கோமாளித்தனமான வக்பு சட்டம்.. காங்கிரஸ் ஆட்சியில் ரத்து.. இஸ்லாமியர்களுக்கு ப.சிதம்பரம் வாக்கு.!
காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வக்பு வாரிய சட்டத் திருத்தம் ரத்தாகும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் வக்பு வாரிய சட்டத் திருத்தத்தை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பங்கேற்று பேசினார். "திமுக கூட்டணி கட்சிகள் அனைத்தும் முஸ்லிம்களுக்கு ஆதரவாக உள்ளன. மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வக்பு வாரிய சட்ட திருத்தத்தை ரத்து செய்வோம். இச்சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்கில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி வாதாடும். உச்ச நீதிமன்றம் நீதியின் பக்கமும் நியாயத்தின் பக்கமும் நின்று உறுதியாக தீர்ப்பு அளிக்கும் என நான் நம்புகிறேன்.
எனவே, முஸ்லிம்கள் தெருக்களில் இறங்கி போராட வேண்டாம். வாக்கு என்கிற மிகப் பெரிய ஆயுதம் உங்களிடம் உள்ளது. அது இருக்கும் வரை உங்களிடம் இருந்து உரிமைகளை யாரும் பறிக்க முடியாது. பறிப்போவது போல் தோன்றும், ஆனால், இறுதியில் வாக்கு என்கிற ஆயுதம்தான் வெல்லும். இனி வரும் தேர்தல்களில் உங்கள் சமுதாயத்தையும் மதக் கோட்பாடுகளையும் யார் காப்பாற்றுகின்றனர். எதிர்க்கின்றனர் என்பதை தெளிவாக அறிந்து உங்கள் வாக்கு என்கிற ஆயுதத்தைப் பயன்படுத்துங்கள். இங்கு முஸ்லிம்களுக்கும், இந்துக்களுக்கும் சண்டையே கிடையாது.
ஒரு சில அதிதீவிரவாதிகள் முஸ்லிம்களை பகைவர்களாக கருதலாம். ஆனால், நாங்கள் எப்போதும் உங்களைப் பகைவர்களாகக் கருத மாட்டோம். எங்களுக்கு நீங்கள் ஆதரவாக இருங்கள், உங்களுக்கு நாங்கள் ஆதரவாக இருப்போம். வக்பு வாரிய சட்டத் திருத்தம் என்பது மோசமானது. இச்சட்டத்தை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். இச்சட்டம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கும். அச்சட்டத்தில் முஸ்லிம் அல்லாதவர்களும் வாரியத்தில் இருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இது முஸ்லிம்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட பிரத்யேக தாக்குதல். இந்துக் கோயில்களுக்கு இஸ்லாமியர்களை நியமித்தால் புரட்சியே வெடித்து விடும்.
இதையும் படிங்க: வக்ஃபு மசோதாவை எதிர்த்த 300 முஸ்லிம்களுக்கு நோட்டீஸ்: உ.பி. போலீஸார் நடவடிக்கை..!
மற்ற நாடுகளில் எந்தவொரு மத வழிபாட்டு தளங்களையும் மற்றொரு மதத்தவர் நிர்வகித்ததாக கூற முடியாது. ஒரு சமுதாயத்தை பழிவாங்க, மிரட்ட வேண்டும் என்பதற்காகக் கோமாளித்தனமான சட்டத்தை கொண்டு வந்துள்ளனர். நாடே உங்களுக்கு ஆதரவாக உள்ளது. இந்தியா இன்னும் ஜனநாயக நாடாகத்தான் உள்ளது. சில நீதிபதிகள் தவறு செய்தாலும், உச்ச, உயர் நீதிமன்றங்களில் பெருமான்மையின நீதிபதிகள் நேர்மையாக இருக்கிறார்கள். அதனால் அரசியல் சாசனபடி, சட்டப்படிதான் தீர்ப்பளிப்பார்கள்" என்று ப. சிதம்பரம் பேசினார்.
இதையும் படிங்க: முஸ்லிம்களுக்கான கல்வித் திட்டங்களுக்கு 4 ஆண்டுகளாக நிதி தொடர் குறைப்பு... மதரஸா, வக்ஃபுக்கு நிதியில்லை..!