கைதாவாரா சௌமியா அன்புமணி? வள்ளுவர் கோட்டத்தில் மாணவிக்காக நாளை ஆர்ப்பாட்டம்
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு இழைக்கப்பட்ட கொடுமையை கண்டித்து பாமக மகளிர் சங்கம் சார்பில் ஆர்ப்பட்டம் நடக்கிறது. இதில் சௌமியா அன்புமணி கலந்துக்கொள்கிறார். நேற்று இதே இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த வந்த சீமானையும் போலீஸார் தடுத்து கைது செய்தனர்.
சௌமியா அன்புமணி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ள நிலையில் கைது செய்யப்படுவாரா? என்கிற கேள்வி பாமக தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த வாரம் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. மாணவிக்கு நீதி கேட்டு அதிமுக, பாஜக, நாதக, தவெகா என பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. திமுகவின் தோழமைக் கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் போராட்டம் நடத்தினர். இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் திமுக பிரமுகர் என்பதும், அவர் போனில் பேசிய அந்த சார் யார்? என்பது பரபரப்பான கேள்வியாக உள்ளது. இந்த விவகாரத்தில் விசாரணை முறையாக நடக்கப்பட வேண்டும் முதல் தகவல் அறிக்கையில் மாணவியை இழிவுபடுத்தும் விதமாக வரிகள் சேர்க்கப்பட்டிருப்பதும், முதல் தகவல் அறிக்கை வெளியான விவகாரத்திலும் உயர்நீதிமன்றம் அதிர்ச்சி அடைந்து தாமாக முன்வந்து வழக்கை கையில் எடுத்தது.
அதிமுக சார்பில் சிபிஐ விசாரணை கேட்டு தொடரப்பட்ட வழக்கை நீதிமன்றம் விசாரணை எடுத்து கடுமையான கண்டனத்தை தெரிவித்தது. காவல் ஆணையர் பேட்டி கொடுத்தும், எஃப் ஐ ஆர் போடப்பட்ட விதம் குறித்தும், எஃப்.ஐ.ஆர் வெளியானது குறித்தும் கடுமையான கோபத்தை தெரிவித்து. எஃப்.ஐ.ஆர்-ஐ பதிவிறக்கம் செய்த 14 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காவல் ஆணையர் பேட்டி கொடுத்ததை குறித்து அரசு கொடுத்த விளக்கத்தை ஏற்க மறுத்து அவர் மீது தேவைப்பட்டால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், மாணவிக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், அவருக்கு இலவசமாக கல்வியை அளிக்கவும், அவருக்கு கவுன்சிலிங் அளிக்கவும் உத்தரவிட்டது.
இதையும் படிங்க: அண்ணா பல்கலை விவகாரம்; அதிரடி காட்டும் அண்ணாமலை... மதுரை To சென்னை மகளிர் பேரணி
இந்த விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே தீவிரமாக கண்டனத்தை பதிவு செய்து முனைப்பு காட்டிய பாஜக தலைவர் அண்ணாமலை சவுக்கடி போராட்டம் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மறுபுறம் அதிமுக பொதுச் செயலாளர் தனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்து நிலையில், அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது. ’யார் அந்த சார்?’ போஸ்டர்கள் மாநிலம் முழுவதும் ஒட்டப்பட்டது.
தவெக சார்பில் அதன் தலைவர் விஜய் நேரடியாக ஆளுநரை சந்தித்து மனு அளித்தார். விஜய்யின் கடிதத்தை பொதுமக்களிடம் விநியோகித்ததாக சென்னை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் தவெக மகளிர் அணியினர் கைது செய்யப்பட்டனர். அவர்களை பார்க்கச் சென்ற பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை போலீசார் கைது செய்தனர். அதனால் இந்த விவகாரம் பெரிய அளவில் பரபரப்பாக மாறியது. தமிழகம் தாண்டி அகில இந்திய அளவிலும் இது பேசு பொருளாக மாறியது. இந்நிலையில் நேற்று பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டு வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் அறிவித்திருந்த நாம் தமிழர் கட்சியினர் அங்கு திரண்ட போது போராட்டத்திற்கு அனுமதி மறுத்து அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானையும் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் தனது கடுமையான கண்டனத்தை பாமக நிறுவனர் ராமதாஸூம், தலைவர் அன்புமணியும் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் பாமக மகளிர் அணி சார்பில் மாணவிக்கு நீதி கேட்டு வள்ளுவர் கோட்டத்தில் நாளை போராட்டம் நடைபெற உள்ளது இந்த போராட்டத்திற்கு பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி தலைமை தாங்குகிறார். பொதுவாக இந்த விவகாரத்தில் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்துவரும் நிலையில் நாளை பாமக மகளிர் அணி சார்பில் நடக்கும் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிப்பார்களா என்பது குறித்த சந்தேகம் இருந்துவருகிறது.
நாம் தமிழர் கட்சிக்கு அனுமதி மறுத்த போலீசார், பாமகவிற்கும் அனுமதி மறுப்பார்கள் அதை மீறி போராட்டம் நடத்தினால் சௌமியா அன்புமணி கைது செய்யப்பட வாய்ப்பு உண்டு என்று கூறப்படுகிறது சௌமியா அன்புமணி கைதாகவாரா அல்லது போராட்டத்திற்கு அனுமதி கிடைக்குமா? என்பது தற்போது பாமக தொண்டர்களிடையே பேசுபொருளாக உள்ளது.
இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம்.. பிரதமரிடம் விசாரணை அறிக்கையை கொடுப்போம்..மகளிர் ஆணைய தலைவி அதிரடி