‘ஒரே நாடு ஒரே தேர்தல்’: நாடாளுமன்ற கூட்டுக்குழு இன்று கூடுகிறது: பிரியங்கா காந்தி, சுப்ரியா சுலே பங்கேற்பு
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா குறித்து ஆய்வு செய்ய நாடாளுமன்றக் கூட்டுக்குழு இன்று முதல்முறையாகக்கூடுகிறது.
இந்தக் கூட்டுக்குழுவில் காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி, அனுராக் தாக்கூர், சுப்ரியா சுலே உள்ளிட்ட பல எம்பி.க்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த கூட்டுக்குழுவின் தலைவராக பிபி சவுத்ரி உள்ளார்.
நாடு முழுவதும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளுக்கும், நாடாளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நோக்கில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா கடந்த குளிர்காலக்கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த மசோதாவுக்கு மக்களவையில் கடும் எதிர்ப்புக் கிளம்பியதையடுத்து இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
பாஜக எம்.பி. பிபி சவுத்திரி தலைமையில் நாடாளுமன்றக் கூட்டுக் குழுக் கூட்டம் அமைக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, தேசியவாதக் காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே, மணிஷ் திவாரி,திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி, பன்சூரி சுவராஜ், அனுராக் சிங் தாக்கூர், சஞ்சய் ஜா(ஐக்கிய ஜனதா தளம்), ஸ்ரீகாந்த் ஷிண்டே உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இது தவிர மாநிலங்களவை எம்பிக்களும் உள்ளனர்.
இந்த நாடாளுமன்றக் கூட்டுக்குழுவில் மக்களவை எம்.பிக்கள் 27 பேரும், மாநிலங்களவையில் இருந்து 12 பேரும் இடம் பெற்றுள்ளனர்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை 1950ம் ஆண்டு இயற்றியபின் 1951 முதல் 1967 வரை அனைத்து மாநிலங்களுக்கும், மக்களவைக்கும் ஒரே நேரத்தில்தான் தேர்தல் நடந்தது. குறிப்பாக 1952, 1957, 1962, 1967 ஆகிய ஆண்டுகளில் ஒரே தேர்தல்தான் நடத்தப்பட்டது. ஆனால், அதன்பின், புதிய மாநிலங்கள் உதயமானபின், மாநிலத்தின் சட்டப்பேரவைக் காலத்துக்கு ஏற்ப மாநிலங்களுக்கு தனித்தேர்தலும் மக்களவைக்கு தனித் தேர்தலும் நடத்தப்பட்டன. 1968 மற்றும் 1969களில் பல்வேறு சட்டப்பேரவைகள் கலைக்கப்பட்டதையடுத்து, ஒரே நாடு ஒரே தேர்தல் முறை ஒழிக்கப்பட்டது.
இந்நிலையில் தேர்தல் நடத்தும் செலவு அதிகரித்து வருகிறது, ஒவ்வொரு ஆண்டும் சில மாநிலங்களுக்கு தேர்தல் நடத்தும்போது தேவையற்ற செலவுகள் தேர்தல் ஆணையத்துக்கு வருவதைக் குறைக்கும் வகையில் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை மத்திய அரசு கொண்டு திட்டமிட்டது.
இதையும் படிங்க: இந்தியாவில் வாக்காளர்கள் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?.. அடேயப்பா, கேட்டா அசந்து போய்டுவீங்க
இதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைத்து ஒவ்வொரு மாநிலத்தின் சார்பிலும் கருத்துக்கள் கேட்கப்பட்டு அந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையின் அடிப்படையில் கடந்த குளிர்காலக் கூட்டத்தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் கண்டனமும், எதிர்ப்பும் கிளம்பியது, இந்த மசோதாவில் உள்ள பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட வேண்டும், நீக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்ததையடுத்து, நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு ..வேட்பளார் தேர்வு தீவிரம் ..!