகிய காதலி..! யார் இந்த அலெக்சிஸ் வில்கின்ஸ்..!
நெகிழ்ச்சியான இந்த காட்சியை பார்த்து இஸ்ரேல் மக்கள் அதிர்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைந்ததாக மாறுபட்ட தகவல்கள் சமூக ஊடகங்கள் மூலம் வைரலாக பரவி வருகின்றன.
அந்த இளைஞர் பணய கைதியாக பிடிக்கப்பட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை ஆகிறார். அவர் பெயர் ஓமர் ஷெம் டோ.
மூவரையும் துப்பாக்கி ஏந்திய போராளிகள் மிகவும் பாதுகாப்புடன் அழைத்து வந்து கொண்டிருந்தனர். கைதிகள் தங்கள் விடுதலைச் சான்றிதழ்களை கைகளில் ஏந்தி படி நடந்து வந்து கொண்டிருக்க.. அந்த இளைஞர் மட்டும் கேமராவுக்கு முன்பாக கைகளை அசைத்தபடி அணிவகுத்து வந்தார்.
அப்போது ஓமர் ஷெம் டோ யாரும் எதிர்பாராத விதத்தில் அவருக்கு அருகே வந்த இரு வீரர்களின் தலையை பின்புறமாக பிடித்தபடி அவர்கள் நெற்றியில் விரைந்து முத்தமிடுவதை காண முடிந்தது. இந்த காட்சி வந்த போது பலத்த ஆரவாரம் எழுந்ததை பார்க்க முடிந்தது.
இஸ்ரேல் மக்கள் இந்த காட்சியை "அதிர்ச்சி" என்றும் 'மகிழ்ச்சி' என்றும் குறிப்பிட்டு இருந்த பல்வேறு கமெண்ட்களை சமூக ஊடகங்களில் பார்க்க முடிந்தது. "நமது மக்களை கொன்று குவித்த தீவிரவாதிகளுக்கு முத்தமா?" என்று ஒரு தரப்பினரும், "இயேசு நாதரின் பகைவனுக்கும் கருணை காட்டு" என்ற பாணியில் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.
அந்த இளைஞரின் பாட்டி சாரா, இஸ்ரேலின் சேனல் 12-க்கு அளித்த பேட்டியில், தன்னுடைய பேரன் மகிழ்ச்சியான ஒரு மனிதன் என்பதால் அவருடைய இந்த நடத்தை அவர் குணாதிசயத்திற்கு முரணாக தெரியவில்லை என்றார் மிகவும் மகிழ்ச்சி கலந்த பெருமிதத்துடன்.
"அது ஓமர். அவர் எல்லோரிடமும் நன்றாக பழகுவார்..ஹமாஸ் உள்பட... அங்கேயும் அவரை நேசிக்கிறார்கள்" என்று ஒரு பாட்டிக்கே உரிய நேசத்துடன் பதிவிட்டிருக்கிறார்.
ஹோமரின் தந்தை மல்கி ஷெம் டோவ், தனது அன்பு மகனை உலகின் மிகவும் நேர்மறை எண்ணம் கொண்டவர் என்று கூறினார். " ஓமர் ஒல்லியானவர்; ஆனால் உற்சாகமானவர். நேர்மறை எண்ணம் கொண்டவர். அவர் எப்படி இருப்பார் என்று எங்களுக்கு தெரியும். அவர் வெளியே வந்து புன்னகை அலைகளை தவழ விட்டபோதே எங்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் . இறுதியில் தன் மகனை "அதீத உற்சாகவாதி" என்று குறிப்பிட்டார்.
இன்று காலையில் நான் (இந்த செய்தியை டைப் செய்தவர்) டிபன் சாப்பிட்டுக் கொண்டு இருந்தபோது டிவி செய்திகளை திறந்ததும் முதலில் கண்ணில் பட்டது இந்த செய்தி தான். தொடர்ந்து போர் செய்தியை பார்த்துக் கொண்டிருப்பவன் என்ற முறையில் மிகவும் பரவசமாக இருந்தது இருந்தது அந்த காட்சி.
"பகைவனுக்கும் அருள வேண்டும்" என்ற இயேசுநாதர் பொன்மொழி பற்றி சொன்னபோது, "மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்" என்ற நமது தமிழ் மண்ணின் மணம் கமழும் பொன்மொழியும் எனது நினைவுக்கு வந்தது!
இதையும் படிங்க: பொள்ளாச்சியில் ஹிந்தி அழித்த திமுகவினரை தூக்கிய ஆர்பிஎப் போலீஸ்..! ஒரே மணி நேரத்தில் பெயர் பலகை சரி செய்து அதிரடி..!