×
 

உளவுத்துறையில் கூட்டுறவு: அமெரிக்க உளவுத்துறை தலைவர் துள்சி கப்பார்டுடன் பிரதமர் மோடி சந்திப்பு

தீவிரவாதத்தால் எழுந்துவரும் அச்சுறுத்தல்களை சமாளிக்கவும், தகுந்த பதிலடி தரவும் இரு நாடுகளும் உளவுத்துறை கூட்டுறவுடன் செயல்பட வேண்டும் என்று அமெரி்க்க உளவுத்துறை தலைவர் துள்சி கப்பார்டுடன், பிரதமர் நரேந்திர மோடி இடையிலான சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி, பிரான்ஸ், அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணமாகச் சென்றுள்ளார். பிரான்ஸ் பயணத்தை முடித்த பிரதமர் மோடி, அமெரிக்காவுக்கு இந்தியநேரப்படி அதிகாலை 4 மணிக்கு சென்றார். பிரதமர் மோடிக்கு அமெரிக்காவில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்காவின் உளவுத்துறை தலைவராக இந்து-அமெரிக்கப் பெண் துள்சி கப்பார்டு புதன்கிழமை அதிகாரபூர்வமாக பதவிஏற்றார். துள்சி கப்பார்டை நேரில் சந்தித்த பிரதமர் மோடி அவருக்கு இந்தியா சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில் “ அமெரிக்க உளவுத்துறை தலைவர் துளசி கப்பார்டை வாஷிங்டன் டிசி நகரில் இன்று சந்தித்தேன். புதிதாக பதவி ஏற்றுள்ள துளசி கப்பார்டுக்கு வாழ்த்துக்களை இந்தியா சார்பில் தெரிவித்தேன். இந்தியா-அமெரிக்கா இடையிலான நட்புறவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும், இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசித்தோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில் “ பிரதமர் மோடி, அமெரிக்க உளவுத்துறை தலைவர் துள்சி கப்பார்டு இடையிலான பேச்சின்போது தீவிரவாதத்தை ஒழிப்பது, அதனால் எழுந்துவரும் அச்சுறுத்தல்களை சமாளிப்பது, சைபர்பாதுகாப்பு அதற்காக இருதரப்பு நாடுகளிடையே உளவுத்துறையை கூட்டுறவுடன் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. துள்சி கப்பார்டுடன் பிரதமர் மோடியின் சந்திப்பு மிகுந்த ஆக்கப்பூர்வமாக நடந்தது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி.. "பாரத் மாதா கி ஜே" என வாஷிங்டனில் உற்சாக வரவேற்பு..

இதனிடையே அமெரிக்க அதிபராக 2வதுமுறை பதவி ஏற்றுள்ள அதிபர் டொனால்ட் ட்ரம்பை வெள்ளைமாளிகையில்இன்று பிரதமர் மோடி சந்தித்துப் பேச உள்ளார். அமெரிக்க உளவுத்துறை தலைவராக பதவி ஏற்றுள்ள துள்சி கப்பார்டுக்கு அட்டர்னிஜெனரல் பாம் போன்டி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். துள்சி கப்பார்டு குறித்து அதிபர் ட்ரம்ப் பேசுகையில் “ துள்சி கப்பார்டு மிகமிக துணிச்சல் மிக்கவர், அமெரிக்கா மீது மிகுந்த தேசப்பக்தி கொண்டவர். 3முறை ராணுவ பாதுகாப்பு அதிகாரியாகவும் இருந்தவர். ஜனநாயகக் கட்சி சார்பில் ஹவாய் எம்.பி.யாக இருந்தார் என்றால் நம்பமுடிகிறதா” என புகழாரம் சூட்டினார்.

அதிபர் ட்ரம்ப் தன்மீது வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கைக்கு துள்சி கப்பார்டு நநன்ரி தெரிவித்தார். அப்போது அவர் பேசுகையில் “ துரதிர்ஷ்டமாக அமெரிக்க மக்கள் உளவுத்துறை மீது குறைவான நம்பிக்கையே வைத்துள்ளனர். ஏனென்றால், ஆயுதமயமாக்கல், அரசியல்மயமாக்கலால் தேசிய பாதுகாப்பு மட்டுமே அவர்களால் கவனிக்க முடிகிறது” எனத் தெரிவித்தார். அமெரிக்க உளவுத்துறை தலைவராக துள்சி கப்பார்டை நியமிக்க செனட் வாக்கெடுப்பில் 52 பேர் ஆதரவாக வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆர்வம் என்பது பொது நலனுக்கு சமம் அல்ல.. பிரதமரின் கல்வித் தகுதிகளை வெளியிட முடியாது - டெல்லி பல்கலை., விளக்கம்! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share