×
 

ரூ.1,000 கோடி மதுபான ஊழல்... டாஸ்மாக் உயரதிகாரிகளுக்கு புதிய சம்மன்..! மீண்டும் ED விறுவிறுப்பு..!

ரூ.1,000 கோடி மதுபான ஊழல் தொடர்பாக, தமிழ்நாடு மாநில சந்தைப்படுத்தல் கழகத்தின் (டாஸ்மாக்) முக்கிய அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை இயக்குநரகம் புதிய சம்மன் அனுப்பியுள்ளது.

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனையை சட்ட விரோதமானது என அறிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் நேற்று மறுத்துவிட்டது.

இந்நிலையில், ரூ.1,000 கோடி மதுபான ஊழல் தொடர்பாக, தமிழ்நாடு மாநில சந்தைப்படுத்தல் கழகத்தின் (டாஸ்மாக்) முக்கிய அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை இயக்குநரகம் புதிய சம்மன் அனுப்பியுள்ளது.

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை 60 மணி நேரம் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இதையும் படிங்க: டாஸ்மாக்கில் ரூ.10 வசூல் இப்போ மட்டும்தான் நடக்குதா..? புள்ளி விவரங்களோடு புலம்பிய செந்தில் பாலாஜி..!

இந்த வழக்குகளை முதலில் விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் செந்தில்குமார் அமர்வு, அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. பின், இந்த வழக்கின் விசாரணையில் இருந்து நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் தலைமையிலான அமர்வு விலகியதை அடுத்து, வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அமர்வில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது.

ஏப்ரல் 8-ம் தேதி முதல் இந்த வழக்கின் இறுதி விசாரணை துவங்கியது. டாஸ்மாக் தரப்பில், "அமலாக்கத் துறையின் சோதனையின் போது பெண் அதிகாரிகள் உள்ளிட்டோர் தொடர்ந்து 60 மணி நேரம் ஒரே இடத்தில் வைக்கப்பட்டிருந்தனர். ஒரு சிலர் மட்டும் நள்ளிரவு ஒரு மணியளவில் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டனர். தனிப்பட்ட தகவல்கள் அடங்கிய செல்போனை பறிமுதல் செய்வது அந்தரங்க உரிமைக்கு எதிரானது.

சோதனையின் போது, சில அதிகாரிகளை தூங்கவிடாமல் அமலாக்கத் துறையினர் மனித உரிமையை மீறியுள்ளனர். சட்டத்தை மதிக்காமல் தங்களது விருப்பத்திற்கு அமலாக்கத் துறையினர் செயல்பட்டுள்ளனர். எந்த வழக்கின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது என்பதை அமலாக்கத் துறை தெரிவிக்கவில்லை. அமலாக்கத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியது போல, ஒரு ரூபாய் கூட கைப்பற்றப்படவில்லை" என வாதிடப்பட்டது.

தமிழக அரசுத் தரப்பில், "அமலாக்கத் துறை எப்போதும் வெளிப்படையாக இருந்ததில்லை. வெளிப்படையாக இருப்பதாக ஒரு பிம்பத்தை உருவாக்கி அதன் பின்னால் அமலாக்கத் துறை ஒளிந்து கொண்டுள்ளது. அமலாக்கத் துறையின் நடவடிக்கையால் நேரடியாக டாஸ்மாக்கின் நற்பெயருக்கும், மறைமுகமாக அரசின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது. 2007-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் நிலையில், தற்போது தான் ஞானம் வந்தது போல விசாரணை நடத்துவது ஏன்?

அமலாக்கத் துறையின் நடவடிக்கை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. டாஸ்மாக்கில் முறைகேடு நடந்திருந்தால் மாநில அரசு நடவடிக்கை எடுக்கும். அமலாக்கத் துறையின் சோதனை நடந்து கொண்டிருந்த போதே, டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் மோசடி என ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் பேட்டியளித்தார். அதற்கு என்ன அர்த்தம்" எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

அமலாக்கத் துறை தரப்பில், "மாநில காவல் துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையிலேயே அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது. முறைகேடு நடந்திருப்பதாக கருதினால் அமலாக்கத் துறை விசாரணை நடத்தலாம். டாஸ்மாக் ஊழியர்கள் லஞ்சம் வாங்கியதாக முதல் தகவல் அறிக்கையில் உள்ளது. டாஸ்மாக் முறைகேடு மூலம் 1,000 கோடி ரூபாய்க்கு மேல் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்தது சோதனையில் தெரியவந்துள்ளது. டாஸ்மாக் அதிகாரிகள் எவரும் துன்புறுத்தப்படவில்லை. மனித உரிமை மீறலிலும் ஈடுபடவில்லை" என வாதிடப்பட்டது.

கடந்த ஏப்ரல் 8-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை ஐந்து நாட்கள் இந்த வழக்கில் வாத பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டன. அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், ஏப்ரல் 23-ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதிகள் அறிவித்திருந்தனர். அதன்படி, இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், அமலாக்கத் துறை சோதனையின் போது அதிகாரிகள் சிறைபிடிக்கப்பட்டதாகவும், சிலர் நள்ளிரவில் வீட்டுக்கு அனுப்பப்பட்டதாகவும் முன்வைக்கப்பட்டுள்ள வாதங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனத் தெரிவித்தார்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற குற்றம் என்பது நாட்டு மக்களுக்கு எதிரான குற்றம். நாட்டின் நலன் கருதியே சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் பொருளாதார நீதியை வழங்கியிருக்கிறது எனத் தெரிவித்துள்ளனர்.

அரசியல் பழிவாங்கும் நோக்கு, அரசியல் உள்நோக்கம் என முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து நீதிமன்றம் விசாரிக்க முடியாது. அது நீதிமன்றத்தின் வேலையும் அல்ல. ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தால் மற்றொரு கட்சி ஆளுங்கட்சி மீது குற்றச்சாட்டு கூறுவது வழக்கமானதுதான். ஆனால், நீதிமன்றம் ஆதாரங்களின் அடிப்படையில் நீதியை உறுதி செய்யவே முடியும் எனக் கூறி, தமிழக அரசும் டாஸ்மாக் நிர்வாகமும் தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், அமலாக்கத் துறை சட்டப்படி தொடர்ந்து விசாரணை நடத்த அனுமதி அளித்தும் நேற்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், ரூ.1,000 கோடி மதுபான ஊழல் தொடர்பாக, தமிழ்நாடு மாநில சந்தைப்படுத்தல் கழகத்தின் (டாஸ்மாக்) மூத்த அதிகாரிகளான நிர்வாக இயக்குநர் எஸ்.விசாகன், ஐ.ஏ.எஸ் மற்றும் பொது மேலாளர்கள் எஸ்.சங்கீதா, டி.ராம துரைமுருகன் உள்ளிட்டவர்களுக்கு  அமலாக்க இயக்குநரகம் புதிய சம்மன் அனுப்பியுள்ளது.

இதையும் படிங்க: குடிச்சுத் தூக்கு... படு ஜோர் விற்பனை... டாஸ்மாக் வருமானம் ரூ.2488 கோடி உயர்வு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share