சென்னை மின்வாரிய தலை அலுவலகத்தில் ஐடி ரெய்டு… TDS பிடித்தம் செய்வதில் குளறுபடி..?
டிடிஎஸ் பிடித்தம் செய்வதில் குளறுபடி இருப்பதாக வருமான வரித்துறைக்கு அளிக்கப்பட்ட புகாரில், விசாரணை நடந்துவருகிறது.
சென்னை, மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை, அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.மின்சார வாரிய அலுவலகத்தில் உள்ள பசுமை எரிசக்தி பிரிவில் சோதனை நடக்கிறது. டிடிஎஸ் பிடித்தம் செய்வதில் குளறுபடி இருப்பதாக வருமான வரித்துறைக்கு அளிக்கப்பட்ட புகாரில், விசாரணை நடந்துவருகிறது. சோதனை நடைபெறவில்லை, வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மட்டுமே மேற்கொண்டு வருகின்றனர் என மின்வாரிய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: பச்சையப்பன் கல்லூரிக்கு ஆ. ராசாவை அழைத்த விவகாரம்... பேராசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டது செல்லும்....
மின்வாரிய தலைமை அலுவலக உயர் அதிகாரிகள் மற்றும் பசுமை எரிசக்தி கழகத்தில் பணியாற்றும் அதிகாரிகளிடமும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் நிறுவனத்திடம் கொள்முதல் செய்யப்பட்டு வரும் மின்சாரத்திற்கு கமிஷன் பெற்று வருவதாக புகார் எழுந்துள்ள நிலையில் விசாரணை நடைபெற்றது.
முன்னதாக, சென்னையில் உள்ள பிரபல தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்குச் சொந்தமான பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.அந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது வரி ஏய்ப்பு புகார் எழுந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனை மேற்கொண்டனர்.
பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்குச் சொந்தமாக தமிழகம் மற்றும் கர்நாடகாவில் உள்ள 34 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள நந்தனம், அண்ணாசாலை உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில் அதே அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு அரசு துறை நிறுவனமான தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
திடீரென தமிழகத்தின் மிக முக்கியமான துறை ஒன்றில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.