×
 

மு.க.ஸ்டாலின் காட்டும் திடீர் பாசம்... அன்புமணி ராமதாஸ் சுட்டும் பகீர் வேஷம்..!வன்னியர் வாக்குகள் யாருக்கு..?

காடுவெட்டி குரு மீது தி.மு.கவிற்கு திடீர் பாசம் ஏற்பட்டு விட்டதாக அன்புமணி ராதாஸ் சொல்கிறார். ஆனால், காடுவெட்டி குருவையே பா.ம.க. கண்டுகொள்ளாமல் போய்விட்டது என்று அவரது குடும்பத்தைச் சார்ந்தவர்களே குற்றஞ்சாட்டியதையும் மறந்துவிட முடியாது.

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது வன்னியர்களுக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த இட ஒதுக்கீடு மற்ற சமுதாய மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தி ஆட்சியை இழந்தார். ஆனால், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வன்னியர் வாக்குகளை பெறுவதற்கு இரண்டு தரமான சம்பவங்களை செய்திருக்கிறார்.
 
வன்னியர் சமூக மக்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு 1987 ஆம் ஆண்டு போராட்டத்தில் நடத்தியதில் உயிர்நீத்த 21 சமூக நீதி போராளிகளுக்கு மணி மண்டபம் சுட்ட வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. 1989 ஆம் ஆண்டு அமைந்த கருணாநிதி தலைமையிலான அரசு, இந்தியாவிலேயே முதன்முறையாக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவை அமைத்து கொடுத்து அவர்களுக்கு 20 சதவிகித இடஒதுக்கீட்டினை வழங்கி கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் சம வாய்ப்பை ஏற்படுத்தினார்.


 
2012ம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, முதல்வர் ஸ்டாலின் சட்டமன்ற பேரவை விதி எண் 110ன் கீழ் 2021ம் ஆண்டு செப்டம்பர் 21 தேதி அன்று "1987ம் ஆண்டு இடஒதுக்கீடு போராட்டத்தில் காவல் துறையினுடைய துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான 21 சமூக நீதி போராளிகளின் தியாகத்தை மதிக்ககூடிய வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும்" என்று கூறினார்.
 
அதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டி கிராமத்தில், 21 சமூக நீதி போராளிகளுக்கு 5 கோடியே 70 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட மணிமண்டபத்தை கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் தேதி நேரில் சென்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து தியாகிகளுக்கு மரியாதை செலுத்தினார். இந்நிலையில், கடந்த 5ம் தேதி காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் சி.என்.ராம மூர்த்தி, காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை மற்றும் மனோஜ் உள்ளிட்டோர் நேரில் சந்தித்தனர். அப்போது வன்னியர் சமூக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 21 சமூக நீதி போராளிகளிக்கு மணிமண்டபம் அமைத்த தமிழ்நாடு அரசிற்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்தனர்.


 
இந்த சந்திப்பின் போது, அமைச்சர்கள் துரைமுருகன் மற்றும் பொன்முடி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்முதல்வர் உடனான சந்திப் பிறகு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், "வன்னியர் சமூக மக்களின் கோரிக்கையை சட்டமன்றத்தில் நான் பேசியவுடன், நிச்சயம் மணிமண்டபம் கட்டப்படும் என முதல்வர் கூறியிருந்தார். அதற்கு முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளேன்" என்றார். 

இதையும் படிங்க: ஓய்வூதிய திட்டத்திற்காக குழு அமைப்பது ஏமாற்று வேலை.. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆவேசம்

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை மற்றும் காடுவெட்டி மனோஜ் ஆகியோர் பேசுகையில், 'இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 தியாங்களுக்கு மணிமண்டபம் கட்டித் திறந்த முதல்வருக்கு நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தோம். வன்னியர் சமூகம் சார்ந்த பல கோரிக்கைகளை முதல்வரிடம் வைத்துள்ளோம். அதை நிறைவேற்றி தருவதாக முதல்வர் கூறியுள்ளார்" மறைந்த எங்கள் அப்பா காடுவெட்டி குருவுடைய பிறந்த நாள் விழாவிற்கு அனுமதி கேட்ட நிலையில், அரசும் அனுமதி அளித்திருந்தது. அதே போல் காடுவெட்டி குருவின் வெண்கல சிலை அமைக்க அனுமதி கேட்டிருந்த நிலையில் அரசு அனுமதி கொடுத்துள்ளது. இந்த இரண்டு நிகழ்வுக்கும் தமிழக அரசிற்கும் முதலவருக்கும் நன்றி தெரிவித்தோம்" எனத் தெரிவித்தனர். 

சமூக நீதி போராளிகளுக்கு மணி மண்டபம், காடுவெட்டி குருவிற்கு வெண்கல சிலை அமைக்க அனுமதி என்ற இரண்டு விஷயங்களும் தி.முக காட்டிய பாசம்தான். பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸை பதற வைத்துவிட்டது. வன்னியர் வாக்குகள் தி.மு.க. பக்கம் சாய்ந்துவிடுமோ என்ற நிலையில்தான், "பா.ம.க.வை முதல்வர் ஸ்டாலின் முடக்க நினைப்பது ஒருபோதும் நடக்காடு" என பதறிபோய் அறிக்கை விட்டிருப்பதாக சொல்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்! இதுகுறித்து கடந்த 6ம் தேதி அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரியலூர் மாவட்டம் காடுவெட்டி கிராமத்தில் கடந்த ஒன்றாம் தேதி காலஞ் சென்ற ஜெ.குருவின் பிறந்தநாள் நிகழ்வுகளில் பங்கேற்க அமைச்சர் சிவசங்கர் சென்ற போது, திமுகவின் சமூக அநீதியைக் கண்டித்து முழக்கம் எழுப்பியதற்காக பாமகவைச் சேர்ந்த அன்புமணி, சிங்கார வேலு, சீனு ஆகிய மூவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். திமுக அரசின் இந்த அடக்குமுறை கண்டிக்கத்தக்கது.
 
காடுவெட்டியில் கடந்த ஒன்றாம்தேதி நடந்த நிகழ்வில் திமுக அமைச்சர் சிவசங்கருக்கு எதிராக அங்கு கூடியிருந்த அனைவரும் முழக்கம் எழுப்பினார்கள். திமுக அரசில் தங்களுக்கு சமூக அநீதி இழைக்கப்படுவதாலும், அதற்கு சிவசங்கர் போன்றவர்கள் துணை போவதாலும் மக்களிடம் எழுந்த கொந்தளிப்பின் வெளிப்பாடு தான் அது. மக்கள் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்த அரசியலமைப்புச் சட்டம் அதிகாரம் வழங்கியிருக்கும் நிலையில், அதை மதிக்காமல் பாமக மீது வன்மமும், வெறுப்பும் கொண்டு இத்தகைய அடக்குமுறைகனை திமுக அரசு கட்டவிழ்த்து விடுவதை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
 
கைது செய்யப்பட்டிருக்கும் மூவரும் எந்தத் தவறும் செய்யவில்லை. "மருத்துவர் அய்யா வாழ்க, மாவீரன் வாழ்க, வன்னியர்களுக்கான 10.50% இட ஒதுக்கீடு என்ன ஆச்சு?" என்று தான் அவர்கள் முழக்கம் எழுப்பினார்கள். ஆனால், வன்னியர்களுக்கான 10.50% இட ஒதுக்கீடு என்ன ஆச்சு? என்று திமுக அரசின் சமூக அநீதியை சுட்டிக்காட்டி முழக்கம் எழுப்பியதைத் தாங்கிக் கொள்ள முடியாத அமைச்சர் சிவசங்கரின் தூண்டுதலில் அவருடன் வந்த சிலர் பாட்டாளி மக்கள் கட்சியினரைத் தாக்கியுள்ளனர்.

இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டிருக்கிறது. அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை, பாதிக்கப்பட்ட பாமகவினரை கைது செய்வது பெரும் அநீதியாகும். காலஞ்சென்ற காடுவெட்டி குரு வாழ்ந்த காலத்தில் அவருக்கு எதிராக திமுகவும், சிவசங்கரும் எத்தகைய சதித் திட்டங்களைத் தீட்டினார்கள் என்பதை அரியலூர் மாவட்ட மக்கள் அறிவார்கள். ஜெ.குருவை படுகொலை செய்வதற்காக கூலிப்படைகளை ஏவினார்கள். ஜெ.குருவை தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் உயிரிழந்த போது அவருக்கு இரங்கல் கூட தெரிவிக்காமல், அவரது மறைவை கொண்டாடி மகிழ்ந்தவர்கள் தான் சிவசங்கரும், திமுகவினரும் திமுகவினரால் மாவீரனுக்கு அச்சுறுத்த ஏற்பட்ட போதெல்லாம் அவரை பாதுகாத்தவர் பாமக நிறுவனர் ராமதாஸ்.

அப்படிப்பட்ட திமுகவினரும், சிவசங்கரும் ஜெ.குரு பிறந்தநாள் விழாவுக்கு வரும் போது, அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தான் பாட்டாளி மக்கள் கட்சியினர் முழக்கம் எழுப்பினார்கள். இதற்காக பாமகவினரை கைது செய்வதெல்லாம் தமிழ்நாடு இதுவரை கண்டிருக்காத அடக்குமுறையின் உச்சம். கைது செய்யப்பட்ட பாமகவினருக்கு எதிராக நேற்று காலை வரை எந்த புகார் மனுவும் அளிக்கப்படவில்லை. திடீரென நேற்று மதியத்திற்குப் பிறகு அவர்கள் மீது அவசர, அவசரமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் பாமகவினரைத் தாக்கிய திமுகவினர் மீது அளிக்கப்பட்ட புகார் மனு மீது இன்று வரை வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. இது தான் காவல்துறையின் நடுநிலையா? 

தமிழ்நாட்டின் தீர்க்கப்பட வேண்டிய சிக்கல்கள் தமிழ்நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. கொலைகளும், கொள்ளைகளும் இல்லாத நாட்களே இல்லை என்றாகிவிட்டது. பாட்டாளி மக்கள் கட்சியினர் மீது இத்தகைய அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதன் மூலம் பா.ம.க.வை முடக்கி விடலாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைத்தால் அவருக்கு ஏமாற்றம் மட்டும் தான் பரிசாகக் கிடைக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என கொதித்துப் போய் அறிக்கை விட்டிருக்கிறார். 

காடுவெட்டி குரு மீது தி.மு.கவிற்கு திடீர் பாசம் ஏற்பட்டு விட்டதாக அன்புமணி ராதாஸ் சொல்கிறார். ஆனால், காடுவெட்டி குருவையே பா.ம.க. கண்டுகொள்ளாமல் போய்விட்டது என்று அவரது குடும்பத்தைச் சார்ந்தவர்களே குற்றஞ்சாட்டியதையும் மறந்துவிட முடியாது. ஆக மொத்தத்தில் வன்னியர் வாக்குகள் யாருக்கு என்ற யுத்தம் தொடங்கிவிட்டது.

இதையும் படிங்க: தெம்பும், திராணியும் இருந்தால்... பாமகவிற்கு நேரடி சவால்விட்ட மாவீரன் மஞ்சள் படை

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share