கூவத்தூர்-2.0...! வயிற்றுக்கு விருந்து... மனதுக்கு மருந்து... எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் வியூகம்...!
இதற்கிடையே மே 2ம் தேதி சென்னை எம்ஜிஆர் மாளிகையில் அதிமுக செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. அப்போது, செயற்குழு உறுப்பினர்களுக்கும் தடபுடலாக மதிய உணவு பரிமாறப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி ‘விருந்து’ வைக்கிறார்.
சென்னையில் உள்ள தனது இல்லத்தில் அதிமுக எம்எல்ஏக்களுக்கு வரும் 23ம் தேதி எடப்பாடி பழனிசாமி விருந்து வைக்க உள்ளார். அதிமுக பொதுச்செயலாளரான பின்னர் எடப்பாடி பழனிசாமி கட்சியினருக்கு பெரிய அளவில் எந்த விருந்தும் வைக்கவில்லை.
பொதுச்செயலாளர் ஆனதில் இருந்து அவருக்கு ஏராளமான பிரச்னைகள் இருந்து வந்தன. பொதுச்செயலாளர் நியமனம் தொடர்பாக ஓபிஎஸ் அடுத்தடுத்து தொடுத்த வழக்குகள், ஓபிஎஸ் நீக்கம், வேலுமணி, தங்கமணியுடனான கருத்து மோதல், நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி, சரியான கூட்டணி அமைக்காததால் தொண்டர்களிடையே ஏற்பட்ட அதிருப்தி, செங்கோட்டையன் விவகாரம், இரட்டை இலை தொடர்பான வழக்கு என அடுத்தடுத்த பிரச்னைகளால் எடப்பாடி கடும் அப்செட்டில் இருந்து வந்தார். இதனால், கட்சியினரை பெரிய அளவில் எடப்பாடி கவனிக்கவில்லை.
இதையும் படிங்க: அதிமுக - பாஜக கூட்டணி.. அதிமுகவுடன் உறவை முறித்த முக்கிய கட்சி.. அழிவு உறுதி என அதிமுகவுக்கு சாபம்!!
கட்சியும் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. அண்ணாமலை ஆற்றிய எதிர்வினையை கூட எதிர்கட்சித் தலைவரான எடப்பாடி சமாளிக்க முடியாமல் திணறி வந்தார். இதனிடையே மூத்த தலைவர்களும் அதிருப்தியில் இருந்து வந்தனர். இதனால், கட்சி நிர்வாகிகளும் கடும் சோர்வில் இருந்து வருகின்றனர். இவர்களை உற்சாகப்படுத்த எடப்பாடி முடிவு செய்துள்ளார். அவர்களை சரியான முறையில் கவனித்தால்தான் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க முடியும் என்ற முடிவுக்கு எடப்பாடி வந்துள்ளார்.
அதேநேரத்தில் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கும் வகையில் அரசியல் கட்சியினர் வியூகம் வகுத்து செயல்பட்டு வந்தனர். அதன் ஒரு பகுதியாக அதிமுக-பாஜ கூட்டணி அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. சென்னையில் கடந்த 11ம் தேதி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கூட்டணி அறிவிப்பை உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டார். கூட்டணி ஆட்சி என அமித்ஷா கூறிய நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமி கூட்டணி மட்டும்தான் கூட்டணி அரசு இல்லை என்றும் அதிரடியாக அறிவித்தார்.
பொதுக்குழுவை கூட்டி எல்லா முடிவுகளையும் எடுக்கக் கூடிய எடப்பாடி, பாஜவுடனான கூட்டணியை மட்டும் யாருக்கும் அறிவிக்காமல் ரகசியமாக வைத்திருந்து பாஜவுடன் திடீர் கூட்டணி அமைத்துவிட்டார் என அதிமுகவில் பெரும்பாலான தொண்டர்கள் அதிருப்தி அடைந்தனர். இந்த நிலையில் அதிமுக-பாஜ கூட்டணி சேர்ந்துள்ளதை வெளிப்படுத்தும் விதமாக எடப்பாடி பழனிசாமி கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு விருந்து வைக்க உள்ளார். சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் வரும் 23ம் தேதி இரவு விருந்து உபசரிப்பு நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஊர்வன முதல் பறப்பன வரை விருந்தில் இருக்கும் என்று தெரிகிறது. அதாவது, சிக்கன், மட்டன், இறால், மீன், முட்டை என எம்.எல்.ஏ.க்களுக்கு விதவிதமான அசைவ விருந்து படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சைவத்தை விரும்பும் எம்.எல்.ஏ.க்களுக்கும் சைவ உணவுகள் தயார் செய்யப்பட உள்ளன.
இதற்கிடையே மே 2ம் தேதி சென்னை எம்ஜிஆர் மாளிகையில் அதிமுக செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. அப்போது, செயற்குழு உறுப்பினர்களுக்கும் தடபுடலாக மதிய உணவு பரிமாறப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கூவத்தூர் தான் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக இருந்தனர். அதன்பிறகு இப்போதுதான் எடப்பாடி பழனிசாமி அதிமுக எம்எல்ஏக்களுக்கு விருந்தளிக்க உள்ளார்.
இதையும் படிங்க: அதிமுக - பாஜக கூட்டணி.. கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு தடபுடலாக விருந்து.. இபிஎஸ் உற்சாக முடிவு.!