பிரதமர் மோடி போன பிறவியில் சத்ரபதி சிவாஜியாக பிறந்தார்.. பாஜக எம்.பி.யின் பேச்சால் மராட்டியத்தில் வெடித்த சர்ச்சை..!
பிரதமர் மோடி முந்தைய ஜென்மத்தில் மராத்திய மன்னரான சத்ரபதி சிவாஜியாக பிறந்தார் என்று மக்களவையில் பேசிய பாரதிய ஜனதா எம்.பி. ப்ரதீப் புரோஹித் கருத்து மகாராஷ்டிர மாநிலத்தில் பல்வேறு சர்ச்சைகளுக்கு வித்திட்டுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நேற்று இரவு 9.30 மணியளவில் ஒடிசா மாநிலத்தின் பர்கார் தொகுதியைச் சேர்ந்த ப்ரதீப் புரோஹித் என்ற எம்.பி. உரையாற்றினார். அப்போது, தான் ஒரு ஜோசியரை சென்று சந்தித்ததாகவும், நரேந்திர மோடியின் ஜாதகத்தை காண்பித்ததாகவும் அதனை கணித்து பார்த்து போது பல ஆச்சர்யங்கள் தெரிய வந்ததாகவும் கூறினார். அதாவது, போன பிறவியில் வீரசிவாஜியாக பிறந்தவர் தான் இந்த ஜென்மத்தில் நரேந்திர மோடியாக பிறந்துள்ளார் என அந்த ஜோசியர் கூறியதாக எம்.பி.ப்ரதீப் கூறினார். அதனால் தான் யாருக்கும் அஞ்சாமல் வீரதீர செயல்களை நரேந்திர மோடி செய்து வருவதாக அவர் புகழாரம் சூட்டினார்.
ஒடிசா எம்.பி.ப்ரதீப் புரோஹித்தின் இந்த பேச்சுக்கு அப்போதே அவையில் எதிர்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், இன்று மகாராஷ்ட்ர மாநிலத்தைச் சேர்ந்த பல கட்சிகள் இந்த கருத்து கடும் எதிர்வினையாற்றி வருகின்றனர். அதேபோன்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பலரும் எம்.பி.யை கடுமையாக ஏளனம் செய்து விமர்சித்து வருகின்றனர். வரலாற்றில் அரிய பல செயல்களை செய்த வீர புருஷர்களை நடப்பு மனிதர்களோடு ஒப்பீடு செய்வதே தவறு என்றும் இதற்கு பாஜக எம்.பி.மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் அவர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தொடரும் மீனவர்கள் கைது.. ஓயாத அட்டூழியம்.. மத்திய அமைச்சருக்கு கனிமொழி கடிதம்..!
மகாராஷ்ட்ர காங்கிரசின் முக்கியத் தலைவரான வர்ஷா கெய்க்வாட் இதுபற்றி பேசும்போது, சத்ரபதி சிவாஜியை இழிவு செய்ய இதைவிட வேறொரு ஒப்பீடு இருக்க முடியாது என்று காட்டத்துடன் குறிப்பிட்டார். உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவைச் சேர்ந்த ப்ரியங்கா சதுர்வேதி தனது எக்ஸ் பக்கத்தில், இத்தகைய பாஜக மனநோயாளிகளை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் என்றார். சிவாஜியுடன் மோடியை ஒப்பிட்டு பேசியதை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
சத்ரபதி சிவாஜியாக பிறந்ததற்கும், இப்போது நரேந்திர மோடியாக பிறந்ததற்கும் இடைப்பட்ட காலங்களில் அவர் என்னவாக பிறந்தார் என்பதையும் இந்த மூடர்கள் கண்டுபிடித்து சொல்ல வேண்டியது தானே என்று பாஜக எம்.பி.யின் பேச்சு சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2020-ம் ஆண்டு பாஜகவின் ஜெய் பக்வான் கோயல் என்பவர், நம் காலத்து சிவாஜி, நரேந்திரமோடி என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதி இருந்தார். அப்போதும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
இதையும் படிங்க: மோடி prime minister இல்ல! Picnic minister - மாநிலங்களவையில் வைகோ ஆவேசம்