ஆவலுடன் காத்திருக்கிறோம் சுனிதா.. பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்.. நெகிழ்ச்சியாக கடிதம் எழுதிய மோடி..!
சர்வதேச விண்வெளி மையத்தில் 9 மாதங்கள் தங்கி இருந்து மீண்டும் பூமி திரும்பி உள்ள இந்திய வம்சாவெளி அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்து பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 8 நாள் பயணமாக விண்வெளி நிலையம் சென்றனர். பணி முடிந்த பிறகும், தொழில்நுட்ப காரணங்களால் இரண்டு விண்வெளி வீரர்களும் அங்கேயே சிக்கிக் கொண்டனர்.
9 மாதங்களுக்கு மேலாக விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பத்திரமாக பூமிக்கு கொண்டு வருவதற்கு நாசா உடன் இணைந்து எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் அதற்கான முயற்சியில் ஈடுபட்டது. அதன்படி, கடந்த மார்ச் 14 அன்று இரவு 7 மணியளவில் அவர்கள் இருவரையும் மீட்க புளோரிடாவில் இருந்து க்ரூ டிராகன் விண்ணில் புறப்பட்டு சென்றது.
வெற்றிகரமாக அந்த விண்கலம் விண்வெளி மையத்தை அடைந்தது. இதை அடுத்து ஒன்பது மாத கால நீண்ட இடைவெளிக்கு பிறகு அங்கிருந்து இருவரும் இந்திய நேரப்படி காலை 10:35 மணிக்கு டிராகன் விண்கலத்தில் பூமிக்கு புறப்பட்டனர். அவர்கள் 17 மணி பயணத்திற்கு பிறகு அமெரிக்க கிழக்கு நேரப்படி (ET): மார்ச் 18, 2025, மாலை 5.57 மணி (PM), இந்திய நேரப்படி (IST), மார்ச் 19, 2025, அதிகாலை 3.27 மணிக்கு அவர்கள் பூமியில் டிராகன் விண்கலம் மூலம் தரையிறங்க உள்ளனர். உலகமே அவர்கள் பூமிக்கு திரும்புவதை பார்க்க ஆவலுடன் காத்துள்ளது.
இதையும் படிங்க: பாகிஸ்தானின் பயங்கரவாதத் துரோகம்... ஆனாலும், அம்மக்கள் பாவம்..! கவலைப்படும் மோடி..!
இந்த நிலையில், மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், அமெரிக்கா பயணத்திற்கு பின்னர் சுனிதா வில்லியம்ஸ் குறித்து பிரதமர் மோடி எழுதிய கடிதத்தை தற்போது வெளியிட்டுள்ளார். அந்த கடிதத்தில் பிரதமர் மோடி குறிப்பிட்டு இருப்பதாவது; இந்திய மக்களின் வாழ்த்துக்களை நான் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். அமெரிக்க சென்றிருந்த போது ஒரு நிகழ்ச்சியில், பிரபல விண்வெளி வீரர் மைக் மாசிமினோவை சந்தித்தேன். எங்கள் உரையாடலின் போது, உங்கள் பெயர் வந்தது, உங்களைப் பற்றியும் உங்கள் பணியைப் பற்றியும் நாங்கள் எவ்வளவு பெருமைப்படுகிறோம் என்பதைப் பற்றி விவாதித்தோம். அந்த உரையாடலைத் தொடர்ந்து, உங்களுக்கு கடிதம் எழுதாமல் என்னால் இருக்க முடியவில்லை.
நான் அமெரிக்காவிற்கு வருகை தந்தபோது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் முன்னாள் அதிபர் பைடனை சந்தித்தபோது, உங்கள் நலம் குறித்து விசாரித்தேன். 1.4 பில்லியன் இந்தியர்கள் எப்போதும் உங்கள் சாதனைகளில் மிகுந்த பெருமை கொண்டுள்ளனர். சமீபத்திய முன்னேற்றங்கள் மீண்டும் உங்கள் ஊக்கமளிக்கும் மன உறுதியையும் விடாமுயற்சியையும் வெளிப்படுத்தியுள்ளன.
நீங்கள் ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் இருந்தாலும், நீங்கள் தொடர்ந்து எங்கள் இதயங்களுக்கு நெருக்கமாக இருக்கிறீர்கள். இந்திய மக்கள் உங்கள் நல்ல ஆரோக்கியத்திற்காகவும் உங்கள் பணியில் வெற்றி பெறவும் பிரார்த்தனை செய்கிறார்கள். உங்கள் தாயார் போனி பாண்டியா உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பார், மறைந்த உங்கள் தந்தை தீபக் பாண்டியாவின் ஆசீர்வாதங்களும் உங்களுடன் இருக்கும் என்று நான் நம்புகிறேன். 2016 ஆம் ஆண்டு நான் அமெரிக்காவிற்குச் சென்றபோது அவரை உங்களுடன் சந்தித்ததை நான் அன்புடன் நினைவில் கொள்கிறேன்.
நீங்கள் திரும்பிய பிறகு, இந்தியாவில் உங்களைப் பார்க்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். இந்தியா தனது மிகவும் புகழ்பெற்ற மகள்களில் ஒருவரை வரவேற்பது மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் கணவர் மைக்கேல் வில்லியம்ஸுக்கு எனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கும் திரு. பாரி வில்மோருக்கும் பாதுகாப்பாக திரும்ப எனது வாழ்த்துக்கள் என பிரதமர் மோடி அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஆர்.எஸ்.எஸ் மோடி வாழ்க்கையில் எவ்வளவு முக்கியத்துமானது..? நெகிழ்ந்து சொன்ன பிரதமர்..!