தங்கம் இருந்தும் அடகு வைக்க முடியாத நிலை... மக்கள் தலையில் கல்லை போட்ட ஆர்.பி.ஐ!!
வங்கி நகை அடகு குறித்த ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறை மக்களை கடும் சிரமத்திற்குள்ளாக்கியுள்ளது.
மிடில்கிளாஸ் மக்களுக்கு அவசரமாக பணம் தேவைப்பட்டால் அவர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது நகையை வங்கியில் அடகு வைப்பது தான். ஏழை மற்றும் நடுத்தர வர்கத்தினர் பலர் நகைக்கடன்களையே பெரிதும் நம்பியுள்ளனர். குறைந்த வட்டியில் பாதுகாப்பான மற்றும் நம்பகமான கடன் பெறும் வழியாக வங்கி நகைக்கடன் இருந்துவருகிறது. ரிசர்வ் வங்கியின் பழைய விதிமுறைபடி, ஒவ்வொரு ஆண்டும் வங்கிகளில் நகை அடகு வைத்ததற்கான வட்டியை மட்டும் செலுத்தினாலே, அதே நாளில் நகையை மீட்டு மறு அடகு வைக்க முடியும்.
இந்த முறை மூலம் குறைந்த செலவில் நகை ஏலம் விடப்படுவதை தடுப்பதோடு நகையை அடகு வைத்தவருக்கும் பயனுள்ளதாகவும் இருந்தது. இதனிடயே ரிசர்வ் வங்கி தங்க நகை அடகு விதிகளில் மாற்றம் கொண்டுவரப்படுவதாக அறிவித்திருந்தது. அதன்படி, 2025-2026 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் வருமான வரி தளர்வு உள்ளிட்ட பல்வேறு புதிய அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன.
இதையும் படிங்க: இந்தியாவை பாரத் என்ற பெயரிலேயே அழைக்க வேண்டும்... ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அதிரடி.!
அதில் வங்கி நகை அடகு குறித்த புதிய விதிமுறை வெளியிடப்படும் எனவும் அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து இந்திய ரிசர்வ் வங்கியும் நகை அடகு குறித்த புதிய விதிமுறைகளை வெளியிட்டதோடு மார்ச் 31ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவித்தது. அதன்படி, நகைகளை அசல் மற்றும் வட்டியுடன் முழுமையாகச் செலுத்தி மீட்டு, நகையைத் திருப்பிய மறுநாள் தான் மீண்டும் அதே நகைகளை அடகு வைத்துப் பணம் பெற முடியும். இதனால் கடன் வாங்கியவர்கள் முழுப் பணத்தையும் திரட்ட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
இந்த புதிய விதிகள் மார்ச் 31 ஆம் தேதி முதல் தான் அமலுக்கு வரும் என கூறப்பட்டாலும் அதற்கு முன்னதாகவே வங்கிகளும் வர்த்தகர்களும் புதிய நிபந்தனைகளை விதிப்பதாக குற்றச்சாட்டு எழுகிறது. ரிசர்வ் வங்கியின் இந்த புதிய அறிவிப்புக் கடினமானதாக மாற்றியுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனர். மேலும் இந்த புதிய விதிமுறையால் தங்கம் கையில் இருந்தும் அதனை அவசர தேவைக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் மோசடி உள்ளிட்டவற்றை தவிர்க்கவே இந்த புதிய விதிமுறையை ரிசர்வ் நடைமுறைப்படுத்துவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: கொரோனாவால் அதிக வட்டி... ரிசர்வ் வங்கிக்கு ஆர்டர் போட்ட சென்னை கோர்ட்!!