தலைமைத் தேர்தல் ஆணையர் நியமன வழக்கு.. மே 14ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை..!
தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் நியமன வழக்கை மே 14ம் தேதி விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்.
தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களை 2023 சட்டத்தின் கீழ் நியமித்ததற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை மே 14ம் தேதி விசாரணைக்கு எடுப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், தேர்தல் ஆணையர்கள் நியமன வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுக்கக் கோரி வலியுறுத்தியதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த், திபங்கர் தத்தா, உஜ்ஜால் புயான் அமர்வு விசாரணைத் தேதியை இன்று அறிவித்தனர்.
தேர்தல் ஆணையர்களை நியமிப்பது தொடர்பாக கடந்த 2023 உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவுக்கு மாறாக மத்திய அரசு சட்டம் கொண்டு வந்து தேர்தல் ஆணையர்களை நியமித்தது. இதை எதிர்த்து அரசு சாரா தொண்டு நிறுவனமான ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு சார்பில் தாக்கல் செய்த மனுவுக்கு பிரசாந்த் பூஷன் ஆஜராகினார்.
இதையும் படிங்க: ‘கலாச்சார காவலர்கள் வேலையை நீதிமன்றங்கள் செய்யக்கூடாது’.. உயர் நீதிமன்றத்தை கடிந்த உச்ச நீதிமன்றம்..!
கடந்த மார்ச் 19ம் தேதி உச்ச நீதிமன்றம், இந்த வழக்கின் விசாரணையை ஏப்ரல் 16ம் தேதி விசாரிப்போம் எனத் தெரிவித்திருந்தது. ஆனால் பல்வேறு வழக்குகள் இருந்ததால், இந்த வழக்கை மே 14ம் தேதிக்கு விசாரணைக்கு எடுப்பதாக பிரசாந்த் பூஷனிடம் நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்தார்.
தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்திருந்தது. ஆனால் இந்தத் தீர்ப்புக்கு மாறாக சட்டம் இயற்றிய மத்திய அரசு, நியமனக் குழுவில் இருந்து தலைமை நீதிபதியை நீக்கிவிட்டு, பிரதமர் கைநீட்டும் கேபினெட் அமைச்சர் இடம் பெறுவார் என சட்டத்திருத்தம் கொண்டு வந்தது.
இந்த சட்டத்தை எதிர்த்துதான் ஜனநாயக்ததுக்கான சீர்திருத்த அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்த சட்டத்திருத்தத்தைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 17ம் தேதி தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்டார்.
1989ம் ஆண்டு ஐஏஎஸ் பேட்ச் அதிகாரி விவேக் ஜோஷி தேர்தல் ஆணையராக 2031 வரை நியமிக்கப்பட்டார். மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்டத்திருத்தத்தின் கீழ் இந்த இரு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டனர். புதிய சட்டத்தின்படி தேர்தல் ஆணையர்கள் பதவிக்காலம் 6 ஆண்டுகள் அல்லது 65 வயதாக நிர்ணயிக்கப்பட்டு இதில் எது முதலில் வருகிறதோ அடு கணக்கில் எடுக்கப்படும்.
இந்த நியமனத்துக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட மனு மீது உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டநிலையில் விசாரணைக்கு எடுக்கப்படாமல் இருந்தநிலையில் இன்று தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வக்ஃபு சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்யும்.. ப.சிதம்பரம் நம்பிக்கை..!