போட்றா வெடிய... தமிழக பாஜக தலைவரானார் நயினார் நாகேந்திரன்... அண்ணாமலைக்கும் முக்கிய பொறுப்பு!
பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் பாஜக மாநில தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்வு நடைபெற்றது. இதில் பாஜக மாநில புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
பாஜக மாநில தலைவராக கையெழுத்திட்டு நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றார். அவருக்கான வெற்றிச் சான்றிதழை தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி வழங்கினார். தமிழ்நாடு பாஜகவின் 13வது தலைவராக நயினார் நாகேந்திரன் பதவியேற்றார்.
அதிமுக கூட்டணி அமைய வேண்டும் என்றால் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நீடிக்க முடியாது என்ற சூழ்நிலை உருவானது. இதனையடுத்து நேற்று அமித்ஷா சென்னையில் இருந்த போது கட்சி தலைவருக்கான தேர்தலை மின்னல் வேகத்தில் தொடங்கினார்கள். மதியம் 2 மணி முதல் மாலை 4 மணிவரை தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புவ்பவர்கள் மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: “நாங்க ரெடி.. நீங்க ரெடியா” - பாஜகவுக்கு சொடுக்குப் போட்டு சவால் விட்ட எ.வ.வேலு...!
48 லட்சம் பாஜக தொண்டர்களில் மாநில தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் மட்டுமே மனுத்தாக்கல் செய்திருந்ததால் அவர் தேர்வு செய்யப்படுவதாகவும், அண்ணாமலைக்கு தேசிய அளவில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்திருந்தார். தற்போது நயினார் நாகேந்திரன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை பாஜக வெளியிட்டுள்ளது.
பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினராக அண்ணாமலை தேர்வு செய்யப்பட்டுள்ளார். எல்.முருகன், வானதி ஸ்ரீனிவாசன், கே.பி.ராமலிங்கம் உள்ளிட்டோர் பொதுக்குழு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழிசை செளந்தரராஜன், சரத்குமார், எச்.ராஜா, ராம.சீனிவாசன், கரு.நாகராஜன் ஆகியோர் பொதுக்குழு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பாஜக-வால் கனிமொழிக்கு கிடைத்த தனி பங்களா… அதிர வைக்கும் ஆதாய லிஸ்ட்.!