×
 

பெண்களின் சபரிமலை... ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் 30 லட்சம் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு..!

திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் நடந்த பொங்கல் விழாவில் 30 லட்சம் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

கேரளா மாநிலத்தில் பிரசித்த பெற்ற ஆலயங்களுள் மிக முக்கியமானது திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் திருக்கோவில். மதுரையை எரித்த கண்ணகி குழந்தையாக கிள்ளியாற்றின்கரையில் அவதரித்த நாளான மாசிமாதம் பூரம் நட்சத்திரத்தில் பௌர்ணமி நாள், ஆற்றுகால் பொங்கல் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

மதுரையை எரித்த கோவத்திலிருந்த கண்ணகியை பெண்கள் பொங்கலிட்டு அமைதிபடுத்தி வழிபட்டனர்  என்பது வரலாறு. அதன் காரணமாக ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான பெண்கள் விரதமிருந்து பொங்கலிட்டு அம்மனை வழிபட்டு வருகின்றனர். 

அதன்படி, இந்த ஆண்டுக்கான ஆற்றுகால் பொங்கல் விழா  கடந்த 5 ஆம் தேதி அம்மனுக்கு காப்புகட்டி  குடியிருத்தலுடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான பொங்கல் வைக்கும் வைபவம் இன்று நடைபெற்றது. முன்னதாக ஆற்றுகால் பகவதி அம்மன் ஆலய முன்பாக அமைக்கப்பட்டிருந்த பண்டார அடுப்பில் ஆலய மேல்சாந்தி ஈஸ்வரன் நம்பூதிரி தீ மூட்டினார். இதையடுத்து திருவனந்தபுரம் மாநகர பகுதிகளான தம்பானூர், மணக்காடு, கிழக்கேகோட்டா, அம்பலதற, பாளையம் வெள்ளையம்பலம், சாக்கை ஈஞ்சக்கல் உட்பட நகரின் அனைத்து முக்கிய பகுதிகளிலும் பெண்கள் திரளாக குவிந்து சாலைகளிலும் வீட்டு வளாகங்களிலும் பொங்கலிட்டு வழிபட்டனர். சுமார் 30லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று பொங்கலிட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கப்பிரதட்சணம்.. தனிநீதிபதியின் தீர்ப்புக்கு தடைவித்த உயர்நீதிமன்றம்..!

மதுரை எங்கே இருக்கிறது? திருவனந்தபுரம் எங்கே இருக்கிறது?..  மதுரையை எரித்த கண்ணகி எதற்காக திருவனந்தபுரம் வந்தார் என்ற கேள்வி எழலாம். அதேபோன்று பூம்புகாரில் பிறந்த கண்ணகி, கிளியாற்றங்கரையில் அவதரித்ததாகவும் இங்குள்ள புராண கதைகள் கூறுகின்றன. எது எப்படியோ, தமிழ்நாட்டில் கூட கண்ணகிக்கு இந்த அளவு முக்கியத்துவம் கொடுத்து விழாக்கள் எடுக்கப்படுவதில்லை. ஆனால் மலையாள தேசத்தில் ஆற்றுக்கால் பகவதியாக்கி கண்ணகியை கொண்டாடுவது போற்றுதலுக்குரியது. 

இதேபோன்று தேனிமாவட்டத்தில் தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலையும் குறிப்பிடலாம். ஒவ்வொரு ஆண்டும் சித்ராபௌர்ணமி தினத்தில் அங்கு வழிபாடு நடத்தப்படுகிறது. அந்த கோயில் தமிழ்நாட்டிற்குள் இருந்தாலும், தேக்கடி வழியாகத்தான் அங்கு செல்ல பாதை அமைக்கப்பட்டுள்ளதால் அதனை காரணம் காட்டி அந்த கோயிலுக்கு உரிமை கோருகிறது கேரளா. ஒருவேளை கேரளாவிற்கு அந்த கோயில் சொந்தம் என்று கூறினாலும், கண்ணகி கோயில் இன்னும் வெளிச்சத்திற்கு வரும் என்று ஒருசிலர் கூறுகின்றனர். 

ஆற்றுக்கால் பகவதியோ, மங்கல தேவியோ... கண்ணகியின் புகழ்பாடும் எந்தவொரு விழாவையும் தமிழர்கள் கொண்டாட வேண்டியது கடமையாகிறது.

இதையும் படிங்க: தில்லை தீட்சிதர்களுக்கு எதிரான வழக்கு.. தள்ளுபடி செய்ய நீதிமன்றம் மறுப்பு.. கனகசபை மீது ஏறி தரிசனம் செய்வதை தடுக்க நீங்கள் யார்..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share