×
 

இன்று ஒரே நாளில் 4 சம்பவம்.. திமுகவிற்கு இடியை இறக்கிய கோர்ட்..!!

திமுக தரப்பிற்கு இன்று ஒரே நாளில் 4 பெரிய வழக்குகளில் தங்கள் தரப்பினருக்கு எதிராக உத்தரவுகள் வந்துள்ளது பேரிடியாக அமைந்துள்ளள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக மூன்று கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராகவும், டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை நடத்திய சோதனை தொடர்பான வழக்கிலும், சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராகவும் சைவ, வைணவ சமயங்களையும், பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசிய வழக்க்கில் அமைச்சர் பொன்முடிக்கு எதிராகவும் என இன்று ஒரே நாளில் திமுக தரப்பிற்கு எதிராக உத்தரவுகள் வந்துள்ளன.

முதல் வழக்கு:-

கடந்த 1996-2001 ஆம் ஆண்டுகளில் பொதுப்பணித் துறை அமைச்சராக பதவி வகித்த அமைச்சர் துரைமுருகன் வருமானத்துக்கு அதிகமாக 3 கோடியே 92 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் 2002 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. அமைச்சர் துரைமுருகன், அவரது மனைவி, மகன், மருமகள் மற்றும் சகோதரர் மீது தொடரப்பட்ட வழக்கில் இருந்து அவர்களை விடுவித்து வேலூர் நீதிமன்றம் 2007 ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

இதையும் படிங்க: 2026இல் தமிழகத்தில் புரட்சி வெடிக்கும்.. எடப்பாடியார் முதல்வர் ஆவார்.. மாஜி அமைச்சர் பா.வளர்மதி தாறுமாறு!

இந்த உத்தரவை எதிர்த்து 2013ல் அதிமுக ஆட்சியில் மறு ஆய்வு மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, லஞ்ச ஒழிப்புத் துறையின் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார். இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, லஞ்ச ஒழிப்புத் துறை மறு ஆய்வு மனுவை ஏற்று, அமைச்சர் துரைமுருகன் மற்றும் குடும்பத்தினரை விடுவித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், வழக்கில் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்து, சாட்சி விசாரணையை துவங்க, வேலூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி வேல் முருகன், 1996-2001 ம் ஆண்டு காலத்தில் சொத்து சேர்த்த வழக்கு என்பதால், இந்த வழக்கை ஆறு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்கும்படி, சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

2 ஆம் வழக்கு:-

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்க கோரி, தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்குகளை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் அந்த உத்தரவில், டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 2017 முதல் 2024 ம் ஆண்டு வரை பதிவு செய்யப்பட்ட 41 முதல் தகவல்கள் அறிக்கைகளின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டுள்ளதே தவிர, வெறும் செவி வழி தகவல்களின் அடிப்படையில் அல்ல. நியாயமான சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை நடத்த அமலாக்கத்துறைக்கு சட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எந்த வழக்குகளின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது என்பதை டாஸ்மாக் நிர்வாகத்திற்கு தெரிவிக்க சட்டத்தில் எந்த வழிவகையும் இல்லை. அந்த விவரங்களை வழங்கினால், ஆதாரங்களை மறைக்கவும், அழிக்கவும் வாய்ப்புகள் உள்ளதால் வழக்குகளின் விவரங்களை வழங்க உத்தரவிட முடியாது என நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ததோடு அமலாக்கத்துறை தொடர்ந்து சோதனை நடத்தவும் அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் உத்தரவிட்டுள்ளனர்.

3 ஆம் வழக்கு:-

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2023 ஆம் ஆண்டு சென்னையில் கைது செய்யப்பட்டார். சுமார் 14 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜிக்கு பலமுறை ஜாமீன் மறுக்கப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளியே வந்தார்.

உடனடியாக அவருக்கு மின் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத் தீர்வை துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என சென்னையைச் சேர்ந்த வித்யா குமார் மற்றும் அமலாக்கத் துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, மாசிக் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வேண்டுமா அல்லது ஜாமீன் வேண்டுமா என்று கேள்வி எழுப்பினர். மேலும், அதிகாரத்தை பயன்படுத்தி சாட்சியங்களை கலைக்க மாட்டார் என எப்படி கூற முடியும் என்றும் கேட்டனர். மேலும், மெரிட் அடிப்படையில் ஜாமீன் வழங்கவில்லை. அரசியலமைப்புப் பிரிவு 21ஐ மீறியதால் ஜாமீன் அளித்தோம் என்று தெரிவித்தனர். ஜாமீன் வழங்கும்போது அமைச்சராக பதவி ஏற்க அனுமதி வழங்கவில்லை எனவும் நீதிபதிகள் விளக்கம் அளித்தனர். மேலும், வழக்கு விசாரணையை 28ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அமைச்சர் பதவியா அல்லது ஜாமீனா என்பது குறித்து அன்றைய தினம் தெரிவிக்க செந்தில் பாலாஜி தரப்புக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

4 ஆம் வழக்கு:-

அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையின் போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பொன்முடியின் சர்ச்சை பேச்சை சுட்டிக்காட்டி, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பியிருந்தார். ஐந்து புகார்கள் பெறப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அதன் மீது வழக்குப்பதிவு செய்ய அறிவுறுத்தி, விசாரணை இன்று தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்ததாகவும் அந்த வழக்கில் அமைச்சருக்கு எதிரான புகாரில் முகாந்திரம் இல்லை என்பதால் அதனை முடித்து வைத்து விட்டதாக தெரிவித்ததை ஏற்றுக் கொண்டு அந்த வழக்கை மதுரை அமர்வு முடித்து வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். அமைச்சர் பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஷ் சிங், இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ள நிலையில், முதன்மை அமர்வு மீண்டும் அதே விவகாரத்தை எடுக்க அவசியம் இல்லை என்று குறிப்பிட்டார். 

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தமிழகத்தின் முக்கிய சமயங்களான சைவ மற்றும் வைணவ சமயங்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய அமைச்சர் பொன்முடியின் கருத்துக்கள், இரு சமயத்தினரின் மனதை புண்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டி உள்ளார். அமைச்சர் பொன்முடியின் பேச்சு வெறுப்பு பேச்சு வரம்புக்குள் வருகிறது. இந்தப் பேச்சுக்காக அவர் கட்சி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இருப்பினும், குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லை என காவல்துறை தெரிவித்து இருக்கிறது. உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையின் செயல் துரதிஷ்டவசமானது என நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

வெறுப்பு பேச்சை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது என குறிப்பிட்ட நீதிபதி, ஏற்கனவே ஒரு வழக்கில் தண்டிக்கப்பட்டு உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு மூலம் சலுகை பெற்றுள்ள அமைச்சர் பொன்முடி, அதனைத் தவறாக பயன்படுத்தி இருக்கிறார் எனக்கு கூறி, வெறுப்பு பேச்சு தொடர்பாக அவருக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். தாமாக முன்வந்து விசாரணை எடுக்கும் வழக்கை தகுந்த உத்தரவுகளுக்காக தலைமை நீதிபதி முன் சமர்ப்பிக்க நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், பதிவுத்துறைக்கு உத்தரவிட்டிருக்கிறார். 

இதையும் படிங்க: பொய் புரட்டு.. இதுதான் திராவிட மாடல் உருட்டு.. ரைமிங்காக திமுகவை வாரிய ஹெச். ராஜா..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share