முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்க்கு வாரிய பதவி.. பாகிஸ்தானிலும் குடும்ப ஆட்சி..!
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்க்கு வாரிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்க்கு, தனது மகளும் பஞ்சாப் மாநில முதலமைச்சருமான மரியம் நவாஸ் புதிய பதவி ஒன்றை வாரி வழங்கியுள்ளார்.
நவாஸின் மகள், முதலமைச்சர் மரியம் நவாஸ் தலைமையிலான பஞ்சாப் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது தான், லாகூர் பாரம்பரிய மறுமலர்ச்சி ஆணையம் (LAHR). இதன் புரவலராக (பேட்ரன்-இன்-சீஃப்) நியமிக்கப்பட்டுள்ளார் நவாஸ் ஷெரிப்.
மூன்று முறை பிரதமராக பதவி வகித்த இவருக்கு, லாகூரின் காலனிய கால கட்டடங்கள் மற்றும் வரலாற்று அடையாளங்களை மீட்டெடுக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. 2024 தேர்தல்களில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (PML-N) பின்னடைவை சந்தித்ததிலிருந்து, நவாஸ் பெரும்பாலும் அரசியல் வெளிச்சத்தில் இருந்து விலகியிருந்தார். 2023இல் லண்டனிலிருந்து திரும்பிய அவர், நான்காவது முறையாக பிரதமராகும் லட்சியத்துடன் வந்தார்.
இதையும் படிங்க: வஞ்சகத்தால் அடி வாங்கிய பாகிஸ்தானில் சீனா இறக்கும் ஆயுதங்கள்: இந்தியாவுக்கு அதிர்ச்சி ..!
ஆனால், ராணுவ அமைப்புகள் அவரது சகோதரர் ஷெபாஸ் ஷெரிப்பை பிரதமராக தேர்ந்தெடுத்ததால், அவர் பின்னுக்குத் தள்ளப்பட்டார். இப்போது, நவாஸ் ஒரு கலாச்சார பாதுகாவலர் என்ற பாத்திரத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். பழைய லாகூரை மீட்டெடுப்பது “தேசிய கடமை” என்று அவர் தெரிவித்துள்ளார்.
பழைய லாகூர் மிகவும் அழகாக உள்ளது, அதை அதன் அசல் வடிவத்தில் மீட்டெடுக்க வேண்டும் என்று கூறி, வால்டு சிட்டி ஆணையத்திற்கு ஒரு விரிவான மறுசீரமைப்பு திட்டத்தை தயாரிக்க உத்தரவிட்டார்.
இந்த நியமனம், சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான எதிர்க்கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) இடமிருந்து கடுமையான விமர்சனங்களை பெற்றது. PTI மூத்த தலைவர் ஷௌகத் பஸ்ரா, நவாஸின் புதிய “வேலையை” கேலி செய்தார். “ஓய்வுபெற்ற அரசியல்வாதியை” பிஸியாக வைத்திருக்க இது உதவும் என்றும், PML-N மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் மோசடி செய்யப்பட்டதாக PTI குற்றம்சாட்டியதை சுட்டிக்காட்டினார்.
“மரியம் அவருக்கு சில வேலைகளை கொடுத்துள்ளார், பழைய கட்டடங்களை மீட்டெடுப்பது அவரது உடல்நிலைக்கு ஏற்றது,” என்று எதிர்க்கட்சியைச் சேர்ந்த பஸ்ரா கிண்டலாக கூறியுள்ளார். நவாஸ் இனி “சுவர் நகரத்தின் பழைய சின்னங்களை கண்காணிப்பவராக” காணப்படுவார் என்று இம்ரான் கான் கட்சி கிண்டலடித்துள்ளது.
மூன்று முறை ஒரு நாட்டின் பிரதமராக இருந்தவர் வாரிய தலைவர் ரேஞ்சுக்கு கீழே இறங்கி மகளின் உதவியோடு பதவியை பெற்றிருப்பது பாகிஸ்தானில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: தொப்பியில் 804 என்று எழுதிய பாக். வீரர்... ஒரு மில்லியன் அபராதம்; காரணம் என்ன?