ஆதவ் அர்ஜுனா வெளியில் இருக்கட்டும்...கட்சிக்குள் வேண்டாம்...விஜய்க்கு நெருக்கடி தரும் அந்த இருவர்
ஆதவ் அர்ஜுனா கட்சிக்கு வெளியில் இருந்து செயல்படட்டும், அவரை உள்ளே சேர்க்க வேண்டாம் என்று விஜய்யிடம் அந்த அதிகாரமிக்க இருவரும் நெருக்கடி கொடுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.இதை மற்ற நிர்வாகிகள் ரசிக்கவில்லை. தவெக உள்ளே இருவரால் என்னதான் நடக்கிறது பார்ப்போம்.
தவெக ஆரம்பித்து ஓராண்டாகியும் எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலையில், கட்சியின் பொதுச் செயலாளராக பெரிய அளவில் செயல்படாத புஸ்ஸி ஆனந்தும், வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியும் தங்கள் பணியை சரியாக செய்யாத காரணத்தினால் கட்சிக்கு பெரும் தொய்வு ஏற்பட்டது. இதை அடுத்து களத்தில் குதித்த விஜய் சில அதிரடி நடவடிக்கைகளை கையில் எடுத்தார். ஆரம்பத்தில் அந்த இருவரும் கைகோர்த்து விஜய்யிடம் சொன்ன கட்டுக் கதைகளை உண்மை என நம்பி படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வந்த விஜய் அவரது நெருங்கிய நண்பர் மூலமாக பல விஷயங்களை தெரிந்து கொண்டு அதிர்ச்சியானார்.
கட்சிக்குள் இணைய யாரும் வரவில்லை குறிப்பாக ஆதவ் அர்ஜுனா கட்சிக்குள் வரவில்லை, அவர் அதிமுக செல்கிறார் என்கின்ற கட்டுக்கதை ஆரம்பத்தில் விஜய்க்கு சொல்லப்பட்டுள்ளது. நண்பர் மூலம், தான் ஏமாற்றப்பட்டது அறிந்த விஜய் அதிர்ச்சி அடைந்தாலும், அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை நிதானமாக முடிவு எடுத்து நடத்தி காட்டி உள்ளார். முதல் கட்டமாக ஆதவ் அர்ஜுனாவை அழைத்து 50 நிமிடம் தனியாக பேசிய விஜய் அவர் சொன்ன பல விஷயங்களை கேட்டு கொண்டார். பின்னர் அடுத்து செய்ய வேண்டிய வேலை குறித்து முடிவெடுத்த விஜய், முதலில் நீங்கள் கட்சிக்காக வேலை செய்ய வேண்டும் அல்லது கட்சிக்குள் வர வேண்டும் என்று கூறியுள்ளார்.
”முதலில் நான் வெளியிலிருந்து பணியாற்றுகிறேன் எனக்கு வேண்டிய சுதந்திரத்தை கொடுத்தால் போதும் நான் செயல்படுத்தி காட்டுவேன். பிறகு கட்சிக்கு உள்ளே வருவது குறித்து முடிவு எடுப்போம், எடுத்தவுடன் கட்சிக்குள் வந்தால் பல்வேறு பிரச்சனைகள் புதிது புதிதாக கிளம்பும் நீங்கள் அதில் கவனம் செலுத்த வேண்டி இருக்கும். கட்சியை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த முடியாது” ஆதவ் என்று தெரிவித்துள்ளார். இதை அடுத்து அவரது முடிவை ஏற்றுக் கொண்ட விஜய் அதற்கான ஒப்பந்த சரத்துகளை தயார் செய்யும்படி கட்சி நிர்வாகிகளிடம் கூறியுள்ளார். இதற்கிடையே ஆதவ் அர்ஜூனா கட்சிக்குள் வருகிறார், கட்சிக்காக வேலை செய்யப் போகிறார் என்கிற தகவல் காட்டுத்தியாக பரவ அந்த இருவர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: விஜயுடன் இணைந்த ஆதவ் அர்ஜூன்… கூட்டணி வைத்த குருமா… வெளியே சிரித்து, உள்ளூர வருத்தப்படும் திருமா..!
கடந்த 2 நாட்களுக்கு முன் ஆதவ் அர்ஜுனா, விஜய் முன்னிலையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். அதன்படி 6 மாதம் தவெகவுக்கு ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் வேலை செய்வது என்பதே ஒப்பந்தம். ஒப்பந்தம் கையெழுத்தானபோது நிர்வாகிகள் அனைவரும் அங்கே இருந்துள்ளனர். இதில் இருவர் மட்டும் சோகமாக இருந்துள்ளனர். ஒருவர் புலம்பியபடி இருந்துள்ளார். அதன்பின் ஆதவ் அர்ஜுனா சிறிது நேரம் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியபின் கிளம்பி சென்றுள்ளார்.
நேற்று மீண்டும் ஆலோசனை நடந்துள்ளது. இதற்கிடையே ஆதவ் அர்ஜுனா கட்சிக்குள் வந்துவிட கூடாது என கட்சிக்குள் பிரச்சாரம் அந்த இருவரால் அனைவரிடமும் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது. ”ஆதவ் அர்ஜுனா கட்சிக்குள் வந்தால் குழப்பம் ஏற்படுத்துவார், அவர் அடிக்கடி கட்சி மாறுபவர், கட்சியில் யாரையும் மதிக்கமாட்டார்” என்றெல்லாம் கருத்து பரப்பப்பட்டது. இந்த கருத்து சில பத்திரிக்கையாளர்கள் மூலம் சில யூடியூப் சானலில் அந்த இருவரில் ஒருவர் மூலம் நேற்று பேட்டியாக சொல்ல வைக்கப்பட்டது. அதில் ஒருவர் நடுநிலையாளர் என்று சொல்லப்படும் பிரபல பத்திரிக்கையாளர் .
அதே நேரம் ஆதவ் அர்ஜுனா வருகையால் இருவரின் கொட்டம் அடக்கப்படும். கட்சி நேரடியாக விஜய் கண்காணிப்பில் வரும் என்று மற்ற நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ”ஆதவ் அர்ஜுனா வேலையும் செய்ய ஒப்புக்கொண்டு, தனது நிறுவனத்துக்கு பணம் எதுவும் வேண்டாம் என சொல்லியிருக்கிறார். இவர்கள் தானம் கொடுக்கும் மாட்டை பல்லை பிடித்து பார்க்கிறார்களே” என சிலர் ஆதங்கப்பட்டுள்ளனர்.
”ஆதவ் கட்சிக்குள் வந்தால் சாதாரண பதவி தர வேண்டும். அவர் எடுக்கும் எந்த முடிவும், செய்யும் எந்த வேலையும் தங்கள் இருவர் ஒப்புதலுக்கு பின்னரே ஆதவ் அந்த வேலையையும் செய்ய வேண்டும். ஒப்புதல் அளிக்காவிட்டால் அவர் எதையும் செய்யக்கூடாது” என்று இருவரும் கோரஸாக அனைவரிடமும் கூறி விஜய்யிடம் இதை வலியுறுத்த போகிறோம் என்று கூறியுள்ளனர்.
இதைக் கேட்ட நிர்வாகிகள் கடந்த ஓராண்டாக இவர்கள் செய்த குழப்பத்தாலும், தாங்களும் எதையும் செய்யாமல், யாரையும் வேலையும் செய்யவிடாமல் தடுத்ததாலும் கட்சி இருந்த நிலையை தான் பார்த்தோமே, இதில் புதிதாக வருபவரும் இவர்களிடம் ஆலோசனை கேட்டால் வெலங்கிடும் என்று பேசி சிரித்து கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா விஜய்யிடம் சில கோரிக்கைகள் வைத்ததாக கூறப்படுகிறது.
”என் நிறுவனம் செயல்படுவதற்கான அனைத்து செலவுகளையும் நான் பார்த்துக் கொள்கிறேன். உங்களிடம் எந்த தொகையும் நான் கோரப்போவதில்லை. அதே நேரம் கட்சியில் பொறுப்பு கொடுப்பதாக இருந்தால், எனது வேலையில் யாரும் தலையிடாமல், குறுக்கீடு இல்லாமல், உங்களிடம் மட்டும் ஆலோசனை பெற்று செயல்படும் வகையில் பொதுச் செயலாளருக்கு இணையாக ’பொதுச் செயலாளர் பொறுப்பு-பிரச்சாரம் மற்றும் தேர்தல் வியூகம்’ என்று பொறுப்பு கொடுத்தால் என்னால் யாருடைய இடையூறும் இன்றி செயல்பட முடியும்.
மாநிலம் முழுவதும் கட்சி நிர்வாகிகளை வேலை வாங்க முடியும். முதல் கட்டமாக அனைத்து தொகுதிகளிலும் பணிகளை ஆரம்பித்து விடுவேன். அடுத்த கட்டமாக வார்டு அளவில் பூத் ஏஜெண்டுகள் கூட்டம் உள்ளிட்டவற்றை நடத்துவேன்” என்றெல்லாம் கூறியுள்ளார். ”இது மட்டுமல்லாமல் வேறு ஏதும் பதவி கொடுத்தால் அது ஏற்கனவே இருப்பவர்கள் சொல்படி கேட்டு நடத்தும் நிலையை உருவாக்கும், அதனால் எந்த பயனும் இல்லை, அதற்கு நான் வெளியில் இருந்தே வேலை செய்து விடுவேன், யாருக்கும் பிரச்சினை வராது” என்று கூறியுள்ளார். உங்களை யாரும் கட்டுப்படுத்த மாட்டார்கள், நீங்கள் நேரடியாக என்னிடம் ரிப்போர்ட் செய்யலாம் என்று விஜய் தரப்பில் அப்போது தெரிவிக்கப்பட்டதாம்.
மேலும் ஆதவ் அர்ஜுனா கேட்ட பொறுப்பை வழங்குவது பற்றி முடிவு செய்து விரைவில் பொதுவெளியில் அதை அறிவிக்கலாம் என்றும் விஜய் தரப்பில் ஆதவ் அர்ஜுனாவுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டதாம். ஆதவ் தவெகவுக்குள் வந்துவிட்டால் கட்சி வேகமெடுத்து விடும், ஏற்கனவே திமுகவில் பணியாற்றிய அனுபவம் ஆதவ்வுக்கு உள்ளதால் எந்தெந்த வகையில் தவெகவிற்கு இடையூறுகள் வரும்? அதை எப்படி களைய முடியும்? கட்சி உறுப்பினர்களை வேகப்படுத்தி உற்சாகப்படுத்தி எப்படி வேலை வாங்க முடியும் என்று தெரியும் என்பதால் ஆதவ் அர்ஜுனை கட்சிக்குள் இணைத்தால் தங்கள் இருப்புக்கு சிக்கல் என்பதால் அவரை கட்சிக்குள் விடக்கூடாது என்பதில் இருவரும் உறுதியாக உள்ளனர்.
தங்களுடைய இருப்பு பறிபோகிவிடும் என்கிற கோபத்தில் அந்த இருவரும் விஜய்யின் புதிய முடிவை ஏற்க மனம் இல்லாமல், அதே நேரம் எதிர்க்க முடியாமல் கட்சிக்குள் பெரிய அளவில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த விவகாரம் விஜய்யின் காதுகளுக்கு சென்றுள்ளதா என்பது இதுவரை தெரியவில்லை. இந்த இருவருடைய செயலால் கட்சி மீண்டும் பாதிப்புக்கு உள்ளாகும், வெளியில் தங்களுக்கு தொடர்பில் இருக்கும் முக்கிய மீடியாக்கள் மூலம், தங்கள் ஆதரவு ஊடகவியலாளர்கள் மூலம் ”ஆதவ் அர்ஜுனா கட்சிக்குள் வந்தால் வெகு நாட்கள் இருக்க மாட்டார், விஜய்க்கும் அவருக்குமே பிரச்சினைகள் வரும்” என்றெல்லாம் நேற்றிலிருந்து பிரச்சாரம் பரப்பப்பட்டு வருகிறது.
இந்த பிரச்சாரத்திற்கு பின்னணியில் இருப்பவர் அந்த இருவரில் ஒருவர் என்றும், இது கட்சி கட்சியின் மற்ற நிர்வாகிகளால் கவலையுடன் பார்க்கப்படுகிறது என்பதும், இதை தடுக்கக்கூடிய ஒரே நபர் விஜய் மட்டுமே, அவரால் மட்டுமே இது சாத்தியமாகும் என்றும் இந்த புதிய மாற்றத்தை வரவேற்கும் கட்சியின் நலம் விரும்பிகள் நினைக்கின்றனர்.
மழை விட்டும் தூவானம் விடாது என்பார்கள். அதுபோன்று ஓர் ஆண்டு காலமாக மிகப்பெரிய தேக்கத்தில் இருந்த கட்சிக்கு, புது ரத்தம் பாய்ச்சும் விதத்தில் ஒரு வியூக வகுப்பாளர் தாமாக முன்வந்து கட்சியில் இயங்கும் நிலையில், அதையும் தடுத்து தங்கள் இஷ்டப்படி தான் கட்சி நடக்க வேண்டும் என்று, இந்த இருவர் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறுமா? அல்லது ஆதவ் தன்னுடைய செயல்பாடுகள் மூலம் இலக்கை அடைவாரா என்பது இப்போது தவெகவுக்குள் உள்ள பிரச்சினை.
அடுத்த ஓராண்டுக்குள் கட்சியில் உள்ள தேக்கத்தை உடைத்து சட்டமன்ற தேர்தலுக்கு தவெகவை தயார்படுத்தி, தொண்டர்களை தயார்படுத்தி அதிகாரத்திற்கு வரும் முயற்சியை எடுப்பது முதல் பணி. புதிய மாவட்ட செயலாளர்கள், புதிய நிர்வாகிகளை ஒரு வரையறைக்குள் கொண்டு வருவது மிக அவசியம். இதில் செயல்படுகிறேன் என்று கட்சியை பழைய நிலையிலே வைத்திருந்தால் அது தேர்தல் போட்டியில் பெரும் சிக்கலாக அமையும் என்பது பொதுவான கருத்தாக உள்ளது. தற்போதுள்ள நிலையில் விஜய் அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார், இது தொடர்ந்தாலே கட்சி சிறப்பாக இருக்கும் என்று கட்சியில் உள்ள மற்ற அனைவரின் கருத்தாக உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.
இதையும் படிங்க: விஜயுடன் கைகோர்க்கும் ஆதவ்.. ஜான் ஆரோக்கியசாமிக்கு கல்தா..? மாஸ்டர் ஸ்கெட்ச் போட்ட விஜய்..!