உயிரோடு விட்ருங்க.. காலில் விழுந்து கெஞ்சினோம்..! பாக். ஜாபர் எக்ஸ்பிரஸ் திகில் சாட்சி..!
எங்களை உயிரோடு விட்டுவிடுங்கள் என்று அவர்களின் காலில் விழுந்து கெஞ்சியதாக கடத்தப்பட்ட ரயிலில் இருந்து மீட்கப்பட்ட பயணி கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த பயங்கரமான தீவிரவாத தாக்குதலில், பலூசிஸ்தான் விடுதலை இராணுவம் (BLA) தீவிரவாதிகள் கச்சி மாவட்டத்தில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை கடத்தி, பாதையை விட்டு விலகச் செய்து, 100-க்கும் மேற்பட்ட பயணிகளை பிணைக் கைதிகளாக்கினர்.
ரயிலில் நடந்த கடத்தல் காட்சிகளை, நேரடியாக பார்த்த ஒரு பயணி நடந்தவற்றை விவரித்த போது அடி வயிறு கலக்கும் வகையில் இருந்தது. ரயிலை உலுக்கிய அச்சத்தின் தருணங்களை தத்ரூபமாக அவர் விவரித்தார்.
“தீவிரவாதிகள் ரயிலை கடத்தி விட்டார்கள் என தெரிந்ததுமே அவர்களை பார்த்தவுடன் நாங்கள் கத்தினோம், சிலர் படுத்துவிட்டனர். நானும் அதையே செய்தேன்; உயிரைக் காக்க எல்லோரும் படுத்தனர்,” என்று அந்த பயணி திகில் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
இதையும் படிங்க: 27 தீவிரவாதிகளை போட்டு தள்ளிய பாக். ராணுவம்..! 155 ரயில் பயணிகள் உயிரோடு மீட்பு..!
நிலைமை பயங்கர கனவாக மாறியதை விவரித்த அவர், “சில குண்டு வெடிப்புகள் இருந்தன, நாங்கள் உயிரைக் எடுக்க வேண்டாம் விட்டுவிடுங்கள் என கெஞ்சினோம்,” என்று கூறினார். வன்முறைக்கு மத்தியில், தாக்குதல்காரர்கள் சிலரை விடுவித்தபோது, “பின்னால் திரும்பி பார்க்க வேண்டாம் என்று எச்சரித்தனர். என் மனைவி உட்பட சிலர் தப்பித்துச் சென்றனர்.
கச்சி ஏற்கனவே தீவிரவாதிகளின், கலகத்தால் பாதிக்கப்பட்ட பகுதியாகும். அங்கு ஆயுதமேந்திய தீவிரவாதிகள் ரயிலை தடம்புரளச் செய்து ரயிலை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பாகிஸ்தான் பாதுகாப்பு படைகள் உடனடியாக பெரிய அளவிலான நடவடிக்கையை தொடங்கி, தாக்குதல்காரர்களை அழித்து பிணைக் கைதிகளை மீட்க முயன்றன. தீவிர துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும், தீவிரவாதிகள் சிறு குழுக்களாக பிரிந்து தப்ப முயன்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறைந்தது 27 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், மீதமுள்ள பிணைக் கைதிகளின் பாதுகாப்பு குறித்து அச்சம் நீடிப்பதாகவும் அங்கு நிலவும் செய்திகள் கூறுகின்றன. பெரும்பாலான பயணிகள் மீட்கப்பட்டாலும், உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சம் உள்ளது.
இந்த துணிச்சலான தாக்குதல், பலூசிஸ்தானில் பிரிவினைவாத குழுக்கள் அரசுக்கு எதிராக நடத்தும் நீண்டகால போராட்டத்தால் ஏற்படும் பாதுகாப்பு சவால்களை வெளிப்படுத்துவதாக உள்ளது என பாகிஸ்தான் விவகாரங்களை கூர்ந்து கவனிக்கும் பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர்.
மோதல் நடந்து வந்த பகுதிகளில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் ஆபத்தை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது. ஜாஃபர் எக்ஸ்பிரஸ் தாக்குதல், அந்தப் பகுதியின் நிலையற்ற தன்மையை தெள்ளத் தெளிவாக படம் பிடித்துக் காட்டியது . விசாரணைகள் தொடரும் நிலையில், அதிகாரிகள் இந்த தாக்குதலின் முழு விவரங்களை ஒருங்கிணைத்து, பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: 400 பேருடன் ரயில் கடத்தல்: பாகிஸ்தானுக்கு இந்த விஷயத்திலும் இந்தியாதான் ஹெட் மாஸ்டரு..!