×
 

அவமதிப்பு, ஆர்ப்பாட்டம்; பேரவையில் கொதித்தெழுந்த ஆளுநர் ஆர்.என்.ரவி - சட்டப்பேரவைக்குள் நடந்தது என்ன?

சட்டப்பேரவை துவக்கத்தில் தேசிய கீதம் பாட ஆளுநர் வேண்டுகோள் விடுத்தது ஏற்கப்படாததால் ஆளுநர் வெளியேறியதாக ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

சட்டப்பேரவை துவக்கத்தில் தேசிய கீதம் பாட ஆளுநர் வேண்டுகோள் விடுத்தது ஏற்கப்படாததால் ஆளுநர் வெளியேறியதாக ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

2023ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை கூட்டத்தின் போது பெரியார், அறிஞர் அண்ணா, கருணாநிதி, திராவிட மாடல் போன்ற வார்த்தைகளை ஆளுநர் ஆர்.என்.ரவி தவிர்த்தார். கடந்த 2 ஆண்டுகளாகவே ஆளுநரின் உரை சர்ச்சையில் முடிந்த நிலையில் இந்த ஆண்டு எப்படியிருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. பேரவையில் ஆளுநர் என்ன பேசப்போகிறார் என்பதை கேட்க ஒட்டுமொத்த அரசியல் வட்டாரமும் ஆவலுடன் காத்திருந்தனர். 2025ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவையைத் தொடங்கிவைப்பதற்காக இன்று காலை 9.30 மணிக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதையுடன் அழைத்து வந்தனர்.  

ஆனால் ஆளுநர் பேரவைக்குள்ளே வந்ததும் அண்ணா பல்கலைகழக வளாகத்திலேயே மாணவி பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் தொடர்பான பதாகைகளைக் கையில் ஏந்தி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அமைதியாக இருக்கும் படியும், அவரவர் இடங்களில் சென்று அமரும் படியும், சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டதாக தெரிகிறது. இதனிடையே, சட்டப்பேரவைக்குள் நிகழும் கூச்சல், குழப்பத்தை கட்டுப்படுத்த தேசிய கீதத்தை இசைக்கும் படி ஆளுநர் ஆர்.என்.ரவி சபாநாயகரிடம் கூறியதாக தெரிகிறது. ஆனால் ஆளுநர் இதனைத் தெரிவித்துக்கொண்டிருந்த மறுநிமிடமே அவையில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கத் தொடங்கியுள்ளது. 

இதையும் படிங்க: ஆளுநர் உரையை உதறித் தள்ளிவிட்டு... சட்டப்பேரவையை விட்டு வேக, வேகமாக வெளியேறிய ஆளுநர் ஆர்.என்.ரவி!

தமிழ்தாய் வாழ்த்து முடிந்ததும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் இருக்கை முன்பு கூடிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் ஆகியோர் அவரைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பியுள்ளனர். மற்றொருபுறம் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் திமுக அரசைக் கண்டித்து அதிமுகவினர் முழக்கங்களை எழுப்பியுள்ளனர். இந்த களோபரத்திற்கு இடையே தனது உரையைத் தொடர முடியாததால் தான் ஆளுநர் ஆர்.என்.ரவி அவசர அவசரமாக அவையை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து ஆளுநர் மாளிகை அளித்துள்ள விளக்கத்திலும் மீண்டும் ஒருமுறை தேசியகீதம் அவமதிக்கப்பட்டிருப்பதாகவும், தேசிய கீதம் இசைக்காததால் சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என். ரவி வெளியேறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதுகுறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி பதிவிட்ட ட்விட்டர் பதிவு சற்று நேரத்திலேயே நீக்கப்பட்டது. சட்டப்பேரவையில் நிகழ்ச்சி தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிகழ்ச்சி இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படுவதும் மரபு ஆகும்.

 எனினும், தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்ததும் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்று கடந்த முறையும் ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது. 
 

இதையும் படிங்க: ‘யார் அந்த சார்?’ சட்டை; சட்டப்பேரவைக்குள் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் செய்த தரமான சம்பவம்! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share