அது இலவசம் இல்லைங்க.. அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா சொன்ன சூப்பரான விஷயம்..!
கலைஞர் வழங்கிய தொலைக்காட்சி இலவசம் இல்லை, மக்கள் நலத்திட்டம் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
ஏழை, எளிய மக்கள் அனைவரும் வண்ண தொலைக்காட்சியில் படம் பார்த்து ரசிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு சலுகையில் பொருட்களை வழங்க வேண்டும் என அன்றைய திமுக தலைவர் கருணாநிதி ஆசைப்பட்டார். இதற்காக, 2006ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் அனைவருக்கும் இலவச கலர் டிவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை உள்ள மக்களுக்கு இலவச வண்ண தொலைக்காட்சி வழங்கப்பட்டது. இன்றும் பலர் அந்த தொலைக்காட்சியை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில்,தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தனது ஆட்சியின்போது மக்களுக்கு இலவசமாக வழங்கிய வண்ண தொலைக்காட்சி பெட்டியை மக்கள் இன்றும் பயன்படுத்திக் கொண்டிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் சாதனை... இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்!!
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ராஜா, இலவசம் என்றார்கள்... பொழுதுபோக்கு என்றார்கள்... ஆனால், பாமரமக்களின் அறியாமையை போக்குவதற்கான மந்திரக்கோல் என்றும் பெண்கள் வெளியுலகை எளிதில் எட்டி பார்ப்பதற்கு உதவும் ஜன்னல் என்றும் கலைஞருக்கு மட்டுமே தெரிந்தது அது என கூறியுள்ளார்.
மேலும், உலக செய்திகளை, உலகத்தின் வளர்ச்சியை, மனிதனின் படைப்புகளை தமிழர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டும் ஒளிக்கீற்று என்றும் தமிழினத்தை உலகம் போற்றும் மாபெரும் இனமாகவும் தமிழ்நாட்டை உலகே வியந்து பார்க்கும் வளர்ச்சியின் விளைநிலமாகவும் மாற்றக் கூடிய அற்புத விளக்கு என்றும் கலைஞருக்கு மட்டுமே தெரியும் என கூறியுள்ளார். இலவசம் இல்லங்க அது. மக்கள் நல திட்டம்., பொழுதுபோக்கு இல்லைங்க அது, பொது அறிவுப் பெட்டகம் என தனது பதிவில் அமைச்சர் டி.ஆர். பி. ராஜா குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: நீட் எதிர்ப்பை முழுமனதோடு கடைபிடிக்கிறது திமுக அரசு.. திருமா பாராட்டு பத்திரம்!!