×
 

தேர்தலில் போட்டியிட இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றிருக்கணும்.. சந்திரபாபு நாயுடு அதிரடி அறிவிப்பு!

இனி ஆந்திரப் பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தலில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களே போட்டியிட முடியும் என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

2026இல் உத்தேசிக்கப்பட்டுள்ள தொகுதி மறுவரையின் படி தென்னிந்திய மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கை குறையும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. எனவே, இனி அதிகக் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் தெரிவித்திருந்தது, மக்கள் தொகை கட்டுப்பாடு திட்டத்துக்கு எதிராக இருப்பதாக சலசலப்புகள் எழுந்தன. இந்நிலையில் ஆந்திராவில் 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட தடை அண்மையில் நீக்கப்பட்டது.

இது தொடர்பாக திருப்பதியில் சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "முன்பு 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்ட‌து. இனி  2 குழந்தைகளுக்கு அதிகமாக பெற்ற தம்பதியினரும்  உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடலாம். அதிக குழந்தைகளைப் பெற்றவர்கள் கவுன்சிலர்களாக, மேயர்களாக பதவியைப் பெறவும் முடியும்.

ஜப்பான், தென் கொரியா, ஐரோப்பிய நாடுகளில் மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதால், அங்குள்ள பணிகளைப் பார்க்க இங்கிருந்து நாம் செல்ல வேண்டிய நிலைமை உள்ளது. நம் நாட்டிலும் அப்படியான ஒரு நிலைமை வந்துவிடக் கூடாது. எனவே, ஆந்திராவில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு மட்டுமே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கப்படும். இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்று கொள்ளும் தம்பதியினருக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்படும்" என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: உலகின் மிக உயர்ந்த தலைவர்... பிரதமர் மோடியை ஆஹா ஓஹோவென புகழும் சந்திரபாபு நாயுடு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share